கொளத்தூர் தொகுதியில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டி? – திமுக எம்.பி., சொன்ன தகவல்

Nov 21, 2026,10:36 AM IST

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 


தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்,பாபு, ஸ்டாலினை விட 8000 க்கும் அதிகமான ஓட்டுக்களை கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஆனால் எம்எல்ஏ.,வாக பதவியேற்ற சில மாதங்களிலேயே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 72 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நவம்பர் 19ம் தேதியன்று வி.எஸ்.பாபு உயிரிழந்தார். 


தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் மறைவை அடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கொளத்தூர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "கொளத்தூர் தொகுதி என்பது எப்போதும் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகும். அங்கு அவர் மீண்டும் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவரே வெளியிடுவார்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.   




தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "'எங்கே காணோம் என்று சொல்பவர்களுக்கு, வந்துவிட்டேன் என்று சொல்லு' என்ற பாணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். திமுக தலைவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என்பது ஒரு கட்சித் தொண்டனாக எங்களின் ஆசையாகும்" எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.   


கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலின் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் இடைத்தேர்தலிலும் அவர் கொளத்தூரிலேயே போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதிக்கு மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.


ஆனால் கொளத்தூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டு, வெற்றி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு திரும்ப வர வேண்டும் என்பதே திமுக தொண்டன் ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை மற்றும் வயது காரணமாக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அவர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியது போல் இறுதி முடிவை மு.க.ஸ்டாலினே எடுப்பார் என சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்