- ஜெயபாரதி மதிவாணன்
ஏற்கெனவே சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள மதுரையின் நாளங்காடி, அல்லங்காடி ஆகியவற்றை "தூங்காநகரம்" என்ற தலைப்பில் பார்த்தோம்.
அதே மதுரையின் கடைவீதியை கோவலன் பார்த்ததைச் சிலப்பதிகாரம் அழகாக எடுத்துரைக்கிறது. அக்கால மதுரையின் அங்காடி வீதிகளில் என்னென்ன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன என்பதைப் பார்ப்போமா?
மூடுவண்டிகள், இரட்டை உருளைகளைக் கொண்ட பாண்டில்கள் (பாண்டில் என்பது தேர்), மணிகள் பதித்த தேரின் கொடிஞ்சி, உடல் முழுவதையும் பாதுகாக்கும் கவசங்கள், விருப்பத்தைத் தூண்டும் மணிகள் பதித்த தோட்டி என்னும் ஆயுதம், தோலால் செய்யப்பட்ட கைத்தாளம், அரைப் பட்டிகை (இன்றைய பெல்ட் போன்றது), வளைதடிகள், வெண்சாமரங்கள், பன்றியின் முகம் போன்ற வடிவமைப்புடைய கடகங்கள், கேடயங்கள், கானப்படங்கள், முத்துகள் பதிக்கப்பட்ட குத்துக்கோல்கள் எனப் பலவகையான பொருட்கள் அங்கே விற்பனைக்குக் குவிந்திருந்தன.
மேலும், செம்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பொருட்கள், கயிற்றால் பின்னப்பட்ட பொருட்கள், மாலையாகக் கோத்துக் கட்டப்பட்ட அணிகலன்கள், ஈர்வாள் போன்ற கருவிகள், தந்தத்தால் செதுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள், நறுமணப் புகைக்கான பொருட்கள், சந்தனக் குழம்பு தயாரிப்பதற்கான பொருட்கள், பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் எனப் பலவிதமான பொருட்கள் நிறைந்திருந்தன.

இவ்வாறு பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் விரும்பி வந்து வாங்கும் அளவுக்கு வளமும் செல்வச் செழிப்பும் நிறைந்திருந்த மதுரையின் அங்காடி வீதிகளை கோவலன் கண்டு வியந்தான்.
இதனை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில்,
"வையமும் பாண்டிலும் மணித் தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
அதள்புனை அரணமும் அரியா யோகமும்.........
.........வகை தெரிவரியா வளந்தலை மயங்கிய
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்..........."
என்று அழகாகப் பாடியுள்ளார்.
எத்தனை வகையான பொருட்கள்! எவ்வளவு செழிப்பான வணிகம்! அன்றைய மதுரையின் கடைவீதிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் இளங்கோ அடிகள். மாங்குடி மருதனாரும் இளங்கோ அடிகளும் மதுரையை வெறுமனே பார்த்துச் செல்லவில்லை; அதன் அழகையும், செல்வச் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறையையும் ஆழ்ந்து ரசித்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை வகையான பொருட்கள் நிறைந்த வணிக மையமாக மதுரை விளங்கியிருக்கிறது என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது!
(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர். கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)
வகை வகையான வணிகம்.. மலைக்க வைத்த மதுரை நகர அங்காடி வீதி!
Short Story: சக்கரை!
விநாயகர் துதி
மனிதன் மாறி விட்டான்.. ஆனால் தொன்மை மாறலையே!
கண்ணுக்குத் தெரியாத காற்று கையில் பிடிக்க முடியாத மேகம்!
மௌன சபதம்
பிரபஞ்சம் என்றால் என்ன.. எண்ணம் போல் வாழ்க்கை (2)
அரசமரம் துளிர்த்தது… கடன் சுமை குறைந்ததா?.. வேரில் இருந்து விழுது வரை (7)
கைப்பேசியில் கரைகிறது மனமே?
{{comments.comment}}