- மடிப்பாக்கம் பிரபாவதி
"சக்கரையாம், சக்கரை, பேர் வச்சுருக்காங்க பாரு. பாவம் போல ஒரு மூஞ்சி". இது கணவர் ஆதிமூலம்.
"எனக்கு பாத்தாலே கடுப்பா இருக்குமா. எங்கேர்ந்து புடிச்ச இவன" இது சதீஷ். மகன்.
"சொன்னத அப்பிடியே மாத்தி பண்ணிட்டு வராம்மா, ஐயோ எரிச்சலா வருது" இது சுதா. மகள்.
யாரந்த சக்கரை? வேற யாரும் இல்ல. கூடமாட ஒத்தாசைக்கு அப்பா கிராமத்திலேந்து அனுப்பி வச்ச ஒரு இருபத்தி ஐந்து வயது வெள்ளை மனசுக்காரன்.
முந்தாநாள் அப்பிடித்தான் சுதா தட்டுல உப்மாவை வைச்சு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். வேகமாக வந்தான். ஓங்கித் தட்டின் மீது ஒரு அறை விட்டான். மொத்த உப்புமாவும் அறை முழுவதும் சிதறியது.
கையில் இருந்த புத்தகம் கீழே விழ, கச்சப் டாப் மீது கொட்டி, அப்பிடியே ஆவேசமாய் நின்று கத்தினாள். "சக்க்க்கரை" என்ன பன்ற?

"விடுவேனா, யாருகிட்ட, என்கிட்டியேவா? போட்டேன்ல்ல" என்றான். அடி நுனி புரியவில்லை. அறை வாசலில் பாத்த கொசுவை சுதா உப்மா தட்டின் மேல பறக்கும் போது வீரதீரமாக அடித்து நசுக்கி போட்டுவிட்டான்.
சாதாரணமாக நிற்கிறான். சத்தம் கேட்டு வந்த பார்வதி அதிர்ந்து போனாள். கொசு அடித்த கதையை குடும்பத்துடன் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசி சிரித்தனர்.
வேறென்ன செய்வது. எல்லாத்தையும் செஞ்சிட்டு அப்பாவியாய் பதில் சொல்வது இவர்களுக்கு வாடிக்கையானது.
காய் வாங்க அனுப்பியிருந்தபோது நடந்ததை கேளுங்க கொஞ்சம். கத்தரிக்காயும் தக்காளியும் வாங்கி வரச் சொன்னாள்.
மறுநாள் சக்கரை வாங்கி வந்த கத்தரிக் காய்களை சமைக்க எடுத்தாள் பார்வதி. ஒரு பத்து காய்தான் இருந்தது. கொஞ்சமாக இருக்கே என்று "ஏம்ப்பா சக்கரை, எவ்வளோ வாங்கின? கொஞ்சமா இருக்கு" என்றாள்.
"அவளதாம்மா இருந்துச்சு " என்றான்.
பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. பையை பிரித்தாள். கத்தரிக்காய் எல்லாமே ஓட்டையும் பொத்தலுமாய்! அதிர்ந்தாள்.
"என்ன காய் வாங்கிருக்க சக்கரை"? அவள் கேட்டதும் "கத்திரிக்கா மா" என்றான்.
"ஓன் மூஞ்சி, அத்தனையும் பூச்சி, இதப்போய் எப்பிடி வாங்கின"? என்றாள்.
"நீங்கதானமா பூச்சி இருக்கான்னு பாத்து வாங்கச் சொன்னீங்க" என்றான்.
தலையில் கை வைத்துக் கொண்டு அப்பிடியே நிலை குலைந்து அமர்ந்தாள் பார்வதி. இதோ ஃபிரிட்ஜில் தண்ணி எடுக்க வந்த சதீஷ், "என்னம்மா இது? செவப்பா தண்ணி மாதிரி ஏதோ ஒழுகுது மா" என்று கத்தினான்.
பார்வதி வேகமாக வந்து பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. "முதல்ல இது எங்கருந்து வருது பாரு? என்றாள் மகனிடம்.
இருவரும் நோண்டியெடுத்து பார்க்கும்போது ஒரு கவரில் தக்காளி இருந்தது. அதிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது.
"சக்கரஅஅஅ" கத்தினாள் பார்வதி.
துணி காயப்போட்டுக் கொண்டிருந்தவன் மாடியிலிருந்து ஈரத்துணியை அப்படியே சுருட்டி கீழே போட்டுவிட்டு ஓடி வந்தான்.
"என்னடா இது? தக்காளியெல்லாம் பிஞ்ச மாதிரி இருக்கு, சாரெல்லாம் வழிஞ்சு போகுது. என்னடாஆஆஆ இது? நொந்து போனாள்.
இந்த அமக்களத்தைக் காண சுதாவும் ஓடி வந்தாள்.
"என்னம்மா இது நீங்கதானே சொன்னீங்க, காய் வாங்கும்போது நகத்தால குத்திப்பாத்து வாங்கணும்னு. தக்காளியெல்லாம் குத்திப்பாத்து வாங்குனேன்" என்றான்.
பார்வதி, சதீஷ் மற்றும் சுதா மூவருக்கும் சக்கரையை எதாவது செய்ய வேண்டும் போல் கைகள் பரபரத்தன. பார்வதி அவள் அப்பாவை திட்டி தீர்த்தாள்.
"பாரூஊஊஊஊ" அலறினார் ஆதிமூலம். மூவரும் விரைந்தனர்.
பார்வதியின் ஈரப் புடவையை தலை மேலே, தோள் மேலே, கோட் மேலே என்று சுற்றிக்கொண்டு ஒற்றைக்கண் தெரிய நின்று கொண்டிருந்தார் ஆதிமூலம்!
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)
Short Story: சக்கரை!
விநாயகர் துதி
மனிதன் மாறி விட்டான்.. ஆனால் தொன்மை மாறலையே!
கண்ணுக்குத் தெரியாத காற்று கையில் பிடிக்க முடியாத மேகம்!
மௌன சபதம்
பிரபஞ்சம் என்றால் என்ன.. எண்ணம் போல் வாழ்க்கை (2)
அரசமரம் துளிர்த்தது… கடன் சுமை குறைந்ததா?.. வேரில் இருந்து விழுது வரை (7)
கைப்பேசியில் கரைகிறது மனமே?
தம்பி – என் இதயத்தின் செல்லக் குழந்தை.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (17)கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை
{{comments.comment}}