தம்பி – என் இதயத்தின் செல்லக் குழந்தை.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (17)கொட்டும் மழை .. கொஞ்சும் மேகலை

Nov 20, 2026,01:06 PM IST

- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்


வீட்டில் பிறந்த செல்ல உறவு,

வாழ்வில் கிடைத்த அழகிய வரவு!

சின்னச் சின்ன குறும்புகள் செய்து,

சிரிப்பைத் தரும் அன்பின் உறவு!


சண்டைகள் வந்தாலும் சிரித்திடுவான்,

சந்தோஷம் வந்தால் பகிர்ந்திடுவான்!

அக்காவின் முகத்தில் மகிழ்ச்சி காண,

ஆயிரம் வழிகள் தேடிடுவான்!


வயதில் சிறியவன் என்றாலும்,

அன்பில் என்றும் பெரியவன்!

சில நேரம் குழந்தையாய் மாறி,

சில நேரம் தோழனாய் நிற்பவன்!


அம்மாவின் செல்லப் பிள்ளையாக,

அப்பாவின் நம்பிக்கையாக,

குடும்பத்தின் மகிழ்ச்சிப் பூவாக,

வீட்டையே அழகாக்கும் உறவாக!




அக்காவின் சின்னச் சின்ன ஆசைகளை,

அழகாக நினைவில் வைத்திருப்பான்!

அவள் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்,

தன் வெற்றியென எண்ணி மகிழ்ந்திருப்பான்!


காலங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும்,

குழந்தைப் பருவம் மறையாது!

வயதுகள் மாறிக் கொண்டிருந்தாலும்,

உடன்பிறப்பின் பாசம் குறையாது!


அக்கா என்றால் அன்பு கிடைக்கும்,

தம்பி என்றால் துணையும் கிடைக்கும்!

இரு இதயங்கள் வேறாக இருந்தாலும்,

ஒரே பாசத்தில் இணைந்திருக்கும்!


தம்பி…


உன் கனவுகள் வானைத் தொடட்டும்,

உன் முயற்சிகள் வெற்றியைத் தரட்டும்!

உன் பாதையில் மகிழ்ச்சி மலரட்டும்,

உன் வாழ்வில் நன்மைகள் நிறையட்டும்!


மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால்,

மீண்டும் உன் அக்காவாகப் பிறக்க வேண்டும்!

இந்தப் பிறவியில் கிடைத்த பாசத்தை,

எல்லாப் பிறவியிலும் தொடர வேண்டும்!


நீ என் தம்பி மட்டுமல்ல…

என் வீட்டின் சின்ன மகிழ்ச்சி!

என் நினைவுகளின் இனிய பரிசு!

என் வாழ்நாள் முழுவதும் தொடரும்

அன்பின் அழகான உறவு! 


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்