தென்தமிழ் தலையங்கம்: ஒரு ‘ஹலோ’ போதும்.. உள்ளம் லேசாகும் .. உலகம் அழகாகும்!

Nov 21, 2026,10:01 AM IST

- சு.தா.அறிவழகன்


ஹாய்.. ஹலோ குட்மார்னிங்!


அதிகாலை அலாரம் அடிப்பதில் தொடங்கி, இரவு டிவி + செல்போனை ஆஃப் செய்வது வரை நம்ம வாழ்க்கை ஒரு இடைவிடாத ஓட்டமாக மாறிவிட்டது. நாம எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கோம்னே தெரியலையே என்று வடிவேலு பாணியில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் அளவில்தான் வாழ்க்கை விரைந்து நகர்ந்து கொண்டிருக்கிறது.


சாலையோர நடைபாதையில் எதிர்ப்படும் முகம் தெரிந்தவர், லிஃப்ட்டில் உடன் வரும் அண்டை வீட்டார், அலுவலகத்தில் அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் எனப் பலரையும் நாம் 'பார்க்கிறோம்'; ஆனால் 'பார்ப்பதில்லை'. கைபேசியில் மூழ்கிய கண்களும், காதுகளில் செருகப்பட்ட இயர்போன்களும் நம்மைச் சுற்றி ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவரைக் கட்டி எழுப்பிவிட்டன.


இப்படிப்பட்ட இயந்திரமயமான வாழ்க்கையை சற்றே இலகுவாக்கத்தான் எத்தனையோ விஷயங்களை விதம் விதமான "தினங்களாக" உலகம் கொண்டாடி வருகிறது. நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளத்தான் இத்தனையும். அந்த வகையில்தான் நவம்பர் 21ம் தேதி உலக ஹலோ தினம் என்று ஒரு கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.


'ஹலோ தினம்' என்ற சிந்தனை நமக்கு ஒரு சிறிய, ஆனால் ஆழமான நினைவூட்டலைத் தருகிறது. 'ஹலோ' என்பது வெறும் ஆங்கிலச் சொல் மட்டுமல்ல; "நான் உன்னைக் கவனிக்கிறேன்", "நீ எனக்கு முக்கியமானவன்/முக்கியமானவள்", "நாம் இணைந்திருக்கிறோம்" "நல்லாருக்கியா.. உன்னைப் பற்றி நினைக்க நான் இருக்கிறேன்" என்ற உணர்வுகளின் எளிய அடையாளம் அது.




நவீன காலம் நமக்கு அத்தனை வேகத்தைக் கொடுத்திருக்கிறது; ஆனால், அந்த வேகத்தில் நாம் தொலைத்துவிட்டது சிறுசிறு மனித நேயத் தருணங்களைத்தான். ஒரு சின்னப் புன்னகையுடன் உதிர்க்கப்படும் 'ஹலோ' எந்தப் பொருட்செலவும் இல்லாதது. ஆனாலும், அது உருவாக்கும் தாக்கம் மிகப்பெரியது. மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு நீங்கள் சொல்லும் அந்த ஹாய் ஹலோ என்ற வார்த்தை ஒரு ஆறுதலாக இருக்கலாம்; புதிய நட்புக்கான முதல் படியாக அமையலாம்; இறுக்கமான சூழலை இலகுவாக்கும் மந்திரமாகவும் மாறலாம்.


சமூகத்தில் பகைமையும், அவநம்பிக்கையும், தனிமையும் தலைதூக்கும்போது, பெரிய மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வருவது கடினமாகத் தோன்றலாம். ஆனால், நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பேசுவதற்கான முதல் கதவைத் திறப்பது மிக எளிது. அந்தக் கதவின் தாழ்ப்பாளைத் திறக்கும் முதல் சாவிதான் 'ஹலோ'.


இன்றைய 'ஹலோ தினம்' நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான் - உங்களுக்கு முன்பு நீங்களே போட்டுக் கொண்டுள்ள திரையைச் சற்று விலக்கி வைத்துவிட்டு, நிஜ மனிதர்களைப் பாருங்கள். ஒரு தயக்கமும் இன்றி, ஒரு கர்வமும் இன்றி, ஓர் அன்பான 'ஹலோ' சொல்லிப் பாருங்கள். அந்த ஒற்றை வார்த்தையில், நம் உலகம் இன்னும் கொஞ்சம் அழகாகவும், உள்ளம் லேசாகவும் மாறுவதை நிச்சயம் உணர்வீர்கள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்