கல்விப் பணியில் ஒரு சாதனைப் பயணம்.. மாணவர்களை பட்டை தீட்டும் எஸ். மஞ்சு பார்கவி!

Su.tha Arivalagan
Feb 10, 2026,04:24 PM IST

சென்னை:  கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல, அது ஒரு மாணவனின் வாழ்க்கையை மாற்றும் உன்னத கருவி என்பதைத் தனது அர்ப்பணிப்புள்ள பணியால் நிரூபித்து வருகிறார் எஸ். மஞ்சு பார்கவி.


ஆவடி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் இவரது பயணம், ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு உத்வேகம்.


2004-ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கிய இவர், தனது திறமையால் 2012-இல் பட்டதாரி ஆசிரியராக (ஆங்கிலம்) பதவி உயர்வு பெற்றார். ஆனந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய பின், 2014 முதல் ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தனது சேவையைத் தொடர்ந்து வருகிறார்.




ஆங்கிலப் பாடம் என்றாலே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்கி, சாதனைகளைச் சரித்திரமாக்கியுள்ளார் மஞ்சு பார்கவி.


2016-ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 100% தேர்ச்சி பெற்றுத் தந்துள்ளார்.


2024-2025 கல்வியாண்டில் இவரது மாணவர் ஒருவர் 98 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மேலும், 15 மாணவர்கள் 90-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.




ஆண்டுதோறும் இவரது பாடத்தின் சராசரி மதிப்பெண் 75%-க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.


மாணவர்களை உற்சாகப்படுத்த, ஆங்கிலப் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கிறார்.


ஒரு ஆசிரியராகப் பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் இவர் மிகுந்த அக்கறை காட்டுகிறார். இவரது சீரிய முயற்சியால் பள்ளியின் மாணவர் சேர்க்கை 125-லிருந்து 421 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக, பொது இடங்களிலும் வாட்ஸ்அப் வழியாகவும் வகுப்புகளை நடத்தினார். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்காக பள்ளி நேரத்திற்குப் பிறகு சிறப்புக் கால வகுப்புகளை எடுத்து வருகிறார்.



மாணவர்கள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்றுகளை நடும் பழக்கத்தை ஊக்குவிக்கிறார். மேலும், மாணவர்களை ஆங்கிலத்தில் பேசத் தூண்டுவதன் மூலம் அவர்களின் ஆளுமையை மேம்படுத்துகிறார்.


இவரது வழிகாட்டுதலால் மாணவர்கள் மாவட்ட அளவிலான ஆங்கில இலக்கிய மன்றப் போட்டிகள் மற்றும் NMMS தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.


ஆசிரியர் மஞ்சு பார்கவியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் இவரை கௌரவித்துள்ளன:


2016 முதல் மாவட்ட கல்வித்துறை மற்றும் ஆசிரியர் சங்க அமைப்புகளிடம் இருந்து பெற்று வருகிறார்.




லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் வழங்கிய சிறந்த ஆசிரியை விருது செப்டம்பர் 2022ல் கிடைத்துள்ளது.


தொழில்முறை சிறப்பு விருதினை சென்னை பட்னா ரோட்டரி கிளப், செப்டம்பர் 2023ல் வழங்கிக் கெளரவித்துள்ளது.


தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு, பள்ளி மேலாண்மை, சக ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார். "ஒவ்வொரு மாணவனையும் அவர்களின் சிறந்த நிலையை அடையச் செய்வதே ஒரு ஆசிரியரின் உண்மையான வெற்றி" என்பதே இவரது தாரக மந்திரம்.


மஞ்சு பார்கவி அவர்களின் இப்பணி மென்மேலும் சிறந்து, பல நூறு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வாழ்த்துகிறோம்!