கடன் மாற்றும் தடம்

Su.tha Arivalagan
Oct 04, 2025,04:58 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


சரியான தேர்வை செய்யாததினால் 

சேர்ந்தது பெரும் துயரம் 

திடமான திட்டம் தீட்டாததினால் 

தவறியது வாழ்வின் பயணம் 


பட்ட கடனால், 

தடம் புரண்டான், இடம் பெயர்ந்தான்  

குடும்பச் சுமை கூடியது, சுவை குன்றியது  


கோடை வெய்யில் குறையாதா ?

ஆடிக்காற்றும் தான் வீசாதா ?” என்று தினம் பார்த்திருந்தான் 


கட்டம் சரியில்லை என்றார் ஜோதிடர் 

கொட்டம் அடங்கியது என்றனர் சிலர்


செல்வம் இல்லா சூழலில் 

அவன் சொல்லிற்கும் மதிப்பில்லை 

கனவிற்கும் துணிவில்லை 




அவன் யோசனைகளை கேட்பாருமில்லை 

அவன் யாசிப்பதை கொடுப்பாரும் இல்லை 

யாழ் இசையும் இனிக்கவில்லை 

யாவரும் அவனை கவனிக்கவில்லை 


தலை குனிந்தான் அப்பொழுதுதான் 

தாழ்பாளை திறந்தான்,  தன் அகத்தை  கண்டான்


எண்ணிலடுங்கா வழிகள் தென்பட்டன, விழிகள் விரிந்தன 

எண்ணங்கள் எழுத்தாயின, எழுத்துக்கள் ஈட்டின

இழந்த செல்வதை மீட்டினான், மீண்டும் தலை காட்டினான்!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)