அவன்தான் பிடி உஸ் உஸ்...!
- யாழ் தண்விகா
கண்கள் இரண்டும் விழிபிதுங்கி
பற்கள் வெளித்தெறிய
பிடரி மயிர்கள் பறக்க
வெள்ளை நிற குதிரையில்
கண்ணெதிரே பார்த்திடாத உயரத்தில்
கடுஞ்சினத்துடன்
கையில் அரிவாளை ஏந்தி
அருகே வேட்டை நாய்களின் துணையுடன்
பட்டுச்சரிகை வேட்டி கட்டி
பட்டால் துண்டும் கட்டி
வீற்றிருக்கும் வீச்சுக்கருப்பண்ணசாமிக்கு
திருவிழா நாட்களில்
அபிஷேகம் ஆராதனை படையல்
என்று அமர்க்களப்படும்.
கோவிலைச் சுற்றி பக்தி பரவசமாக காட்சியளிக்கும்.
என்ன மாயமோ
அவரிடம்
நல்லவர்களும் வேண்டுவார்கள் கெட்டவர்களும் வேண்டுவார்கள்.
நினைப்பவர்கள் இரவுகளில்
அந்த திசையைப் பாராமல்
கும்பிடுவதுடன் சரி.
விசேஷம் எதுவுமற்ற காலங்களில்
காற்றின் மிதப்பில்
இருப்பார் சாமி.
சிலைக்கு நேர் எதிரே உள்ள
சாலையில் சிலை இருப்பதை
அறியாது
சென்று கொண்டு இருந்தனர்
கற்பழிப்பு கொலை கொள்ளை
இன்னும் சொல்லவியலா பித்தலாட்டத்தனங்களை அரங்கேற்றியவர்கள் எல்லோரும்.
ஒரே திசையில்
எல்லோரையும் பார்த்தபடி இருக்கும்
குதிரையில் வீற்றிருப்பவர் குறைந்தபட்சம்
அந்த நாயை அனுப்பியாவது
அவர்களை ஏதாவது செய்திருக்கலாம்.
(கவிஞர் யாழ் தண்விகா, அரசுப் பள்ளி ஆசிரியர். எட்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் இவரது சொந்த ஊர்)