- பூ. புவனா
ஆபிஸிலிருந்து வீடு வந்து சேர்ந்த புவனிக்கு 'அப்பாடா என்றிருந்தது. காலையில் ஆபிஸ் போகிற அவசரத்தில் சரியாக்கூட சாப்பிட முடியவில்லை. டிபன் பாக்ஸில் அடைத்து எடுத்துச்சென்ற இட்லியையும் மறக்கடிக்கும் அளவிற்கு அப்படியொரு வேலைப்பளு போட்டு படுத்தியது.
ஒருவழியாக 6 மணிக்கு தான் மேனேஜர் கொடுத்த கம்பெனி பைலை சரிபார்த்து கொடுக்க முடிந்தது. பக்கத்து டேபிள்களில் இருந்தவர்கள் எப்போதோ கிளம்பி சென்றிருந்தனர் கடைசியாக வீடு திரும்பியவளுக்கு வீட்டுக்குள் வந்ததும் மீண்டும் கண்ணை சுழற்றியது. கழற்றிபோட்ட நைட்டி, ஜாக்கெட் போட்டது போட்டபடி கிடந்தது.
பசி மயக்கத்திலும் அவற்றை எல்லாம் வாரியெடுத்து வாஷிங் மிஷினருகே வைத்தவள் மிஷினையே சற்றுநேரம் வெறித்து பார்த்தவள் 'உன்னைப்போல நானும் மிஷினாகி விட்டேன்' எதற்காக பிறந்தோம் என்பதே தெரியவில்லை. ஆச்சு...15 வருஷத்துக்கு முன்பு கிருஷ்ணன் கோயிலில் கண்ணன் தாலிகட்டி அழைத்து வந்தபோது சந்தோஷமாக இருந்தது.
ஒரு பிக்கல் பிடுங்கல் கிடையாது. கண்ணன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. கூட பிறந்தவர்கள் கிடையாது. அதனால் ஆசை ஆசையாய் வீட்டை கட்டி ஆண்ட புவனிக்கு வாரிசு கொடுப்பினை மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை. போகாத ஆஸ்பத்திரி இல்லை. வேண்டாத கோயில் இல்லை. ஏதாவது விஷேத்துக்கு போனால், இன்னும் ஒண்ணும் இல்லையா என உதட்டை சுழித்து கண்களால் கேள்வி கேட்கும் சொந்த பந்தங்களால் துரியோதனன் சபையில் நிற்பது போல இருக்கும்.
உடனிருக்கும் இவளது நிலையை உணர்ந்த கண்ணன் கண்களால் சாந்தப்படுத்துவான். 'விடம்மா'..என சிரிப்பான். அப்போது கவுரவர் சபையில் பாஞ்சாலி மானம் காத்த கண்ணனாகவே தெரியும். அவனுக்குள்ளும் மெல்ல சோகம் நெளிந்தோடுவது புவனிக்கு தெரியும். நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்னு உள்ளம் சொல்ல விழியோரம் கண்ணீர் எட்டிப்பார்க்கும்.
அட்டா...ஒரு காபி கூட போடாம உட்கார்ந்துட்டியேம்மா...என்ற மாமியார் மங்களம் சொம்பு நிறைய தண்ணீரோடு அவளை நெருங்கினாள். உன் முகம் சரியில்லே. ஜில்லுன்னு இந்த தண்ணிய குடி. நான் ஹாலை ஒழுங்கு பண்றேன். எனக்கும் ஒரு காபி கிடைக்குமா என கண் சிமிட்டிய மாமியாரை அப்படியே கட்டியணைத்து கொண்ட புவனிக்குக் களைப்பெல்லாம் பறந்து போனது போலிருந்தது.
எனக்கு இன்னொரு அம்மா இவர். கண்ணனே ரொம்ப நாள் தவத்துக்கு பிறகு தான் பிறந்தான். உனக்கும் அப்படி இருந்தால் யாரை என்ன சொல்வதாம். நான் உன்ன நம்புறேன் தாயி. எப்படியும் ஒரு பேரனோ, பேத்தியோ கையில் தூக்கிட்டு தான் என் உயிர் போகும். போ...காபி முக்கியம்மா என்றவரின் நெற்றியில் செல்லமாக தட்டியவாறு சடாரென எழுந்தவள் பம்பரமாக சுழன்றாள். பத்து நிமிடத்தில் ஹால், கிச்சன், வாசல் பளீரிட்டது. அய்யோ...டிபன் பாக்ஸ்ல காலையில் அடைச்ச இட்லி என்னவாச்சோ என கைப்பையில் துழாவி திறந்தவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. சூடாக வைத்து மூடி, கொஞ்சம் சாம்பார், சட்னியை ஊற்றி மூடியதால் ஒரு வாடை கிளம்பி வாசல்வரை எட்டிப்பார்த்தது.
ஸ்கூட்டர் வந்தாச்சு. புவனி வேலை பார்க்கும் அலுவலகம் அருகே தான் கண்ணன் வேலை பார்க்கும் நிறுவனமும் உள்ளது. அது ஒரு பால் பவுடர் தயாரிப்பு கம்பெனி. நமக்கு குழந்தை பிறந்தால் பால் பவுடர் நம்ம செலவு என கல்யாணம் ஆன புதிதில் கிண்டலடித்தவன், இப்போதெல்லாம் அதுகுறித்து பேசுவதில்லை. ஆனாலும் புவனியை விட்டு கொடுக்க மாட்டான். கணவனும் மாமியாரும் இல்லாவிட்டால் என் நிலைமையை நினைத்து பார்க்க முடியாது. அம்மா. அப்பாவும் அவ்வப்போது வந்துவிட்டு போவார்கள். மனச விட்டுராதே.. நல்லதே நடக்கும் என அம்மா கண் கலங்கி தலையை கோதுகையில் குழந்தையாகவே இருந்திருக்கலாமோன்னு தோணும்.
கண்ணனும் கை,கால், முகம் கழுவி வந்தவன் காபி வேண்டாம். டிபனே சாப்பிட்டுக்கிறேன் என்றவனை ஏறிட்டு பார்த்தவளிடம், வரும்போது ரொம்ப நாள் கழிச்சு ஒரு நண்பனை பார்த்தேன். அவனோட காபி சாப்பிட்டேன். நான்கைந்து குழந்தையாம் அவனுக்கு எனக்கு புவனின்னு ஒரு பொண்ணு இருக்கான்னு ஒண்ணத்தான் சொன்னேன் என்றவனின் காலைக்கட்டிக்கொண்டு தேம்பியவளின் முகத்தை கையில் ஏந்திய கண்ணன் புவனிக்கு விஸ்வரூப கண்ணனாக தெரிந்தான்.
ஹலோ மேம் கிளம்புங்க.. எனக்கு பசிக்குது.. தோசைய நீங்களே ஊத்திக்கோங்கன்னு நழுவினா நான் கண்ணனா இருக்க மாட்டேன், என்றவனின் கன்னத்தை வலிக்காமல் நிமிண்டியவாறு எழுந்தவள், புடவையை தூக்கி செருகியவாறு கிச்சனுக்குள் சென்றாள். அதற்குள் மாமியார் தோசைமாவை எடுத்து ஸ்டவ் பக்கத்திலேயே வைத்திருந்தார். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல் வைத்து சட்னி ரெடி பண்ணிய வேகத்தில் ஸ்டவை பற்ற வைத்து பத்து நிமிடத்தில் தோசையும் கொடுத்து விட்டாள்.
லேசாக ஆவின் நெய்விட்டு தோசையை முறுகலாக எடுத்துக்கொடுத்தால் போதும் கொஞ்சமாக மிளகாய் பொடி தூவி கொடுத்தால் ரெண்டு தோசை கூடுதலாக கேட்கும் கண்ணன் முன்பாக சுடச்சுட தோசையோடு நின்றாள். சோபாவில் இருந்தவாறு டிவியில் லயித்திருந்தவன் புவனியை பார்த்தான். என்ன பார்வை...தோசை ஆறிடப்போகுது...சாப்பிடுங்க... இன்னும் வேலை கிடக்கு என்றவளிடம் தட்டை வாங்கிய கண்ணனுக்கு நிஜமாகவே பசி போலிருக்கு. பாதி தோசையை பிட்டு சட்னி, பொடியில் தோய்த்தெடுத்தவன் அப்படியே வாயில் போட்டுக்கொண்டான்.
புவனி, உன் தோசைக்கு நான் அடிமை. என்ன வரம் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் இன்னும் ரெண்டு தோசை வேண்டும் என்றவனுக்காக கிச்சனுக்குள் ஓடியவள் தோசையோடு வந்தாள். உன் வேகத்தை பார்த்தா புரியலேம்மா..என்ன வேணும் என்றவனின் அருகில் அமர்ந்தவள் பிள்ளை வரமருளும் பிள்ளையார் கோயில், அரச மரத்துக்கு 108 சுற்று பற்றி பங்கஜம் மாமி சொன்னதை அட்சரம் பிசகாமல் ஒப்பித்தாள். காலையில் வெறும் வயிற்றோடு போய் எப்படி அரச மரத்தை சுத்த முடியும். அந்த மாமிக்கு பெண் பிள்ளைகள் இல்லையா என குரலை உயர்த்தியவனை தோள்தொட்டு அமர்த்தினாள்.
வாழ்க்கை வண்டி நம்பிக்கைங்கிற அச்சாணியில தானே ஓடிக்கிட்டு இருக்கு. மாமியும் மேனேஜர் போஸ்டிங்கில் இருக்கிறார். படித்தவள். புத்திசாலி. அலுவலகத்தில் என்னிடம் மட்டும் தான் நெருக்கம். அவங்க சொந்ததிலே ஒருத்தர் இந்த கோயிலில் வேண்டுதல் நிறைவேற்றி வாரிசு பொறந்ததா சொல்லி என்னையும் போக சொல்லியிருக்காங்க. நீங்க கூட வரலேன்னாலும் பரவாயில்லே, அனுமதி தரணும். ஆபிஸில் பர்மிஷன் வாங்கிட்டேன் என்றவளிடம், நான் தடை சொல்லலே. அங்கே போயி சுருண்டு விழுந்தா யார் பார்ப்பாங்கன்னுதான் தயங்குறேன், என்றவனிடம் ஒருவழியாக உத்தரவு பெற்றவளுக்கு தூக்கம் வரவில்லை.
கோயில் நினைப்பாகவே இருந்தது.
பங்கஜம் மாமி சொன்னதெல்லாம் வரிசையாக மனசுக்குள் சக்கரம் கட்டி ஓடியது.பாரு புவனி, இதுவும் விரதம் மாதிரி தான் தினமும் அரைக்கீரை, முளைக்கீரைன்னு நிறைய சேர்த்துக்கணும். முருங்கைக்கீரை, பழங்கள் முக்கியம்.
வீட்டுல புருஷன் கூட மனளஸ்தாபம் கூடாது. அன்பா நடந்துக்கனும். அதிர்ந்து நடக்கறது. படபடக்கிறது வேணாம். எதுவாயிருந்தாலும் பொறுமையாக இருக்க பழகிக்கோ எம்எஸ்வி கீர்த்தனைகள் கேளு. மனசு லேசாகும். லதா மங்கேஷ்கர், சுசீலா, ஜானகி மெல்லிசையெல்லாம் கேட்டு லயிக்கணும் என்ற மாமியின் அக்கறை 'டிப்ஸ்'அவளை அறியாமல் தூங்க வைத்தது.
திடீரென அலாரம் அடிக்க புரண்டு படுத்தவள் அடடா நேரத்துக்கு கோயிலுக்கு கிளம்பனுமே' என வாரி சுருட்டி எழுந்து பாத்ரூம் புகுந்தாள். பத்து நிமிடத்தில் டவலால் தலை துவட்டி முடித்தவளின் கூந்தலில் வீட்டு சாமி படமருகே இருந்த பூச்சரம் இடம் பெயர்ந்தது.
அலார சத்தத்தை கூட உணராமல் அயர்ந்திருந்த கண்ணனை எழுப்ப மனமின்றி மாமி குறிப்பிட்ட கோயிலை சென்றடைந்தவளுக்கு கோபுர தரிசனம் கோடி புண்ணியத்துக்கு அச்சாரம் போட்டது. மனசுல வச்சுக்கம்மா... அமாவாசை இருக்கும் திங்கட்கிழமை நாளில் பிரகாரம் சுற்றி வரணும்....ஒவ்வொரு தடவை சுத்தி வந்ததும் எடுத்துட்டு போன தட்டுல ஞாபகத்துகாக சாக்லேட் வச்சிக்கிட்டு வரலாம்... உன்னால் முடிந்தவரை சுத்தி வரலாம். மயக்கமா இருந்தா ஓரமா உட்கார்ந்துக்கோ. அவசரமில்லாம மெதுவா சுத்தணும் . சரியா என கேட்டு ஆதரவாய் தோளணைத்த மாமி மீது மரியாதை திடீரென அதிகரித்தது..
கோவில் உள்ளே சென்று கொடிமரம், நந்தி பகவானை வணங்கியவாறு லிங்கேஸ்வரர், அம்பாள் என ஒன்றுவிடாமல் அனைத்து தெய்வங்களையும் ஆராதித்து தொழுது திரும்பியவளுக்கு 'பிள்ளை வரமருளும் பிள்ளையாரை, கண்டதும் அழுகை அழுகையாக வந்தது.
'இத்தன நாளா உன்னை பார்க்காம இருந்துட்டேன் அய்யா. ஆபிஸ் மாமி சொல்லலேன்னா எனக்கு ஒன்ன தெரியாமலே போயிருக்கும். அர்த்தமில்லாம வாழறேன் நான். என ஏதேதோ சொல்லி தேம்பி புலம்பியவளை "நான் இருக்கிறேன்" என கல்லாய் தெரிந்த பிள்ளையார் 'சொல்லாமல் சொன்னது கரும்பாய் இனித்தது. அடுத்தநொடி, சாஷ்டாங்கமாய் அவர் முன்னே விழுந்து எழுந்தவளுக்கு மனசுக்குள் பாரம் குறைந்து நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது. மஞ்சள் குங்குமம் இட்டு மானசீகமாய் வணங்கி முன்னரே எண்ணி வைத்த 108 சாக்லேட் முடிச்சை பற்றிக்கொண்டு வரம் கேட்டு சுற்ற ஆரம்பித்தாள்.. மாமி சொன்னது போல ஒவ்வொரு சாக்லேட்டாக தட்டில் போட்டு வலம் வந்தாள். மனம் ஒரே வேண்டுதலை முணுமுணுக்க சாக்லேட் தட்டு வளர துவங்கியாச்சு. சிந்தை முழுவதும் மழலை செல்வம் கைசேர ஏங்கி தவிக்கையில் கையில் சாக்லேட் கரைய இலகுவாய் வலம் முடித்தாயிற்று...
முதலில் பிரசாதத்தை கணவருடன் இணைந்து உண்ட பிறகு பிள்ளைகளுக்கு கொடுத்தால் ரொம்ப நல்லதென்று மாமி சொன்னாளே.. கண்ணனை அழைத்து வந்திருக்கலாமோ புவனி மனதில் ஏதோ வருடல் . “ஆணை வாய் அகப்பட்ட கரும்பு போல்" தாயே என்று கலங்கிய புவனி கண்ணில் “அத்தி பூத்தாற் போல" சற்றும் எதிர்பாரமல் கண்ணன் பட கண்ணீர் மல்க சிரித்தாள். 108 முறை வலம் வந்தாச்சா ஒன்றும் மயக்கம் வரலயே புவனி என்று அக்கறையுடன் புன்னகைத்தவாறே வந்தான்..... சந்தோஷத்தில் முகம் சிவக்க கண்ணன் முன் தட்டை நீட்டி பிரசாதம் எடுத்துக்க சொல்லி தானும் எடுத்து மனம் உருகி வேண்டி வாயிலிட்டு சுவைத்தாள்.
பிரகாரத்தில் கண்ணில் பட்ட குழந்தைகளுக்கு எல்லாம் இருவரும் இணைந்து பிரசாதம் வழங்கியாச்சு.. மீதம் உள்ளதை மாமி சொன்னதுபோல வெற்றிலைபாக்குடன் சேர்த்து வயதானவர்களுக்கு குறையின்றி கொடுக்க புவனி நெஞ்சம் பூ பந்தாய் லேசானது.
பிராத்தனை முடித்து கோவிலிலிருந்து வாசல் வந்தவளுக்கு அவளை அறியாமல் ஒரு கணம் பிள்ளையாரை திரும்பி பார்க்க அவர் தலை அசைத்து ஆமோதித்தது போல் மெய் சிலிர்த்தது. “எனக்காக இல்லையென்றாலும் உனக்காக" என்ற நம்பிக்கையோடு வீடு திரும்பினாள்...
(பூ.புவனா, பட்டதாரி ஆசிரியர், திருவாரூரைச் சேர்ந்தவர். கொரடாச்சேரி ஒன்றியம் எருக்காட்டூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். 20 வருட கால ஆசிரியப் பணி அனுபவம். ஊக்கப்பரிசுகளால் மாணவர்களை கற்றலில் உற்சாகப்படுத்துவது இவரது தனி சிறப்பு. மாணவர்களுக்காக, தான் சார்ந்த ஊருக்காக பல சேவைகளைப் பணிகளை, நற்செயல்களை செய்துள்ள நல்லாசிரியை.. பல விருதுகளுக்கும் சொந்தக்காரர்.. அதில் உச்சம், அன்றைய முதல்வர் கலைஞர் கரங்களால் வாங்கிய "முதல்வர் விருது")
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}