என்றாலும் முடியும்!
- ஆர்.ரவிச்சந்திரன்
பள்ளியின் ஆண்டு விழாவில் அந்த நகரத்தின் முக்கியமானவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் அரசியல் தலைவர்களும் இருந்தார்கள். கந்தசாமி பல முறை அந்த நகரத்தின் எம்.எல்.ஏ -வாக இருந்தவர்.
அனைத்துக் நிகழ்ச்சிகளும் முடிந்து அடுத்து வந்திருந்த விருந்தினர்கள் பேச வேண்டும். இதுபோன்ற தருணங்களில் அந்தப் பள்ளியின் மாணவி சிறுமி சித்ராவையும் பேச வைப்பது பள்ளியின் வழக்கம்.
சித்ரா பல போட்டிகளில் பரிசுகள் பெற்றவர் என்பது மட்டுமல்ல அவர் முதல்வரின் முன்பாகவும் பேசி பரிசு பெற்றிருக்கிறார். இன்று அவர் பேசியது மொத்த ஆசிரியர்களுக்கும் அசௌகரியத்தைக் கொடுத்தது.
"இங்கு வந்திருக்கும் விருந்தினர்களின் ஒருவர் வீட்டிற்கு முன்பாக உள்ள தார்சாலையில் பல்லம் ஒன்று பல ஆண்டுகளாக உள்ளது. மழை காலங்களில் அந்தப் பல்லத்தில் வாகனங்கள் செல்லும்போது தண்ணீர் பக்கத்தில் உள்ளவர்கள் மேல் அடிக்கும். மற்றய சமயங்களில் வாகனங்கள் அதில் விழுந்து எழுந்து ஆடிச் செல்லும். நான் காலையில் மூன்று மூட்டை ஜல்லி, இரண்டு மூட்டை மணல், அரை மூட்டை சிமெண்ட் அதில் கொட்டி நிரப்பி விட்டு இங்கு வந்திருக்கிறேன். இதைச் செய்வற்கு நான் யாருடைய உதவியையும் நாடவில்லை. இங்கு எல்லாவற்றையும் நாம் மாற்ற முடியாது. நம்மால் முடிந்ததை நாம் செய்யலாம்."
இப்படியாக அவர் பேசப்பேச அங்கு எல்லோருக்கும் அவர் யாரைப் பேசுகிறார் என்பது தெளிவாக புரிந்தது. அதைவிட அதிகப் பிரசிங்கித்தனமாக பேசுவதாக தலைமை ஆசிரியர் நினைத்து. சித்ராவின் வகுப்பு ஆசிரியரை முறைத்தார்.
கந்தசாமி அவர்கள் பேசும்போது," எல்லோரும் மாறினால் தான் இங்கு மாற்றங்களை நிகழ்த்த முடியும். ஆனால் குறைந்த பட்சம் நம்மால் முடிந்த மாற்றங்களை நாம் நிகழ்த்த முடியும் என்பதை சித்ரா எனக்குப் புரிய வைத்து விட்டார். குழந்தை சித்ராவின் செயல் என்னை வியக்க வைத்தது. இங்கு எதையும் நம்மால் பெரிதாக மாற்ற முடியாதுதான்.ஆனால் குறைந்தபட்ச சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது. அதை நான் இனி நிச்சயமாக செய்வேன். நன்றி சித்ரா."
கந்தசாமி சித்ராவைப் பாராட்டி பணம் கொடுத்தார். அதை அவர் பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு கொடுத்துவிட்டார்.
(கதாசிரியர்: ஆர்.ரவிச்சந்திரன், பிஇ, எம்பிஏ, பட்டுக்கோட்டை, தொடர்பு கொள்ள.. ravialladhu@gmail.com)