நிலக்கடலை அக்கா!
- ந. தீபலட்சுமி
சின்ன சின்ன கடலை!
சிங்கார கடலை!
முத்து முத்து கடலை!
முத்தான கடலை!
கொத்து கொத்து கடலை!
கொத்தான கடலை!
சத்து சத்து கடலை!
சத்தான கடலை!
வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் கோர்வையாக்கிப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், துள்ளி குதித்துக் கொண்டும் உள்ளே நுழைந்தாள் வெண்ணிலா. அவளை ஆசையுடன் கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் அவள் அம்மா. வெண்ணிலா தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.
"என்ன செல்லம் பாட்டெல்லாம் பலமா இருக்கே?" எனக் கேட்டாள் அம்மா.
“அம்மா, இன்றைக்கு வகுப்பில் டீச்சர் நிலக்கடலை பற்றி சொன்னார்கள்”.
"அப்படியா! என்ன சொன்னார்கள்! எனக்கும் சொல்வாயா?"
"ஓ" தன் குண்டு கண்களை அகல விரித்து தலை அசைத்தாள் வெண்ணிலா.
"சரி, முதலில் கை, கால், முகம் கழுவி விட்டு உன்னுடைய யூனிஃபார்மை மாற்றி விட்டு வந்து பேசலாமா?" எனக் கேட்ட அம்மாவிடம், “ஓகே" என சொல்லிவிட்டு வீட்டின் பின்புறம் ஓடினாள் வெண்ணிலா.
உடை மாற்றி வந்தவளிடம் மாலை சிற்றுண்டியாக கடலை மிட்டாய், பொரி உருண்டை ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தாள் அவள் அம்மா.
"ஐ! ஐ! அம்மா, இது பர்ஃபி தானே?"
"ஆமாம்"
“நிலக்கடலை பற்றி டீச்சர் என்ன சொன்னாங்கன்னு சொல்லட்டுமா?" "சரி, இப்போ சொல்லு கேட்கிறேன்”, என சிரித்துக் கொண்டே கூறினாள் அவள் அம்மா.
"நிலக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்குதாம்".
"அப்படியா"
"ஆமாம் அம்மா, அப்புறம் இதை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி ஆகுமாம், நோய்கள் ஓடிவிடுமாம், இதனோட ஸ்பெஷல் என்ன தெரியுமா? நெஞ்சு சளியை நீக்கிடுமாம்", கண்களை உருட்டி உருட்டி சொல்பவளை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள் அம்மா.
"சரி வேறு என்ன பயன் சொல்லு பார்க்கலாம்?"
கொஞ்சம் யோசித்து விட்டு, "இதில் இருக்கும் எண்ணெய் சத்து எளிதில் ஜீரணமாகக் கூடியதாம், அப்புறம் நமது தோல் பள பளவென்று மின்னுமாம்", சொல்லிவிட்டு கல கலவென்று சிரித்தாள் வெண்ணிலா.
"அவ்வளவுதானா இல்லை இன்னும் இருக்கா?"
"என்னமோ ஒரு நோய் பெயர் சொன்னாங்க அம்மா அது ஏதோ அடிபட்டால் ரத்தம் நிற்காமல் வந்து கொண்டே இருக்குமாமே", தலையை சொரிந்தாள் அவள்.
"எனக்கு தெரியும் சொல்லட்டுமா?"
"சொல்லுங்களேன் பார்ப்போம்"
"அந்த நோய்க்கு ஹீமோஃபீலியா அப்படின்னு பெயர்”
"கரெக்ட், அந்த பெயர் தான் சொன்னாங்க”
"ஆமாம் செல்லம் அந்த நோயைக் குணப்படுத்தவும் வேர்க்கடலை பயன்படும்".
“வேர்க்கடலையா?"
"ஆமாம் நிலக்கடலையை வேர்க்கடலைன்னும் சொல்லலாம், அதையே ஆங்கிலத்தில் 'கிரௌண்ட் நட்' அப்படின்னு சொல்லுவாங்க”.
"அதுமட்டுமில்லை வேர்க்கடலை கஞ்சி உன்னைப் போன்ற குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது. அதனுடன் வாழைப்பழம் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் உனக்கு நல்ல பலம் கிடைக்கும். நாளைக்கு வேர்க்கடலை கஞ்சி குடிக்கிறாயா?"
"கண்டிப்பாக அம்மா! எனக்கு வறுத்தும் கொடுப்பீங்களா? வறுத்த கடலை எனக்கு ரொம்ப பிடிக்கும்".
"சரி உனக்கு பிடிச்ச மாதிரி வேர்க்கடலையில் எந்த மாதிரியான தின்பண்டங்கள் செய்ய முடியுமோ அதுபோல எல்லாமே செஞ்சு தரேன் ஓகே? இன்னொன்றும் தெரிந்து கொள், இதை ஆட்டுப்பால் கூடவும் சேர்த்து சாப்பிடலாம். அந்த மாதிரி சாப்பிட்ட ஒரு தலைவரை உனக்குத் தெரியுமா?" எனக் கேட்ட தாயை பரிதாபமாகப் பார்த்தாள் வெண்ணிலா. தெரியாது என்பது போல உதட்டைப் பிதுக்கினாள்.
"நம்ம காந்தி தாத்தா தான். அவர் தினமும் ஆட்டுப்பாலும் அவித்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி அளவும் காலை உணவாக சாப்பிடுவாராம்".
“அப்படியா அம்மா! எங்க டீச்சர் மாதிரியே நீங்களும் நிறைய விஷயங்கள் சொல்றீங்களே! உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?" எனக்கேட்ட மகளை பார்த்து அழகாக சிரித்தாள் அவளுடைய தாய். "நானும் டீச்சர் ட்ரைனிங் முடிச்சிட்டு பரீட்சை எழுதிட்டு முடிவுக்காக காத்திருக்கிறேன் செல்லம். உன்னுடைய அம்மாவும் வருங்காலத்தில் ஒரு ஆசிரியை தான்".
இதைக்கேட்ட உடன் மிகுந்த சந்தோஷத்தில் ஓடி வந்து தன் அம்மாவின் கழுத்தை இருகக் கட்டிக் கொண்டாள் வெண்ணிலா.
(ந. தீபலட்சுமி, பி.டி. ஆசிரியர், ஆங்கிலம், கிரியேட்டிவ் ரைட்டர், வேலூர்)