வலிப்பு நோய் அல்ல.. ஆறுதலாய் பேசுங்கள்.. அரவணைப்பு காட்டுங்கள்!
Nov 17, 2026,11:13 AM IST
-அ. சுபாலட்சுமி
ஹாய் நண்பர்களே,நான் உங்க மூளை பேசுறேன். என்னடா எப்பவும் மனசு தானே நம்மகிட்ட பேசும். இன்னைக்கு புதுசா மூளை பேசுதே னு யோசிக்கிறீங்களா. இன்னைக்கு (நவம்பர் 17) தேசிய வலிப்பு தினம், அதான் அதை பற்றி உங்ககிட்ட பேச வந்திருக்கேன்.
இன்று கால்-கை வலிப்பு (Epilepsy) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான அச்சம் மற்றும் களங்கத்தைப் போக்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது
.
"வலிப்பு" என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.
வலிப்பு நோய் அல்லது காக்காய் வலிப்பு (கால்-கை வலிப்பு) என்பது என் பகுதியில் (மூளையில்) ஏற்படும் ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். மூளையில் மின் சமிக்ஞைகளில் திடீர் மற்றும் அசாதாரண மாற்றங்கள் ஏற்படும் போது, அது மீண்டும் மீண்டும் வலிப்புத் தாக்கங்களை (Seizures / Fits) உருவாக்குகிறது. அதாவது எப்படி சீரான கரண்ட் போகும் போது திடீர்னு அதிகமான கரண்ட் கடந்தால் அந்த இடத்துல திடீர் பிரச்சனை ஏற்படுமோ அது மாதிரி தான் என்னோட பகுதில நடக்குது நண்பர்களே.
வலிப்பின் வகைகள்:
மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial seizure). நாம் அவ்வப்போது காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு ‘முழுவீச்சு வலிப்பு’ (Generalised seizure) என்று பெயர்.
இவை தவிர, இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்பச் சிகிச்சை முறை மாறுவது மருத்துவ நியதி.
அறிகுறிகள்:
1. கை, கால் அல்லது உடல் முழுவதும் திடீரென உதறல் அல்லது நடுக்கம்
2. உடல் விறைப்பு.
3. தற்காலிகமாக விழிப்புணர்வு அல்லது சுயநினைவை இழத்தல்.
4. வாயில் நுரை தள்ளுதல்.
5. சில நொடிகள் வெறுமையாக அல்லது வேறு எதையோ உற்று பார்ப்பது.
வலிப்பு (Epilepsy / Seizure) வரும்போது அருகில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் செய்யக் கூடாதவை:
செய்ய வேண்டியவை (Do's)
1) அவர் இருக்கும் இடத்தில் கூர்மையான பொருட்கள், மேசைகள் அல்லது ஆபத்தான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, அவரைப் பாதுகாப்பான தரைப் பகுதியில் படுக்க வைக்கவும்.
2) அவரை இடது அல்லது வலது பக்கமாகச் (Recovery position) சாய்த்துப் படுக்க வைக்கவும். இதனால் உமிழ்நீர் அல்லது சளி தொண்டையில் ஏறாமல் எளிதாக வெளியேறும்.
3) கழுத்து டை, பெல்ட் அல்லது மேல் சட்டைப் பொத்தான்களைத் தளர்த்தி, எளிதாக சுவாசிக்க வழி செய்யுங்கள்.
4) தலையில் அடிபடாமல் இருக்க, அவர் தலையின் கீழ் மென்மையான துணி அல்லது தலையணையை வையுங்கள்.
5) வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று கவனித்துக்கொள்ளுங்கள். 5 நிமிடத்துக்கு மேல் வலிப்பு நின்றபாடில்லை என்றால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
செய்யக் கூடாதவை (Don'ts)
1) வலிப்பு வரும்போது கைகளில் சாவி, இரும்பு வளையல் அல்லது சங்கிலியைத் திணிப்பது முற்றிலும் தவறான மூடநம்பிக்கை.
2) வலிப்பு வரும்போது அவர்களின் வாயில் விரல்களையோ, தண்ணீர், உணவு அல்லது மாத்திரைகளையோ திணிக்கக் கூடாது (மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படக்கூடும்).
3) வலிப்பு வரும் உடலில் ஏற்படும் அசைவுகளைக் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்.
நண்பர்களே இதுதான் நான் உங்ககிட்ட சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம். வலிப்பு நோய் (Epilepsy) உள்ளவர்களை மனரீதியாக நடத்தும் போது, அவர்களுக்கு பாதுகாப்பு, சுயமரியாதை மற்றும் இயல்பான வாழ்க்கைச் சூழலை வழங்குவதே மிக முக்கியமானது. வலிப்பு என்பது ஒரு நரம்பியல் பாதிப்பு மட்டுமே தவிர, அது மனநோய் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், நம்பிக்கையை அதிகரிக்கவும் கீழே நான் சொல்லிருப்பது போல் செய்யுங்கள்.
1. பாதிக்கபட்டவர்களிடம் பரிதாபத்தைத் தவிர்த்து இயல்பாக நடத்துங்கள். அவர்களைப் பலவீனமானவர்களாகவோ அல்லது நோயாளிகளாகவோ எப்போதும் பார்க்காதீர்கள். மற்றவர்களைப் போலவே அவர்களையும் இயல்பாக நடத்துங்கள்.
2.அவர்களிடம் பயத்தை விதைக்காதீர்கள். "உனக்கு வலிப்பு வரும், இதைச் செய்யாதே, வெளியே செல்லாதே" என்று அடிக்கடி கூறி அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்காதீர்கள்.
3.பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களே செய்ய ஊக்குவிய்யுங்கள். இது அவர்களுக்குத் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியைத் தரும்.
4. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பேசுங்கள். வலிப்பு எப்போது வரும் என்ற பயம், பதற்றம் மற்றும் மன அழுத்தம் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் தங்கள் பயத்தைப் பகிரும்போது, அறிவுரை கூறாமல் அமைதியாகக் காதுகொடுத்துக் கேளுங்கள்.
5.அவர்களோட உணர்வுகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்."இதற்கெல்லாம் ஏன் கவலைப்படுகிறாய்?" என்று கூறாமல், அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு ஆறுதல் கூறுங்கள்.
6.எப்போதும் உடல்நலம் மற்றும் மாத்திரைகளைப் பற்றியே பேசாமல், அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் மற்றும் அன்றாட விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள்.
7. வலிப்பு வரும்போதும் சரி, முடிந்த பிறகும் சரி, சுற்றியுள்ளவர்கள் பதற்றமடைந்தால் அது பாதிக்கப்பட்டவருக்குப்
பெரிய மன உளைச்சலைத் தரும்.
8. பொது இடங்களில் வலிப்பு ஏற்பட்டால், மயக்கம் தெளிந்ததும் அவர்கள் மிகுந்த கூச்சமும் அவமானமும் அடையக்கூடும். "பயப்பட ஒன்றுமில்லை, எல்லாம் சரியாகிவிட்டது" என்று மென்மையாகக் கூறி அவர்களைத் தேற்றுங்கள்.
9. வலிப்பு நின்ற பிறகு மூளையும் உடலும் மிகவும் சோர்வாக இருக்கும். உடனடியாக அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்பதைத் தவிர்த்து, அமைதியாக ஓய்வெடுக்க உதவுங்கள்.
10. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுங்கள்.அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் அதீத பயம் ஆகியவை வலிப்பைத் தூண்டக்கூடியவை. வீட்டில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குங்கள்.
11.சில வலிப்பு எதிர்ப்பு மாத்திரைகள் காரணமின்றி கோபம், எரிச்சல் அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தலாம். அவர்கள் கோபப்பட்டால் அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல், மருத்துவரின் ஆலோசனையைப் பெற உதவுங்கள்.
12. அவர்களைத் தனிமைப்படுத்தாமல் குடும்ப விழாக்கள் மற்றும் நண்பர்களின் சந்திப்புகளில் பங்கேற்க ஊக்குவிக்கவும்.
என்ன நண்பர்களே வலிப்பை பற்றிய ஓர் சிறிய விழிப்புணர்வு உங்களுக்கு கிடச்சிருக்கும் னு நம்புறேன். இனிமேலாவது வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களிடம் மனதளவு பாதிக்காத மாதிரி பேசுங்க நண்பர்களே. ஏன்னா வலிப்பு ஒரு நிமிடத்துக்குள்ள சரியாயிரும். ஆனால் நாம அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துகிட்டா எப்போவும் அவங்களுக்கு அது வலிக்கும். இப்போ உங்ககிட்ட இந்த திருக்குறள் சொல்லனும்னு தோனுது .
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
நண்பர்களே இனிமே உங்களுக்கும் இந்த திருக்குறள் நினைவிருக்கும்னு நினைக்கிறேன்.