காலம் மறைத்தாலும் என்றும் நம் மனதில் இருந்து மறையாத கலாம்!
- அ. சுபாலட்சுமி
தேனி: மக்களின் ஜனாதிபதி என்ற செல்லப் பெயர் கொண்டவர் மறைந்த ஏபிஜே அப்துல் கலாம். குறிப்பாக மாணவர்களின் ஆதர்ச ஹீரோவாக இன்றும் கூட திகழ்பவர். கனவு காணுங்கள் என்று நம்முடைய நாட்டின் இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து உத்வேகம் கொடுத்தவர். அவர் இறந்து விட்டாலும் கூட இன்றும் கூட இளைஞர்களின் ஏகோபித்த நாயகனாக திகழ்கிறார் கலாம்.
எங்கும் "கலாம்",எதிலும் "கலாம்"
எங்கள் கலாம் "அப்துல் கலாம்".
உங்கள் துணையிருந்தால்,
சாதிக்"கலாம்", உருவாக்"கலாம்",
கனவு காணலாம், அதை நனவாக்"கலாம்",
நாட்டை வளப்படுத்தலாம்,
நதிகளை இணைக்"கலாம்",
எங்கள் கலாம், அப்துல் கலாம்.
இது நான் கல்லூரியில் படித்த போது ஓர் நாளிதழில் படித்து ரசித்தது. இது அப்துல் கலாம் ஐயாவை பற்றி எழுதப்பட்டிருந்தது.
இந்த படம் நான் கல்லூரியில் படித்த போது வரைந்தேன். அப்துல் கலாம் ஐயாவின் பிறந்தநாளான இன்று உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம்.
அவர் பல பொன்மொழிகளை கூறியிருக்கிறார். அதில் ஓர் ஆசிரியராக எனக்கு பிடித்த பொன்மொழியை இங்கு பகிர்கிறேன்.
"ஒரு ஆசிரியரின் வாழ்க்கையில் இரண்டு நிறங்கள் மட்டுமே உள்ளன; ஒன்று வெள்ளை (சாக்பீஸ்), மற்றொன்று கருப்பு (கரும்பலகை). ஆனால், இந்த இரண்டு நிறங்களைக் கொண்டு, ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றுகிறார்."
அப்துல் கலாம் ஐயாவின் ஒவ்வொரு பொன்மொழிகளும் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
அப்துல் கலாம் ஐயாவிற்கு பிடித்த திருக்குறள் - குறள் - 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
இந்தக் குறளின் விளக்கம்:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
உண்மைதானே...!
காபிபொடியை கொண்டு நான் வண்ணம் தீட்டிய ஓவியம்
நம்மிடம் உள்ள அனைத்து பொருட் செல்வங்களையும் இழந்தாலும் கல்வி செல்வம் அறிவு என்றும் நமக்கு அழிவு வராமல் கை கொடுக்கும். தன் இறுதி மூச்சு வரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னால் முடிந்த சொற்பொழிவுகளை உலகிற்கு தந்தவர் டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா.
அப்துல் கலாம் நமக்குக் கற்றுக் கொடுத்த கனவு காணும் அறிவுரையை தொடர்ந்து கடைப்பிடிப்போம்.. நமது கனவுகளை மட்டுமல்லாமல் நாட்டின் கனவுகளையும் கூட அது நனவாக்க கை கொடுக்கும்.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)