ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?
- அ. சுபாலட்சுமி
அப்பா: டேய் ராமு ஆத்துல எதுக்குடா இப்படி மண்ண அளந்து போட்டுக்கிட்டு இருக்க?
மகன்: அப்பா நேத்து என் நண்பன் தான் எதையும் ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்னு சொன்னான்.
அப்பா: என்ன சொல்லுற?
மகன்: ஆமாம் அப்பா அது ஏதோ பழமொழியாம் அப்பா.
அப்பா: டேய் ராமு அது அப்படி இல்லடா.. அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும். இதுதான் சரியான வார்த்தை.
அதுதான் இப்போது "ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்" என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன தெரியுமா?
அகம் என்றால் மனம் அல்லது உடல் என்று பொருள். நாம் எதைச் சாப்பிட்டாலும் (அகத்தில் போட்டாலும்) அல்லது எங்கு உதவி (தர்மம்) செய்தாலும் அல்லது எந்த ஓர் விஷயத்தை நாம் உள்வாங்கினாலும் அது உடலுக்கும் சூழ்நிலைக்கும் மனதுக்கும் பொருத்தமானதா என்று அறிந்து/அளந்து செய்ய வேண்டும்.
விளக்கங்கள்
உணவு முறை: நாம் எதை உட்கொண்டாலும் அளவுக்கு அதிகமாக இல்லாமல், உடலுக்குத் தேவையான அளவில் சாப்பிட வேண்டும்.
உதவி செய்தல்: மற்றவர்களுக்கு உதவி அல்லது தானம் செய்யும்போது, யாருக்கு எங்கு கொடுக்கிறோம் என்பதை அறிந்து அளவோடு கொடுக்க வேண்டும்.
அறிந்து செய்தல்: "உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டியில்லை" என்ற பாடல் வரியை போல் நம் மனத்தில் எந்த கருத்தை போட்டாலும் அதை பற்றி அறிந்து போட வேண்டும் என்ற பொருளும் உண்டு.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)