கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!

Su.tha Arivalagan
Oct 23, 2026,04:58 PM IST

- அ. சுபாலட்சுமி


நான் சுமாராக படிப்பவள் தான். அனைத்து வாத்தியார்களிடமும் அடியும் திட்டும் வாங்கியவள். யாரிடமும் மனம் விட்டு பேச மாட்டேன். தனிமை விரும்பி. 


ஏழாம் வகுப்பு வரை அம்மா,அப்பாவிடம் இருந்து படித்தேன். பிறகு எட்டாம் வகுப்பில் இருந்து நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று என் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து பக்கத்து ஊருக்கு பள்ளி பேருந்தில் பயனித்து படித்து வந்தேன். பாட்டி காலையில் எழுந்து எனக்கும் என் தங்கைகளுக்கும் சமையல் செய்து தருவார். மதிய சாப்பாட்டை தாத்தா பையில் எடுத்து வைப்பார். 


இரண்டு வருடங்களுக்கு பிறகு பத்தாம் வகுப்பில் பள்ளியில் ஒன்று பள்ளிக்கு அருகில் இருந்து படிக்க வேண்டும் இல்லையேல் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்றனர்.




சரியாக அந்த வருடம் என் சித்திக்கு நான் படிக்கும் பள்ளி இருக்கும் ஊரில் வேலை கிடைத்தது. எனவே நானும் அவர்களுடன் பள்ளியின் அருகே வீடு பார்த்து என் படிப்பை தொடர்ந்தேன். நான் பத்தாம் வகுப்பு படித்ததனால் வீட்டில் தொலைக்காட்சி இல்லை, வானொலி மட்டுமே வீட்டில் இருந்தது. கோடை எப்.எம் 100.5 மட்டுமே இருக்கும். அதுவும் அந்த காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிக்கும். பிறகு தான் அதன் ஒலிபரப்பு நேரம் அதிகரித்தது.


வீட்டில் தொலைகாட்சி பெட்டி இல்லாததால், ஒவ்வொரு முறை கடைசி பரிட்சை முடிந்ததும் நான்,சித்தி மற்றும் சித்தப்பா அன்று மாலை தியேட்டருக்கு படம் பார்க்க கிளம்பி விடுவோம். அது ஒரு நல்ல நினைவு.


லன்ச்சுடன் காத்திருக்கும் ஃபேன்டா


எங்களுடன் அப்பாவின் அம்மாவும் இருந்தார்கள். மதியம் உணவருந்த வீட்டிற்கு தான் வருவேன். நான் வரும் அந்த நேரத்தில் தட்டில் சாதம்,பருப்பு தயாராக இருக்கும். வீட்டிற்கு சென்றதும் சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வேன். 


மாதவிடாய் காலத்தில் வயிறு வலியுடன் மதியம் வீட்டிற்கு வருவேன். எப்போதும் போல் உணவும் அதனுடன் ஐந்து ரூபாய்க்கு விற்ற பேன்ட்டாவும் கடையில் இருந்து பாட்டி வாங்கி வைத்திருப்பார்கள். மதிய உணவு முடித்ததும் அந்த பேன்ட்டாவையும் குடித்து விட்டு பள்ளிக்கு செல்வேன். 


நாங்கள் இருந்த வீட்டின் தெரு ஓரம் ஒர் கடையில் இருப்பத்தைந்து பைசா மேக்ஸ் மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்.    அது மட்டும் அல்லாது பத்தாம் வகுப்பில் இரவு 7.45 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறும். அப்போது சித்தப்பா பள்ளிக்கு வந்து அழைத்து செல்வார். பள்ளியில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு சின்ன கடையில் சித்தப்பா மில்கிபார் மிட்டாய் வாங்கி தருவார். இன்னும் மில்கிபார் மிட்டாய் பார்த்தால் அந்த நினைவு தான் வரும்.


25 வருட தோழி




பன்னிரென்டாம் வகுப்பு வரை யாரிடமும் நான் பேசியதில்லை. தோழிகள் என்று ஐந்து பேர் பத்தாம் வகுப்பில் இருந்தோம், ஆனால் பதிணோராம் வகுப்பிலேயே அனைவரும் சரியாக பெசவில்லை.


பதினோராம் வகுப்பில் ஓர் மாணவி எங்கள் வகுப்பில் சேர்ந்தாள். அவள் நல்ல திறமைசாலி. இரண்டு வருடங்கள் நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை. பன்னிரென்டாம் வகுப்பு இறுதியில் இருவரும் பேசினோம். அந்த நட்பு இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் இன்றும் தொடர்கிறது.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)