- அ.சுபாலட்சுமி
பிறந்தநாள் என்றால் கொண்டாட்டம் தான். விடுதி அறை நண்பர்கள் அனைவரும் கைக் காசைப் போட்டு கேக் வாங்கி பிறந்தநாள் தோழியை கொண்டாடுவோம். அங்கே கேண்டினில் பரிசு பொருட்கள் வாங்குவோம், பக்கத்து அறையில் பிறந்தநாள் கொண்டாடத்திற்கு நம்மை அழைத்தால் வெறும் கையுடன் செல்லாமல் அவர்களுக்கு ஓர் சிறிய வாழ்த்து அட்டை வாங்கி தந்த காலத்தை நினைத்தால் இன்றும் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது.
அனைவரின் பிறந்தநாளையும் கொண்டாடினாலும் என் பிறந்த நாளை நான் வீட்டில் தான் கொண்டாடுவேன். எனவே மூன்றாம் வருடம் நானே எனக்கு பிறந்தநாள் கொண்டாடும்படி கேட்டேன். அதே போல் பிறந்தநாள் முடிந்த பின் கல்லூரி வந்த போது விடுதி அறையில் நான் வரைந்த ஓவியங்களை சுவற்றில் ஒட்டி, அனைவரும் என் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு என் அறைக்கு வந்து கேக் வெட்டிக் கொண்டாடிணோம்.

கல்லூரியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் நூலகம்தான். காரணம் நான் தனிமை விரும்பி. அதனால் அடிக்கடி நூலகத்திற்கு சென்று என் படிப்பு சம்மந்தமான பல இதழ்களை படிப்பேன். சில நேரங்களில் அதை நகல் எடுத்து வைத்துக்கொள்வேன். அதை படிப்பேனா என்றால் தெரியாது. ஆனால் நகல் எடுத்து வைத்துக்கொள்வேன்.
கேன்டீன்:
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை என்றால் இரவு உணவு அங்கே தான். அன்று சோலா பூரியும் மசாலாவும்... அட அட நினைத்தால் இப்போதும் சுவை நாவில் உணர்கிறது. விடுதி அறையில் இருப்பவர்களின் பெற்றோர் யாரேனும் வந்தால் அன்றும் கேண்டீன் உணவுதான்.
கல்லூரி விழா:
கல்லூரியில் எல்லாமே மகிழ்ச்சிதான். அதிலும் விழாக்கள் என்றால் சொல்ல தேவையில்லை. பெண்கள் கல்லூரி என்பதால் மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம். படத்தில் தான் கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். நிஜ வாழ்க்கையில் இல்லை என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் இங்கே நாங்கள். படத்தில் கண்ட மகிழ்ச்சியை எல்லாமே அனுபவித்தோம்.
Field trip:

கல்லூரி இரண்டாம் ஆண்டு பயின்ற போது ஊட்டி, பெங்களூர், மைசூர் சென்றோம். நான் சொன்னது போல் கைபேசி இல்லை. ஆனால் நினைவுகள் இன்றும் என் மனதில் இருக்கிறது. பேருந்து பயணம் தான், முதல் முறையாக என் பெற்றோர்களை விட்டு தனியே வெளியூர் பயணம்.
ஊட்டியில் குளிர், ஆனாலும் சரியான கொண்டாட்டம். பெங்களூர் சென்றதும் சரியான பசி. எங்களுடன் வந்த ஒரு பெண் அழுதே விட்டாள். பிறகு ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். அங்கிருந்து புறப்பட்டு அடுத்த இடம் செல்லும் போது நாங்கள் சென்ற பேருந்து அருகில் கரும்பு ஏற்றி சென்ற லாரி இருந்தது.
நாங்கள் அதில் இருந்து ஒரு கரும்பை எடுத்துவிட்டோம், கடித்து பார்த்தால் கடிக்க முடியவில்லை. பிறகு தான் எங்களுடன் வந்த ஆசிரியர் அது சார் (ஜூஸ்) கரும்பு என்றார். ஆனால் அதை கடிப்பது போல் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மூன்றாம் ஆண்டில் டெல்லி சென்றோம், அதிலும் பல நினைவுகள் உள்ளது. நிறைய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்தோம்.
விடுதி:
வீட்டில் இருந்து வரும் நண்பர்கள் அவர்களின் உணவை எங்களுக்கு தந்து விட்டு விடுதி உணவை உண்டு மகிழ்வார்கள். விடுதியிலும் சுவையான மற்றும் வித வித மான சாப்பாடு கிடைத்தது. விடுதி சாப்பாட்டின் அமிர்தமான மகிமையை பீல்ட் ட்ரிப் சென்ற போது உணர்ந்தோம்.
என் ஊரில் இருந்து இரண்டு ரூபாய் ரீபில் பேனா வாங்கிக் கொண்டு கல்லூரியில் விற்பனை செய்த காலங்கள் ஒரு புறம், விடுப்பு நாட்கள் முடிந்த பிறகு விடுதி சென்று அவர் அவர் கொண்டு வந்த தின்பண்டங்களை பரிமாறிக் கொண்டு மகிழ்ந்த காலம் மறுபுறம்.
தங்கள் அறையில் தங்கியிருக்கும் யாருடைய பெற்றோர்கள் வந்தாலும் சரி உடனே அனைவரும் ஒன்று கூடி பேசி மகிழ்வோம். உடல் நிலை சரியில்லை என்றால், விடுதியில் இருந்து கல்லூரி எதிரில் உள்ள விவேகானந்தா மருத்துவமணைக்கு அழைத்து செல்வார்கள்.

விடுதி உண்பகம் (மெஸ்):
விடுதி உண்பகம் ஒரு ஓட்டல் போல் இருக்கும். சாப்பாட்டின் சுவையே தனி. சாப்பாடு நாங்களே வேண்டும் அளவு எடுத்து கொள்ளலாம். கேரளா சிவப்பு அரிசி சாதம் மற்றும் நம் தமிழ்நாடு சாதம் இருக்கும். ஒவ்வொரு நாளும் வித விதமான சாப்பாடு. புதன் கிழமை இரவு பரோட்டா போடுவார்கள். அன்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு தட்டில் மட்டும் பரோட்டாவை பிச்சு போட்டு பால் ஊற்றி சக்கரை போட்டு வைத்து விடுவோம்.
பிறகுஅனைவரும் அவரவர் தட்டில் வைத்த பரோட்டாவை உண்ட பிறகு இறுதியாக பாலில் ஊறிய பரோட்டாவை சண்டை போட்டுக் கொண்டு ருசித்து சாப்பிடுவோம். வியாழக்கிழமை காலை உணவுக்கு சீக்கிரமாக சென்று விடுவோம். அப்படி என்ன சாப்பாடு என்று தானே யோசிக்கிறீர்கள். அன்று முதல் நாள் இரவு பரோட்டா மிச்சம் இருந்தால் சில்லி பரோட்டா போடுவார்கள். அது மிக குறைந்த அளவில் தான் இருக்கும் அதற்குத் தான் அந்த கூட்டம்.
வெள்ளிக்கிழமை மதியம் சுவையான பாயாசத்துடன் சாப்பாடு கொடுப்பார்கள். சாப்பிட நேரம் போதாது. அவ்வளவு சுவை.

புகைப்படம்:
விழாக் காலங்கள் மற்றும் பிறந்தநாள் புகைப்படம் எடுக்க ரோல் கேமரா தான் இருக்கும். எடுத்த புகைப்படம் ஸ்டுடியோவில் இருந்து பிரிண்ட் போட்டு வந்ததும் அதை மீண்டும் மீண்டும் பார்த்து பிறரை கலாய்த்து ரசித்த காலங்களும் உண்டு. இன்றும் அந்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளது.
காலங்கள் மாறினாலும் நினைவுகள் மாறவில்லை.
இவை அனைத்திற்கும் ஒரே காரணம் நான் கல்லூரி படிப்பு படித்த காலத்தில் கைபேசி இல்லாதது தான் என்பேன்.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)
இதுவும் கடந்து போகும்- ரம்யாவின் கவிதைத் தோட்டம் (5)
Success A Journey of Struggle
கண்டிக்கா பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (6)
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: 10 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் வானிலை மையம் எச்சரிக்கை!
இன்று முதல் சென்னையில் மழை தீவிரமடையும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
தென்தமிழ் தலையங்கம்: "ரெட், மஞ்சள், ஆரஞ்சு" - வானிலை அலர்ட்டுகளும், மக்களின் விழிப்புணர்வும்!
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
{{comments.comment}}