கைபேசி இல்லாத காலத்து கல்லூரி நினைவுகள்.. ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே (1)!

Oct 20, 2026,08:55 AM IST

- அ.சுபாலட்சுமி


"ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே........

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே....."


நான் பதினெட்டு வருடத்திற்கு முன்னால் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் படித்தேன். ஆசியாவின் முதல் பெரிய மகளிர் கல்வி நிறுவனம் அது. உண்மையில் அது ஓர் சொர்க்க காலம். அங்கே அனுபவித்த நினைவுகளை இங்கே நான் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது உங்களையும் உங்களுடைய பள்ளி கல்லூரி  நினைவுகளுக்கு எடுத்துச்செல்லும் என்று நம்புகிறேன்.





பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்:


என் சொந்த ஊரில் இருந்து கல்லூரி செல்ல ஆறு மணி நேரம் ஆகும். அப்போதெல்லாம் ஒரே பேருந்து தான். காலை ஒன்பது மணிக்கு ஏறினால் மாலை மூன்று மணிக்கு தான் கல்லூரி விடுதிக்கு செல்வேன். மதிய சாப்பாடு பேருந்தில் தான். ஒரு நாள் முழுவதும் பயணத்திலே முடிந்து விடும். மாலை ஆறு மணிக்கு மேல் விடுதியில் அனுமதி இல்லை.


ஒரு முறை என் மாமா கல்யாணத்துக்கு சென்று விட்டு சென்னையில் இருந்து விடுதிக்கு என் தாத்தாவுடன் சென்றேன். சரியான மழை பெய்தது. ஹாஸ்டலுக்கு வந்து சேர மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. எனவே விடுதி காப்பாளர் இப்போது உள்ளே சென்றால் அபராதம் செலுத்த வேண்டும். உடன் தாத்தாவும் இருக்கிறார். அவரும் இரவில் ஊருக்கு போக வேண்டும். எனவே திருச்செங்கோடு சென்று ஓர் ஓட்டலில் தங்கி விட்டு காலையில் வருமாறு சொன்னார்.


வேறு வழியில்லாமல் நாங்களும் மழையில் திருச்செங்கோடு சென்று அங்கே ஓர் ஓட்டலில் தங்கிவிட்டு மறுநாள் காலை நான் கல்லூரி விடுதிக்கு சென்றேன். என்றும் மறவா நினைவுகள்...!


சங்கீதாக்களும், சரண்யாக்களும்!


கல்லூரியில் பொதுவாக நான் யாரிடமும் பெரிதாக பேச மாட்டேன். இந்த நினைவுகளை இன்றும் தொடர்பில் உள்ள என் கல்லூரி தோழிகள் குழுவில் நான் பகிர்ந்ததை பார்த்த ஓர் தோழி என்னைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்தாள்.  பெயர் வரிசையில் என் அருகில் இருப்பவர்கள் கேரளாவைச் சார்ந்தவர்கள். எனவே நான் என்ன செய்வது என்று தெரியாமல்  தமிழ் தோழிகளுடன் ஒவ்வொரு முறையும் என் சந்தேகத்தை கேட்பேன் என்றாள். நாங்கள் ஒவ்வொருவருக்கும் அடைமொழி பெயர் வைத்து அழைப்பது வழக்கம்.


சரண்யா என்ற பெயரில் ஐந்து பேர் அதிலும் ஒரே இனிஸியலில் மூன்று பேர் உள்ளனர். அதனால்  அடைமொழி வைத்து அழைப்போம். ஒரு பெண் அனைவருக்கும் புத்தகங்களை நகல் எடுத்து கொடுப்பாள். அவள் பெயர் ஜெராக்ஸ் சரண்யா, இன்னொரு பெண் ஒல்லியாக இருப்பாள் அவள் பெயர் சப்ப சரண்யா. மற்றொரு பெண் நெட்டையாக இருப்பாள் அவள் பெயர் நெட்ட சரண்யா என்று அழைப்போம். 


அதேபோல இரண்டு சங்கீதா இருந்தனர். அவர்களை ஹாஸ்டல் சங்கீதா, டேஸ்காலர் சங்கீதா என்று அழைப்போம். ஒரு பெண் கிண்டர்ஜாய் மிட்டாய் பிரியை. அதனால் அவளது அடைமொழி கிண்டர்ஜாய்...!


ஆய்வுக் கூடம்:




ஆய்வுக் கூடத்திலும் (லேப்) பல கலாட்டாக்கள் நடந்திருக்கிறது. உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதை டெஸ்ட் பண்ண சொன்னார்கள். அப்போது அதில் இருந்த சாரை பார்க்க வைன் போல இருந்தது. அதை எடுத்து சியர்ஸ் செய்வதை போல புகைப்படம் எடுத்தோம். இப்படி லேபில் வைத்தே ஏகப்பட்ட கலாட்டாக்கள் செய்திருக்கிறோம்.


தொலைக்காட்சி:


வகுப்பறையில் தான் தொலைக்காட்சி பெட்டி இருக்கும், ஆனால் வகுப்பு நேரத்தில் யாரும் பார்க்க மாட்டோம். மாலை கல்லூரி முடிந்ததும் தொலைக்காட்சி பார்க்க அனுமதி உண்டு.


விவேகானந்தா கல்லூரியில் மணிப்பூர், ஆந்திரா, இந்தோனேசியா, கேரளா போன்ற இடங்களில் இருந்தும் பல மாணவர்கள் படித்தனர். அதனால் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒவ்வொரு மொழி சேனல் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக் கிழமையில் சூப்பர் சிங்கர் மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் பார்க்க கூட்டம் அலை மோதும். அதை இப்போது நினைத்தால் என் தாய் தந்தை அவர்கள் காலத்தில் தொலைக்காட்சி பார்த்த கதை தான் நினைவிற்கு வருகிறது.


வங்கி மற்றும் ஏடிம் :




அப்போது கைபேசி இல்லாததால், பணம் வேண்டும் என்றால் கல்லூரியில் இருந்த ஐஓபி வங்கிக்கு சென்று அங்கிருக்கும் சலானில் அனைத்து விவரங்களையும் எழுதி கொடுத்துவிட்டு சிறிது நேரம் காத்திருந்து பணம் வாங்கி வருவோம். கல்லூரி கட்டணம், மாதா மாதம் விடுதி உணவு கட்டணம் போன்றவற்றை கட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.  


செமஸ்டர் பரிட்சை எழுத ஹால் டிக்கட் வாங்க வேண்டும் என்றால் அனைத்து பணமும் செலுத்தி இருக்க வேண்டும். இறுதி நேரத்தில் அதற்காக வங்கிக்கு ஓடிய காலமும் உண்டு. இரண்டாம் வருடம் ஏடிஎம் கார்ட் வாங்கியதும் அதை உபயோகிக்கத் தெரியாமல் திணறிய காலமும் உண்டு.


தொலைபேசி.. காயின் போட்டா பேசலாம்:




அப்போதெல்லாம் கைபேசி கிடையாது. ஒரு ரூபாய் நாணய தொலைப்பேசி இருந்தது. நல்ல மற்றும் நண்பர்கள் இருந்தனர்.  பெற்றோருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தொடர்பு கொண்டு பேச ஒரு ரூபாய் நாணய தொலைப்பேசியில் தான் பேசுவோம் (அது நேரத்தின் மகிமையை உணர்த்தியது).


காரணம் ஒரு ரூபாய்க்கு ஒரு நிமிடம் தான் பேச முடியும், அதிலும் இறுதி பத்து நொடியில் இருந்து சத்தம் வரும் பாருங்க.. படபடன்னு ஆயிரும். வேகமாக கையில் இருக்கும் ஒரு ருபாய் நாணயத்தை போட்டு பேசவேண்டும். இல்லாவிட்டால் கால் கட் ஆயிரும்.


வார விடுமுறை நாட்கள்.. நிலா நிலா ஓடி வா:


வார விடுமுறை என்றால், விடுதியில் இரவு நிலா சாப்பாடு சாப்பிடுவோம். அன்று மட்டும் தான் சைவ அசைவ உணவு தருவார்கள். அதற்கு ஓர் கூப்பன் வழங்குவார்கள். நானோ சைவம், அதற்கு ஒரு வாரம் சில்லி கோபி, மற்றொரு வாரம் வடை அல்லது போண்டா தருவார்கள். சில்லி கோபி போடும் நாளுக்காக காத்திருந்த வாரங்களும் உண்டு. 


சில நாட்கள் வடைக்கு தந்த கூப்பனை பத்திரமாக வைத்து சில்லி கோபி இரு முறை வாங்குவோம். வேறு சில நாட்களில் அந்த கூப்பனில் இருக்கும் சீல் நாங்களே ஓர் காகிதத்தில் மை பாட்டில் மூடி வைத்து வரைந்து அதை குடுத்து வாங்கி சாப்பிட்ட காலமும் உண்டு. 


நிலா சாப்பாடு உண்ட பின் புதிய படங்களை செமினார் அறையில் போடுவார்கள். தியேட்டரில் மோதும் நெரிசல் தான் அங்கும் இருக்கும். ஒரு முறை அங்கிருந்த இரும்பு கதவே உடைந்து விட்டது. அந்த அளவு நெரிசல்.


(தொடரும்)


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கதை, கவிதைகள் எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்