சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
- அ. தாமஸ்
நாம் கொடுக்கும் வாக்கு நம் தகுதியைத் தரணிப்படுத்தும் நாம் செலுத்தும் வாக்கோ நம்மை ஆளும் தகுதியுடைய தலைவனை தன் வயப்படுத்தும்.
வாக்கு கொடுக்குமுன் செயல்படுத்த முடியுமா என்றும் கொடுத்த பின் செயல்படுத்த வேண்டுமென்றும் யோசிப்பதே நம்மையே நமக்கு அடையாளப்படுத்தும்.
வாக்கு கொடுக்கும் முன் கொடுக்காத வாக்கு நம் வசம் கொடுத்தபின் அவ்வாக்குக்கே நாம் வசம் எனவே சிந்திப்போம் வாக்கை நம் வசமாக்க.
வாக்கு செலுத்துமுன் தகுதியான தலைவரை தேர்ந்திட யோசித்தால் தகுதியான தலைவரின் கீழ் இத்தரணியை யோசிக்காமலே நேசிக்கலாம்.
வாக்கு செலுத்தவும் பிறருக்கு வாக்கு கொடுக்கவும் முன்மதியோடு யோசித்தால் பின்னாளெல்லாம் நிம்மதியாய் சுவாசிக்கலாம்.
வாக்கு கேட்பவரிடத்தில் வாக்கு கொடுக்குமுன்னும், வாக்கு செலுத்து முன்னும் நம் தகுதியை நடுநிலை படுத்துவதே நன்மை பயக்கும்.
நமது நாளைய நிலையை உணராமலே கொடுக்கும் அனைத்தும் நாளை நம்மையே இல்லாமல் கெடுக்கும். எனவே வாக்கே நம் வாழ்க்கை என்பதில் கருத்தேற்றி வாக்கினைக் கொடுப்போம் வாழ்க்கையைக் காப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)