சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

Su.tha Arivalagan
Jul 23, 2026,04:38 PM IST

- அ.தாமஸ்


இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே. இறையில்லா இயற்கையும் இயற்கையில்லா இறையும் இவ்வவனியில் இல்லை என்பதே திண்ணம்.


உறங்கிய விழிகள் விழிப்பதும் விழித்தவுடன் நேற்றைய நிகழ்வை நினைப்பதும் இறையின் இணையில்லா அதிசயமே. ஆம் நீரை இளநீர் மலர் கனி காய் என பல நிலைகளில் ரசிக்கவும் ருசிக்கவும் செய்வதுதான் இறையின் உச்சம். 


விதைக்கும் விதையையும் விதையின் விளைச்சலையும் விளைச்சலின் பலனையும் தீர்மானிப்பது இறையே. ஆம் சில விதைகள் விதைக்கையிலேயே மண்ணுக்கு உரமாகிறது; சில விளைந்த பின் பதறாகிறது; இன்னும் சில உணவாய் சமைக்கப்பட்டு உண்ணும் நிலையில் கரம் தவறி தரைதொட்டு நமக்கு என்று நினைத்ததை யாரோ ஒருவருக்கு உணவாக்குகிறது. அந்நிலையிலும் கூட பயனற்று மீண்டும் மண்ணாகிறது. எப்பொருள் என்ன நிலையில் பயன் தர வேண்டும் என்பதை நிச்சயமாக நம்மால் தீர்மானிக்க முடியாது அதுதான் இயற்கையின் அசாத்தியம் இறையின் அதிசயம்.


நம் உடலிலே எத்தகு மாற்றங்கள் எப்பொழுது நடக்கும் என்பதையே நம்மால் தீர்மானிக்க முடியவில்லை தானே. ஆம் நம் உடல் தொடங்கி இவ்வுலகு வரை எது எப்படி எங்கே எப்பொழுது என தீர்மானிக்கும் ஒரே சக்தி தான் இயற்கை. அதை மிஞ்சும் கண்டுபிடிப்புகள் இன்று வரை இவ்வுலகில் இல்லை. 




கடவுள் துகளை காணலாம் அதிலும் கடவுளைத் தானே காண்கிறோம். இயற்கையின் அதிசயங்களை பார்க்கிறோம் ஒவ்வொன்றிலும் இறைவனைத் தானே பார்க்கிறோம். நம்மை வியப்பில் ஆழ்த்துவதும் ஒவ்வொரு நிலையிலும் இது எப்படி என வியக்கச் செய்வதும் விந்தையிலும் விந்தை தானே. 


முடியும் என்பது துவங்கும் நிலையிலே முடிந்து போவதும் முடியாது என்பது வியக்கும் நிலையில் வியத்தகு முடிவைக் கொடுப்பதும் தான் இயற்கையின் விசித்திரம். ஆம் எந்த ஒன்றையும் நினைப்பது நாம் நிறைவேற்றுவது இறைவன் மட்டுமே. ஒவ்வொரு நிலையிலும் மாற்றமும் உரு மாற்றமும் நிறைவேற்றமும் இறையின் மாற்றமே. எனவே தான் என்ற அகந்தை களைந்து எல்லாம் இறையாளும் இயற்கையாளும் தான் என்பதை உள்ளத்தாலும் உணர்வாளும் உணர்ந்து கவலைகள் களைவோம் தினம் தினம்  மகிழ்வோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)