சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!
- அ. தாமஸ்
பசி - உணவுப்பசி, உறவுப்பசி, உணர்வுப்பசி என பல நிலைகளில் பரிணமித்தாலும், உணர்வுப்பசி நிறைவுபெறும் வேளையிலேயே ஏனைய பசிகளும் தன்நிறைவு பெறுகின்றன. எனவே, பிறர் பசியை ஆற்ற நாம் நினைத்தால், நம்மால் பசி மறந்த பலரும் கூட பசிப்பிணி நீக்கும் பாங்கை உணர்ந்து பங்களிப்புச் செய்வர்.
பசியின் வலி உணராமல் பசியில் இருப்பவர்களின் வலியையும், பசி தீர்க்கும் வழியையும் உணர முடியாது. எனவே, பசியின் ஒவ்வொரு நிலையிலும், அதன் நிலை மாறாமலேயே உணர்ந்து, அது தரும் வலியை அனுபவித்து, வலியில் இருப்போரின் வலி தீர்க்கும் வரமாயிருப்போம்.
பகிரும் மனம் குன்றும் பொழுதே பசி பல நிலைகளில் மானுட மனங்களை ஆட்கொண்டு அடிமைப்படுத்துகிறது. எனவே, நம் புவியின் வாசம் இருக்கும் வரையிலும், இப்புவிவாழ் மக்கள் மீது நேசம் கொண்டு, நம் இருப்பை அறிந்து, நாளைய நம் இறப்பை உணர்ந்து, நம்வசம் இருப்பதை இல்லாதோருக்குப் பகிர்வதில் மகிழ்வோம்; பசியின் கோரமுகம் களைவோம்.
பல நிலைகளில் மாண்டு போதல் மானுடருக்கு மட்டுமல்ல பல்லுயிருக்கும் பொதுவானதே. அத்தகைய நிலை உணர்ந்து உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்.ஆம், உண்மையான நிறைவு என்பது இருப்பதைப் பொருத்ததல்ல; இருப்பதைத் தேவையுள்ளோரின் சேவையெனப் பகிர்வதிலேயே முழுமையடைகிறது.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)