சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!
- ஆ.வ. உமாதேவி, ஆசிரியர், திருத்தணி
பொதுவாக பயணம் போவது பலருக்கு பிடித்த விஷயம். ஏனெனில், பயணம் என்பது பலவித அனுபவங்களை கொடுக்கும் நிகழ்வாகும். நமது மன அழுத்தத்தை குறைத்து, புதிய கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் முதலியவற்றை அறிய உதவும் வாய்ப்பாக பயணம் அமையும். புதியவர்களுடன் பேசிப் பழகும் போது பல கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் கிடைக்கும்.
திட்டமிடுதல்
பயணம் செல்ல விரும்புபவர்கள் எங்கு செல்லலாம்? பார்க்க வேண்டிய இடங்கள் எவை? அங்குள்ள தட்பவெப்ப நிலை, அங்குள்ள சிறப்புகள், எந்த போக்குவரத்தை தேர்ந்தெடுப்பது? எத்தனை நாட்கள் செல்லலாம்? உணவு முறைகள் முதலியவற்றை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும்.
கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்பி நானும் என் கணவரும் சுற்றுலா குழுவுடன் இணைந்து 11 நாட்கள் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். 35 பேர் கொண்ட குழுவாக பயணித்தோம்.
தொடர்வண்டி, படகு, பேருந்து, ஆட்டோ, ரிக்ஷா என அனைத்து வகை வாகனங்களிலும் எங்களின் பயணம் மிகவும் இனிமையாக, நீங்கா நினைவுகளை கொண்டதாக அமைந்தது.
பாபு மற்றும் அவரது துணைவி புவனேஸ்வரி என்பவர்கள் எங்களை வழிநடத்தி அழைத்துச் சென்ற விதம் மிகவும் அருமை. நமது குடும்ப உறுப்பினர்கள் போல உடனிருந்து அனைத்து இடங்களையும் சுற்றிக் காட்டிய விதம் மிகவும் நன்று.
நளபாகம் எனும் சுவையான உணவை கொடுக்கும், சமையல் கலையில் தேர்ந்த உமாபதி, பாலா, முனுசாமி உடன் வந்திருந்து, அந்தந்த வேளைக்கு புதிதாக, சுவையாக, சூடாக சமைத்துக் கொடுத்து, அவற்றை அன்போடு பரிமாறி எங்கள் வயிற்று பசியை போக்கியதுடன் உள்ளத்தையும் நிறைத்து விட்டனர்.
மொழி தெரியாத இடத்தில் கூட சைகை மொழியாலே நம் உள்ளத்து உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்து கொண்ட மக்களை நினைக்கும்போது தான், நாம் அனைவரும் "இந்தியர்" என்ற ஒற்றுமை மேலோங்குகிறது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மற்றும் வாரணாசியில் உள்ள கிருஷ்ணர் மற்றும் ராமர் இவர்களின் ஜென்ம பூமியில் கால் வைத்தது பெரும்பாக்கியமே.
பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தது மிகுந்த மன நிறைவை தந்தது. புத்தகயாவில், புத்தர் ஞானம் பெற்ற இடத்தை பார்த்தது மிகவும் மனநிறைவை தந்தது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள திருவேணி சங்கமம் என்னும் இடத்தில் கங்கா, யமுனா கண்ணுக்குத் தெரிந்த வகையிலும் சரஸ்வதி கண்ணுக்கு புலப்படாத வகையிலும் மூன்று நதிகளும் இணையும் இடத்தை படகு சவாரியின் மூலம் சென்று பார்த்து விட்டு வந்தோம்.
காசிக்குச் சென்று அன்னை விசாலாட்சி மற்றும் அன்னபூரணியை வணங்கி பின், ஐயா காசி விஸ்வநாதரை தரிசித்தது மிகப் பெரும் பேரு. இப்பிறவியின் பலனை அடைந்து விட்ட திருப்தி ஏற்பட்டது.
இந்த பயணத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில், எளிய மக்கள் பல பேர் எங்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டதற்கு "தமிழ்நாடு" என்று சொன்னவுடன் CM விஜய் ஸ்டேட்டா என்று கேட்டனர்.
டீக்கடைக்காரர், பூக்கடைக்காரர், தொடர் வண்டியில் டீ விற்பவர், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ரூம் பாய்ஸ், ஆட்டோ ஓட்டுபவர், பழம் விற்பவர் என அடித்தட்டு மக்கள் கூட நம் மாநில அரசியலை அறிந்து வைத்திருப்பது மிகுந்த பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நமது மாநில முதல்வர் வடமாநிலங்களில் உள்ள எளிய மக்களிடம் சென்றடைந்திருப்பது, நமக்கெல்லாம் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதுடன் அவர்கள் நம் அரசியலை அறிந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்வண்டியில், எங்களுடன் பயணம் செய்த பீஹாரில் படிக்கும் கல்லூரி மாணவன் நமது முதலமைச்சரை பற்றி பேசியதும், குண்டூரை சேர்ந்த பஞ்சாபில் பணிபுரியும் ராணுவ வீரர் (பகல்காம் தாக்குதல் நிகழ்வில் ஆபரேஷன் சிந்தூர் 2025 மே 7ஆம் தேதி நிகழ்வில் பங்கெடுத்தவர்) நமது மாநில முதலமைச்சர் பற்றி பேசியது மிகவும் பெருமையாக இருந்தது.
இத்தனை பேர் உள்ளங்களில் நிறைந்தவர் சிறப்பானதொரு ஆட்சி தந்து, தமிழ்நாட்டை இந்திய மாநிலங்கள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைக்க நல்லதொரு ஆட்சி அமைய, மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)