நேர்மையே உன் நிறம் என்ன?
- அ.வென்சி ராஜ்
ஓவியா தன் மகன் வருணை அழைத்துக் கொண்டு பொதுவான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றாள். பெரிய மருத்துவமனை என்பதால் கூட்டமும் அதற்கு ஏற்றார் போல் இருந்தது. உள்ளே சென்று பெயரை பதிவிட்டாள். காத்திருப்போர் அறையில் அவளும் அவளது மகனும் அமர இடமில்லாமல் சிறிது நேர காத்திருப்பிற்குப் பின் ஆளுக்கு ஒரு இருக்கையில் அமர்ந்தார்கள்.
கைப்பேசியில் இவள் முகநூலை பார்த்துக் கொண்டிருக்க, கைக்கணினியில் அவளது மகன் இயற்பியல் தொடர்பான சில படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவர்களுக்கு அருகில் கரிய நிறம் உடைய உடல் ஒடுங்கிய ஒரு பெண்மணி வந்து அமர்ந்தாள். மருத்துவமனையின் நுழைவாயிலில் கொடுத்த வெற்று படிவத்தை ஓவியாவிடம் கொடுத்து இதில் கேட்டிருப்பவற்றை எனக்கு பூர்த்தி செய்து தர முடியுமா எனக் கேட்டாள். தமிழில் இருந்ததையே எழுத இயலவில்லை என்பதை பார்த்ததும் அப்பெண்மணி படிப்பறிவு இல்லாதவர் என்பதை ஓவியா புரிந்து கொண்டாள். உடனே அப்படிவத்தை வாங்கி அந்தப் பெண்மணியிடம் தகவல்களைக் கேட்டு முழுவதுமாக பூர்த்தி செய்து கொடுத்தாள்.
அப்பொழுது அந்த பெண்மணி அவரது பெயர் செல்வராணி என்பதை மிக மெதுவாக ஏற்ற இறக்கத்தோடு கோணல்மாணலாகத் தெளிவில்லாமல் கையெழுத்து போடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள் ஓவியா.
மணித்துளிகள் ஓடிக்கொண்டிருந்தது . ஓவியா மருத்துவரை பார்க்கும் நேரம் வந்தது. எழுந்து மருத்துவரை பார்த்து விட்டு வந்தாள். தன் மகனோடு சேர்ந்து மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினாள்.
செல்லும் வழியில் தான் அவளுடைய மகன் அம்மா "கை கணினியை அங்கேயே வைத்து விட்டு வந்து விட்டேன்" எனக் கூறினான். சொன்னவுடன் இவளுக்கு உடனே எண்ணம் அந்த படிக்காத பெண்மணியின் மீது போனது. ஐயோ அவர் அதை எடுத்துச் சென்றிருப்பாரோ என மனம் பதபதைத்தது . பதினைந்தாயிரம் விலை உள்ளதை இவ்வளவு அலட்சியமாக வைத்து விட்டாயே என தன் மகனை வினவியபடியே வேகமாக வண்டியை திருப்பினாள். வேக வேகமாக மருத்துவமனைக்கு இருவரும் வந்தார்கள். வந்து அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் போய் பார்த்தார்கள். அங்கே கைக்கணினி இல்லை. உடனே இவள் முடிவு செய்துவிட்டாள். அந்த பெண்மணி தான் எடுத்துச் சென்று விட்டாள் என உடனே ரிசப்ஷனில் சென்று முறையிட சென்றாள்.
அப்பொழுது ரிசப்ஷனில் உள்ள பெண்மணி இவர்களைக் கண்டதும் "மேம், உங்க கை கணினியை தேடி வந்தீங்களா?" எனக் கேட்டாள். "ஆம்" என்று இவள் சந்தேகத்தோடு பதில் தர, "உங்களுக்கு பக்கத்துல இருந்த செல்வராணிங்கறவங்க நீங்க வச்சிட்டு போயிட்டதாகவும், வந்து கேட்டா கொடுக்க சொல்லி என்கிட்ட கொடுத்துட்டு போனாங்க" அப்படின்னு சொல்லி எடுத்துக் கொடுத்தார்.
ஓவியாவுக்கு கன்னத்தில் பளார் என அறைவது போல் இருந்தது. தன்னையே திட்டிக் கொண்டாள். எப்படி ஒரு முட்டாள்தனமான முடிவு எடுத்து விட்டோம். நிறத்தையும் உருவத்தையும் பார்த்து தவறாக முடிவு செய்து விட்டோமே..? என வெட்கித் தலை குனிந்தாள்.
அந்தப் பெண்மணியின் நேர்மைக்கு அவளை இருகரம் கூப்பி வணங்க வேண்டும் என இவளுக்கு தோன்றியது. ஆனால் அந்த பெண்மணி அப்பொழுது அங்கு இல்லை.
தன் மகனிடம் தான் செய்த தவறினை எடுத்துக் கூறி மனம் வருந்தினாள். மனிதர்களை நிறத்தின் அடிப்படையிலோ, செல்வாக்கின் அடிப்படையிலோ, படிப்பின் அடிப்படையிலோ, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரித்து விடாதே என புத்திமதி கூறினாள். ஒருவரைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக பார்த்து ஒரு முடிவுக்கு வருவது முட்டாள்தனம் என்பதை தன் மகனுக்கு உணர்த்தினாள். வாழ்க்கையில் என்றுமே இந்த தவறை நீ செய்து விடாதே என அறிவுரையும் வழங்கினாள். அப்பொழுதுதான் அவளுக்கு நேர்மையே உன் நிறம் என்ன.? எனக் கேட்க வேண்டும் போல் தோன்றியது.....
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)