சாலைக்கு குடை பிடிக்கும் சாலையோர மரங்கள்!

Su.tha Arivalagan
Nov 10, 2026,04:38 PM IST

- அ.வெங்கடேஷ்


சுழித்து ஓடும் வையை நதி 

வேகமாய் நிறையும் 

பறவைகளின் குரலில்

கீழ் பிரவாளமாய் பெருக்கெடுத்தோடும் 

எண்ணங்களுடன் நான்.


ரசம் இழந்த ஆடியின் காட்சியாய்

மேகத்தின் பின் நிலவு


மரங்களின் அசரீரியாய் 

பறவைகள்


சாரலில் இருந்து 

சாலைக்கு குடை பிடிக்கும்

சாலையோர மரங்கள்




அதிகாலையில் வாகனங்களின் 

அணிவகுப்பாய் 

தலைநகரின் நுழைவாசல்


கடல் அலையில். 

சறுக்கி  விளையாடும் 

நிலவின் கிரணங்கள்


பாடும் மயிலின் 

பின் தாளமாய் 

தடதடக்கும் ரயில்


சொட்டும் நீரில் 

பெருகும் இசை


கத்தரிக்கோல்களில் உரையாடல் 

மேல் ஓங்கிய 

சிகை அலங்கார கடைகள்.


(கவிஞர் அ வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இருள் என்பது குறைந்த ஒளியே என்ற நூலின் ஆசிரியர்)