நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

Su.tha Arivalagan
Aug 11, 2026,05:23 PM IST

டில்லி : விண்வெளி ஆர்வலர்களும் ஆன்மீகப் பெரியோர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு அரிய நிகழ்வாக, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி அன்று நிகழ உள்ள சூரிய கிரகணம் தான். குறிப்பாக, இந்த விண்வெளி அதிசயமானது தமிழ் மாதமான ஆடி அமாவாசை நன்னாளில் வருவது இதன் சிறப்பை மேலும் கூட்டுகிறது.  


கிரகண நேரமும் விண்வெளி நிகழ்வும்:  


அறிவியல் ரீதியாக, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் மிக முக்கியமான சூரிய கிரகணம் (Solar Eclipse) ஆகஸ்ட் 12 அன்று உலக அளவில் அரங்கேறுகிறது. ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ரஷ்யாவின் சில வடக்குப் பகுதி மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகக் கண்டு களிக்க முடியும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இது பகுதி கிரகணமாகத் தெரியும்.  


இந்தியாவில் கிரகணத்தின் தாக்கம் என்ன?  




இந்திய நேரப்படி இந்த சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 அன்று இரவு தொடங்கி நள்ளிரவு தாண்டி நீடிக்கிறது. இது இரவு வேளையில் நிகழ்வதால், இந்தியாவில் இருந்து இந்த சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண இயலாது. இதன் காரணமாக, இந்தியாவில் இதற்குரிய 'சூதக காலம்' (கிரகண தீட்டு நேரம்) மற்றும் பாரம்பரிய வழிபாட்டு விதிமுறைகள் எவையும் பொருந்தாது என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விண்வெளி ஆர்வலர்கள் நாசா (NASA) போன்ற அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் இணையதள நேரலை மூலம் இந்த அற்புத நிகழ்வைக் காண முடியும்.  


ஆடி அமாவாசை வழிபாடுகளும் ஆன்மீகச் சிறப்பும்:  


இந்து மத நம்பிக்கைகளின்படி, அமாவாசை திதியும் சூரிய கிரகணமும் இணைந்து வருவது ஆன்மீக ரீதியில் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஆடி மாதம் என்பது ஆன்மீக வழிபாடுகளுக்கு உகந்த மாதமாகும். அதிலும் ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தல், கடலில் புனித நீராடுதல் மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நற்காரியங்களைச் செய்வது நமது மரபு.  கிரகணம் இந்தியாவில் நேரடியாகத் தெரியவில்லை என்றாலும், ஆடி அமாவாசை நாள் அன்று வழக்கமான ஆன்மீக வழிபாடுகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். 


குறிப்பாக, சிவபெருமானின் அருள் பெறவும், முன்னோர்களின் ஆசியைப் பெறவும் இந்தச் புனித நாளில் தியானம் மற்றும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவது மன அமைதியைத் தரும். விண்வெளி ஆர்வலர்கள் தொழில்நுட்பம் மூலம் இந்த அதிசயத்தைக் கண்டு ரசிக்கலாம்.