தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 ஜூன் மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை ஆனி மாதம் பிறந்துள்ளது. தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக வரும் ஆனி மாதம் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆனி மாதத்தை தேவர்களின் மாலைக்காலம் என்று அழைப்பார்கள். சிவபெருமானின் வழிபாட்டிற்கும், பெருமாள் வழிபாட்டிற்கும் இந்த மாதம் மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது.
ஆனி மாதம் இளவேனிற் காலம். கடும் கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசத் தொடங்கும் மாதம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே 'ஆனி திருமஞ்சனம்' எனப்படுகிறது.
ஆனித் திருமஞ்சன மகிமைகள் :
ஆனித் திருமஞ்சனத்தின் போது ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். அனைத்து சிவாலயங்களிலும் மாலை நேரத்தில் ஆனி மாத திருமஞ்சனம் நடைபெறும்.
ஆனி மாத முக்கியமான நாட்கள்:
ஆனி மாதத்தில் தான் தேவர்களை காப்பாற்ற திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் தேய்பிறை துவாதசி அன்று வருகிறது. பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து மந்தார மலையை தாங்கி தேவர்கள் அமிர்தம் கடைந்தெடுக்க உதவிய அவதாரமே கூர்மாவதாரம்.
ஆனிப் பௌர்ணமி :
'குரு பூர்ணிமா 'என்று அழைக்கப்படும் 'வியாசப் பூர்ணிமா 'அமைவதும் இந்த மாதத்தில் தான். இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெற திருவருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும். இந்த நாளில்தான் உலக நலனுக்காக மகான்கள் தொடங்கும் சதூர் மாத விரதம் வியாச பூஜையுடன் ஆரம்பமாகும். கோவில் கும்பாபிஷேகங்கள் அதிகமாக நடைபெறுவதும் ஆனி மாதத்தில் தான்.
"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று சிறப்பாக கூறப்படும் அருமையான திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார். தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களின் நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பர தலத்தில் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டற கலந்தார். பல்வேறு சிறப்பு பூஜைகள் இதனையொட்டி சிதம்பரத்தில் நடைபெறுகின்றன.
யோகினி ஏகாதசி :
ஆனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "யோகினி ஏகாதசி "என்ற பெயருடன் விஷ்ணு வழிபாட்டிற்கு சிறந்து விளங்குகிறது. இந்த நாள் விரதம் இருந்தால் கடும் நோய்கள் நீங்க சுகம் பெறலாம். ஹேமமாலி என்ற யட்சன் குபேரனின் சாபத்தால் குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான். யோகினி ஏகாதசி அன்று விரதம் இருந்து தன் நோயை குணமாக்கி நலம் பெற்றான் என்று கூறப்படுகிறது.
நிர்ஜலா ஏகாதசி :
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜலா ஏகாதசி "என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால் பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து வழிபாடு செய்ததனால் இப்பெயர் வந்தது. 'நிர்ஜலா' என்பதற்கு தண்ணீர் இல்லாமல் என்பது பொருள்.இது நீர் இல்லாமல் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் கடைபிடிக்கப்படும் ஒரு கடினமான விரதமாகும். இந்த விரதம் அனுசரிப்பதனால் ஒரு வருடத்தில் வரும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்கும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வழிபாடுகள் & கோவில்களில் விழாக்கள்:
இந்த மாதத்தில் தஞ்சை பெரிய கோவிலில் 'வராகி நவராத்திரி' சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை வழிபடுவார்கள்.
மாங்கனி திருவிழா :
புதுச்சேரி அருகே உள்ள காரைக்காலில் காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் இருக்கிறது. இங்கு ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி 'மாங்கனி திருவிழா' நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று கைலாசநாதர் மற்றும் அம்பாளுடன் திருவீதியுலா வரும்பொழுது பக்தர்கள் கூடை கூடையாக வீட்டின் மேற்புறத்தில் அமர்ந்து கொண்டு மாங்கனிகளை கொட்டுவார்கள்.
ஆனி மாத பௌர்ணமி அன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்தவெளியில் கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு பௌர்ணமி அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகம் செய்வார்கள். பின்னர் அந்த மாம்பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோவிலிலும்,ஸ்ரீ தாயுமானவர் சுவாமிக்கு வாழைப்பழ தார்கள் சமர்ப்பித்து,தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.பூஜைகள் நிறைவு அடைந்ததும் அர்ச்சகர் அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்.
ஆனி மாத விரதங்கள் :
ஆனி மாதத்தில் சில கோவில்களில், ஆனிப் பௌர்ணமியை ஒட்டி தெப்பத் திருவிழா நடைபெறும் மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் உள்ள தீர்த்த குளத்தில் தெப்பத் திருவிழா அன்று கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
ஆனி மாதத்தில் வரும் அரிய விரத நாட்களை கடைபிடிப்பதால் குடும்பத்தில் உள்ள தீராத நவகிரக தோஷங்கள் நீங்கும்.மேலும் , யோகினி ஏகாதசி அன்று குபேரனின் அருளை பெற்று தரும் விரதமும், குருவருளை பெருக்கும் வியாச பூர்ணிமா நாளில் கடைபிடிக்கப்படும் விரதங்களும் குடும்பத்தில் உள்ள பொருளாதார தடைகளை உடைத்து வாழ்வில் நீடித்த செல்வ வளத்தையும், மன அமைதியையும் பெருக்கும்.
ஆன்மீக சிறப்புகள் கொண்ட இந்த ஆனி மாதத்தில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறி, சகல சௌபாக்கியங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.