சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!

Jun 12, 2026,12:02 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 ஜூன் மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளாகும். 

 

"சிவனை வழிபடுவதே இந்த வாழ்வின் பயன்" என்பர் சிவனடியார். அதுவும் பிரதோஷ நாளில் சிவனை வணங்குவது மிகவும் சிறப்பு மிக்கது. ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் ஒரு தனி சிறப்பும் பலனும் கூறப்படுகிறது. இன்று நிகழும் பிரதோஷம் "சுக்கிரவார பிரதோஷம்" என்று போற்றப்படுகிறது. சுக்கிரன் என்றால் வெள்ளி.வெள்ளிக்குரிய இந்த நாளில் வரும் பிரதோஷம் ஆதலால் 'சுக்கிரவார பிரதோஷம்' எனப்படுகிறது.


பிரதோஷ காலத்தில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி மற்றும் சிவனுக்கு நிகழும் அபிஷேகங்களை கண்டு வழிபடுவது அதீத சிறப்பாகும்.இன்று ஈசனுக்கு மகாலட்சுமி அம்சமான வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் நீங்கும்.  செல்வ வளம் சேரும் என்று நம்பப்படுகிறது. இன்று ஈசனுக்கு பால் சாதம்,சர்க்கரை பொங்கல் போன்ற நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்க சகல பாவங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.


வில்வ இலை சமர்ப்பணம்: எம்பெருமான் ஈசனையும் நந்தி பகவானையும் அர்ச்சிக்க உகந்த வில்வ இலைகளைக் கொண்டு பிரதோஷ நாளில் வழிபட வேண்டும்.


"த்ரி ஜன்ம பாப சம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்" என்கிறது வில்வாஷ்டகம். 


இதன் பொருள் மூன்று ஜென்மங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஒரு வில்வ இலையை பக்தியோடு பரமனுக்கு படைப்பதன் மூலமே தீர்ந்து விடும். ஈசன் வில்வ இலைகளையும் வில்வக் காடுகளையும் விரும்புகிறவன் என்று புராணங்கள் கூறுகின்றன. வில்வ இலைகள் இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகியவற்றை தன்னுள்ளே கொண்டவை. 


சௌபாக்கிய சஞ்சீவினி என்னும் நூலும், புராணங்களிலும் மகாலட்சுமி தாயார் வில்வ காட்டில் தவம் செய்பவள் என்று கூறுகின்றன. எனவே வில்வத்தில் அன்னை மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது. இத்தனை மகிமை நிறைந்த வில்வ இலை கொண்டு ஈசனை பிரதோஷ தினத்தில் வழிபடுவது மிகவும் பலன் தரும்.


வழிப்பாட்டு முறைகள் :


 


பிரதோஷ காலம்:

 

மாலை 04:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள நேரம் பிரதோஷ வழிபாட்டிற்கு உகந்த நேரம் ஆகும். அருகில் உள்ள சிவாலயம் சென்று சிவபெருமான், பார்வதி மற்றும் நந்தி பகவானை பக்தி சிரத்தை உடன் வழிபட வேண்டும். மேலும், நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வம் இலை மாலை சாற்றி,பச்சரிசி மற்றும் வெல்லம் படைத்து வழிபடுவது நன்மை உண்டாக்கும்.


சோம சூத்ரம் பிரதக்ஷணம்:


நம்பியவருக்கு ஈசன் அருளும் நேரம் பிரதோஷ நேரம் என்பார்கள். தோஷங்கள் யாவும் அண்டும்  வேளையில் நாம் ஈசனின்  சன்னதியில் இருக்க வேண்டும் என்பதே இந்த வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும். ஒரு மாதத்தில் வரும் இரு பிரதோஷ தினங்களிலும் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி தேவரை முதலில் வழிபட்டு, பின் சோம சூத்ரம் பிரதக்ஷணம் செய்து பின் நந்தியின் இரு கொம்புகளின் வழி ஈசனை வழிபட வேண்டும்.


சுக்கிரவார பிரதோஷத்தின் சிறப்புகள் மற்றும் கூற வேண்டிய மந்திரம் :


இந்த நாளில் விரதம் இருந்து சிவனையும் நந்தி பகவானையும் வழிபட சகல சௌபாக்கியங்களும் அருளப் பெறுவோம்.


திருமணத்தடை நீங்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் மேம்படும். கடன் தொல்லைகள்  நீங்கி பண வரவு அதிகரிக்கும்.


மந்திரம்:


பிரதோஷ காலத்தில் "ஓம் நமச்சிவாய"அல்லது நமச்சிவாய மந்திரத்தை ஜபிப்பது மன அமைதியை தரும். மேலும் லிங்க அஷ்டோத்திரம், கோளறு பதிகம்,சிவபுராணம், திருநீற்றுப் பதிகம் போன்ற சிவன் பாடல்களை பாடி சிவனை வழிபடலாம். வேலைக்கு  செய்பவர்களாக இருந்தாலும் பிரதோஷ வேளையில் "ஓம் நமச்சிவாய "எனும் பஞ்சாட்சர  மந்திரத்தை உச்சரிப்பது சிறப்பு.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்