பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!

Jul 28, 2026,01:32 PM IST

புதுடெல்லி:  பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிடப்பட்ட செல்ஃபி வீடியோ ஒன்று திடீரென முடக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்குத் தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரிவித்து மெட்டா (META) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.


சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றியிருந்தார். அதில், தேர்வுத்தாள் கசிவு (Paper Leaks) விவகாரங்களுக்கு எதிராக நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தகவலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தச் செல்ஃபி வீடியோ இந்தியப் பயனர்களுக்குக் கிடைக்காத வகையில் முகநூல் தளத்தில் முடக்கப்பட்டது. 


“சட்டப்பூர்வ கோரிக்கையின் காரணமாக இந்த ஊடகம் உங்கள் பகுதியில் கிடைக்கவில்லை” (The attached media isn't available in your region due to a legal request) என்ற செய்தி அந்த வீடியோவின் கீழ் தோன்றியது. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வப் பதிவே இவ்வாறு முடக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.




இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ (META) விளக்கம் அளித்துள்ளது. பிரதமரின் வீடியோ முடக்கப்பட்டதற்குத் தங்களது அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே (Technical glitch) காரணம் எனக் கூறியுள்ள மெட்டா நிறுவனம், இந்தத் தவறுக்குத் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.


மத்திய அரசு சம்மன் :


மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரிய போதிலும், இந்த விவகாரத்தை இந்திய அரசு மிகத் தீவிரமாகக் எடுத்துக் கொண்டுள்ளது. பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடியோ முடக்கப்பட்டதற்குத் சரியான காரணம் என்ன, எதன் அடிப்படையில் சட்டப்பூர்வ கோரிக்கை எனக் காண்பிக்கப்பட்டது என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய தலைவர்களுக்கு (Global Leaders) மத்திய அரசு தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்