பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !

Sep 12, 2026,04:49 PM IST

- கலைவாணி கோபால்


பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்


இன்றைய மதுரைமாநகர் அன்றைய பாண்டிய நாடாக இருந்தது.  மதுரையில் உள்ள மணமேல்குடி  என்னும் தலத்தில் அவதரித்தவர். குலச்சிறைநாயனார். அவரின் காலத்தில் பாண்டிய நாட்டில் சமணம் மிகவும் மேலோங்கி திகழ்ந்தது. மன்னனும், சமண மதத்தை தழுவி ஆட்சி செய்து வந்தான்.


மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் அரசவையில் தலைமை அமைச்சராக பதவி வகித்திருந்தாலும், சைவத்திற்காக தொண்டு செய்து வாழ்ந்தவர் குலச்சிறை நாயனார்.


சிவனடியார்கள் யாரைக் கண்டாலும், அவர்கள் காலில் விழுந்து வணங்கி அவர்களை உபசரித்து அவர்கள் கையால் நீறு வாங்கி பூசி மகிழ்வார். எல்லோரையும் விட, உயர்ந்தவர்கள் சிவனடியார்கள் என்று கருதி வணங்கி வாழ்ந்தவர்.


அப்படி இவர் வாழ்ந்த காலத்தில் தான் சமணம் மேலோங்கி இருந்தது. கூன் பாண்டியனும், சமண மதத்தை தழுவி அவர்கள் பேச்சைக் கேட்டு நாடும் நாட்டில் உள்ள கோயில்களில் பூசைகள் ஒழுங்கின்றி அரங்கேறிக் கொண்டிருந்தது. 


கூன் பாண்டியனின் மனைவியோ  சிறந்த சிவபக்தை அவர் பெயர் மங்கையர்கரசி. இவரும், நாயனார் என்பது மிகப்பெரும் சிறப்பு (இவர் வரலாற்றை பின்பு பார்ப்போம்)


அமைச்சரும்,  ராணியாரும், சிறந்த சிவனடியார்களாக இருக்கும்போது, இவர்களால் அந்நாட்டில் சமணம் மேலோங்கி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆலயங்களிலும் பூசைகள் சரிவர நடக்கவில்லை. இதனால், பல ஆலயங்கள் பழுதாகிக்கொண்டிருந்த நிலையில், அமைச்சரும் ராணியாரும் என்ன செய்வது என்று தெரியாமல் ,மிகவும் வேதனை கொண்டு இருந்த நேரத்தில் தான்  திரு ஞானசம்பந்தர் அவதாரத்தை பற்றி அவர்கள் கேள்வி உற்றனர்.


இவர்களுக்குள், ஒரு எண்ணம் தோன்றியது. மன்னனை மீறி எதுவும் செய்ய முடியாது. என்ற காரணத்தினால் ரகசியமாக திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வர முடிவு செய்தனர். ஏனென்றால் ,அவர் மதுரை மண்ணில்  கால் பதித்தால், மதுரை மண்ணில் நிச்சயம் சைவம் தலை தூக்கும்  என்பது இவர்கள் இருவரின் திடமான நம்பிக்கையாக இருந்தது. மதுரை சொக்கநாதப் பெருமானிடம் நம்பிக்கை வைத்து திருஞானசம்பந்தரை அழைக்க தயாராகினர்.


அதன்படி, திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் இருந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வர முத்து பல்லக்குடன் குலச்சிறையாறே நம்பகமான ஆட்களுடன் சென்றார்.




அந்நேரத்தில், திருஞானசம்பந்தருடன் திருநாவுக்கரசரும், இருந்தார். குலச்சிறையாரின் செய்தியைக் கேட்டு திருநாவுக்கரசர் பெருமான். திருஞானசம்பந்தரை, மதுரைக்கு அனுப்ப மனமில்லாமல் தடுத்தார். ஏனென்றால்?  ஏற்கனவே, சமணர்களின் பெரும் சதியில் சிக்கி தவித்து மீண்டு வந்தவர்  திருநாவுக்கரசர் என்பதால் திருஞானசம்பந்தருக்கும் சமணர்களால் ஏதாவது தீங்கு விளையும் என்று அஞ்சினார்


சம்பந்தர்பெருமான் அப்பரை சமாதானம் செய்தார்.ஆனால் கிரகங்களின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், அப்பர் உடன்படவில்லை. *நாளும் கோளும் அடியார்க்கு ஏது* என்று சொல்லி மதுரை சொக்கநாத பெருமான் அனைத்தும் பார்த்து கொள்வார் என "கோளாறு பதிகம்" பாடி குலச்சிறையார் உடன் மதுரை நோக்கி சென்றார் திருஞானசம்பந்தர்.


சம்பந்தர் பெருமானின் வருகை அறிந்து அடியார் கூட்டத்துடன் மக்கள் கூட்டமும்  அவரை வரவேற்க திரளாக திரண்டனர்.இந்த செய்தி சமணர்கள் காதில் விழுந்தது.உடனே இந்த செய்தியை அவர்கள் அரசரிடம் சொல்லி மதுரைக்கு சம்பந்தர் பெருமான் வருவதை தடுக்க வேண்டும் என முறையிட்டனர்.


மதுரையின் மன்னனான கூன் பாண்டியனும், அமைச்சர் குலச்சிறையாரை அழைத்து இது சம்பந்தமாக விவாதித்தார். குலச்சிறையாறும் நம் நாட்டுக்கு வரும் மதஞானிகள், அறிஞர்கள், வாதிட விரும்புவோர், என்பவர்கள் எந்நாட்டுக்கும் செல்லலாம் . அவர்களுக்கு தடை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .அவர்கள் தந்திரத்தாலோ, வாதாடி வென்றாலோ, அவர்கள் வைக்கும் கோரிக்கைகளையோ, கூற்றுக்களையோ,  ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்ததாக மன்னனிடம் எடுத்துரைத்தார்.


குலச்சிறையாரின் ஆலோசனையை கேட்ட மன்னனுக்கும் ,அது சரி என தெரிந்தது. அதனால், அவர் திருஞானசம்பந்தர் வருகையை எந்த தடையும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார். இதை ,அறிந்த சமணர்கள் மிகவும் கோபம் உற்று மன்னனிடம் வாதிட்டனர் .


மன்னனும் ,ஒரு நாட்டின் காலம் தொட்டு வரும் மாண்பினை எக்காரணம் கொண்டும், நான் மாற்றி அமைக்க முடியாது .என சமணர்களிடம் பதில் அளித்தார்.


மதுரையை அடைந்த சம்பந்தபெருமானை மிகவும் ஆரவாரமாக குலச்சிறையாரும் அரசி மங்கையர்கரசியாரும் , வரவேற்று வணங்கினர் .அந்த இடத்திலேயே மங்கையர்கரசியாரை பார்த்தவுடன் சம்மந்தரும் *மங்கையர்க்கரசி வளரகோண் பாவை* எனும் பாடல் வரிகளில் தொடங்கி" ஆலவாய் ஆவதும் இதுவே "என முடியும் பதிகத்தை பாடினார்.


திருஞானசம்பந்தர், தொடர்ந்து மதுரை மாநகருக்குள் பவனி வந்தார். அவரின் முத்துச்சிவிகை மதுரை வீதிகளில் உலா வருவதை அறிந்தும், சுற்றி இருந்த சிவனடியார்கள் சிவ சிவ அர அர என்று சொல்லி திருநீறு அணிவதை கண்டதும், சமணர்கள் மேலும் சீற்றம் கொண்டனர்.


மக்களோ பாண்டிய நாடு செய்த தவப்பயனால் அங்கு படிந்த சமணத்தின் புற சமயக் கறையை அழித்து சைவநெறி தழைத்து ஓங்க" *பர சமய கோளரி வந்தானம்மா*" என சொல்லி கண்களை துடைத்துக் கொண்டனர்.


மதுரையை அடைந்த சம்மந்தர் பெருமான் முதன்முதலாக பாண்டிய  நாட்டிலுள்ள ஆலவாய் ஆலயத்தில் உள்ள சொக்க நாதனையும், அன்னை உமையவளையும், கண்டார் உருகி நின்றார். உமையவளோ உனக்கு வெற்றி கிட்டும் என்று கண்களால் புன்னகை செய்ததாகவே அவர் கருதினார்.


குலச்சிறையார் சம்பந்தரை அழைத்து வந்தாலும் ,அப்பர் பெருமானுக்கு தோன்றிய அச்சம் அவர் மனதிலும் இருந்தது .அதனால், சம்பந்தரை தன் கண்ணின் மணி போல காத்து வந்தார் .சமணர் எங்காவது ஊடுருவி ஏதாவது ,செய்து விடுவார்களோ? என்பதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார். அவருக்கு சமணர்கள் பற்றிய அச்சம் நிறையவே இருந்தது.


பொல்லா சமணர்கள் அன்று இரவே, ஒன்று கூடி தங்களின் சக்தி மிக்க மந்திரங்களை பிரயோகித்து, சம்பந்தர் தங்கி இருந்த திருமடதின் மேல்  தீ மூட்டினர் . அங்கு தீ பற்றி எரியும் என சமணர்கள் நினைத்தனர். ஆனால் அவர்கள் மந்திரம் பொய்த்தது. சமணர்களின் சதியை அறிந்த  சம்பந்த பெருமான் "செய்யனே திரு ஆலவாய்" சிவனடியார்கள் வாழும் திருமடத்திற்கு சமணர்கள் இட்டத் தீ பையவே சென்று பாண்டியருக்கு ஆகுக"என்னும் திருப்பதிகம் பாடியபடி  இருந்ததினால், அந்த தீ அவர்களை நோக்கி திரும்பியது.


திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம் பாண்டியநாடு என குறிப்பிட்டதால் அந்நாட்டு மன்னனையும் அந்த தீ சென்று துன்புறுத்தியது. கூன் பாண்டியனுக்கு மெல்ல, மெல்ல ,காய்ச்சல் ஏற்பட்டு வெம்மை நோய் அதிகரித்தது. சமணர்களின் எந்த மந்திரங்களும் பாண்டிய மன்னனுக்கு உதவவில்லை. ஆனால் சமணர்களுக்கு தெரியும். இது அவர்களால் வந்த விளைவு என்று.


வெம்மை நோயால் துடித்த கூன் பாண்டியனும், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். மங்கையர்க்கரசியார் சம்பந்தரை அழைக்க மன்னனிடம் அனுமதி கேட்டார். மன்னனுக்கும் வேறு, வழியில்லை. அவரால் அந்த வெப்பத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சம்பந்தரை அழைத்து வர சம்மதித்தார்.


ஞான வடிவாக அரண்மனைக்கு வந்த திருஞானசம்பந்தரை கண்டவுடன் மன்னன், தன்னை அறியாமல் அவரை வணங்கினான். இதை அறிந்த சமணர்கள் இவனை விட்டால் இவன் மன்னனை மாற்றி விடுவான் என அஞ்சி மன்னருக்கு, ஒரு பாகம் தாங்களும், மற்றொரு பாகம் திருஞானசம்பந்தரும் வைத்தியம் செய்யட்டும் ,என மல்லு கட்டினர். 


மன்னரும், அதற்கு ஒப்புக் கொண்டார். சமணருக்கு பஞ்சமந்திரம் உண்டு . அவர்கள் அதை உபயோகித்தனர் ஒரு பயனும் இல்லை .ஆனால், வலப்பக்கம் நின்ற திருஞானசம்பந்தர். "பஞ்சாட்சர மந்திரம்" ஓதி 'மந்திரம் ஆவது நீறு'பதிகத்தை பாடி திருநீற்றை அவரின் வலபுறத்தில் தடவினார். வலப்பக்க நோய் தீர்ந்தது .மன்னன் உடல் குளிர்ந்தது. இடப்பக்கம் சமணர்கள் மந்திரம் சொல்ல,  மேலும், வெம்மை அதிக பட தொடங்கியது. 


அலறிய மன்னன் சமணரை விரட்டியடித்து. சம்பந்தரை ,இடது பக்கமும் நீறு இட சொன்னார். இடது பக்கமும் அவருடைய, வெம்மை நோய் தீர்ந்து பரிபூரண குணமடைந்தார். திருஞானசம்பந்தர் காலில் ,மன்னனும் விழுந்து வணங்கினான்.


நடப்பதை எல்லாம் பார்த்த சமணர்களுக்கு மேலும்  பொறாமை அதிகரித்தது. தாங்கள் தோற்று விட்டோம் என மன்னனுக்கு தெரிந்தால் ,இது மிகப்பெரிய அவமானம் என நினைத்து திருஞானசம்பந்தரை வாதம் செய்ய அழைத்தனர்.


முதலில் அணலிடை வாதம் நடந்தது அதில் ஞான சம்மந்தர் பெருமான் வெற்றி பெற்றார் . திருநள்ளாறு என்று அழைக்கப்படும் தர்பாரண்யேஸ்வரரை நினைத்து ஒரு ஓலையில் பாடல் எழுதி நெருப்பில் இட்டார்.  இதில் இவருடைய பாடல்கள் எரியவில்லை. சமணர்களின் ஓலைகள் எரிந்து சாம்பலாயின. இருந்தும், சமணர்கள் தாங்கள் தோற்றத்தை ஏற்கவில்லை.


இரண்டாவதாக, புனலிடை வாதத்திற்கு அழைத்தனர் .இது ஓலைகளில் பாடல்கள் எழுதி ஆற்றில் விடப்படும் ஓலைகள் அடித்துச் செல்லப்பட்டால் ,அது தோற்றதாகவும், அடித்துச் செல்லப்படாமல் ஓலைகள் ஆற்றில் இருந்தால் வென்றதாகவும் அவர்களே முடிவு செய்தனர். அதற்கும் ஞான சம்பந்தப் பிள்ளை சம்மதித்தார். வைகையில் சமணர்கள் ஓலையினை விட அது அடித்துச் சென்றது .சம்பந்தர் "வாழ்க அந்தணர்" என தொடங்கும் பாடலை எழுதிய ஓலை நீருக்கு எதிரே எதிர்த்து மிதந்து வந்தது. 


சமணர்கள் தாங்கள் தோற்றத்தை ஒப்புக்கொண்டு மதுரையை விட்டு (கழுவேற்றல் என்ற ஒரு வகையான அதாவது, வாதத்தில் தோல்வி உற்றவர்கள்  தங்கள் மேலடையை கழு மரத்தில் தொங்கவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்று விட வேண்டும்) என்பது இதன் பொருள். மதுரை விட்டு நீங்கினர் சமணம் ஓய்ந்து திருஞானசம்பந்த பெருமானால் சைவம் மதுரையில் பரவியது.


இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மங்கையர்கரசிரும், குலச்சிறையாரும், குலச்சிறையார் சிவ பக்தர் மட்டுமல்ல, மன்னன் சமண சமயத்தில்  இருந்த போதும், அதற்கு அஞ்சாமல் சிவனடியார்களை கண்டால் அவர்களை உபசரிப்பதும், வணங்குவதுமான தனது சிவத்தொண்டினை மறவாமல், முதன்மையாகக் கொண்டு செய்து வந்தார். மதுரையில் சமணம் ஓழிந்து சைவம் பரவ முக்கிய காரணமாக இருந்தவர். தைரியமாக திரு ஞான சம்மந்தரை தேர்ந்தெடுத்து மதுரை கொண்டு வந்ததும் அவரின் ஆலோசனை படியே நடந்த நிகழ்வாகும். மதுரையில் சைவம் வளர சிறப்பு காரணமாக இருந்தவர். சமணர்கள் காலத்தில் திருஞானசம்பந்தரை தைரியமாக மதுரைக்கு கொண்டு வந்தவர். என்பது மிகவும் சிறந்த செயலாகும் அதில் அவர் வெற்றியும் பெற்றார்.


சமணம் என்னும் காரிருள் நீங்கி சைவம் என்னும் விளக்கு மதுரையில் எரிந்தது. திருஞானசம்பந்தரும் தன் பணியினை முடித்து திரும்பவும் வேளையில்" குணங்கொடு பணியும் குலச்சிறை" என குலச்சிறையாரை வாழ்த்தி  மதுரை விட்டு சீர்காழி நோக்கிச் சென்றார்.


குலச்சிறையாரின் குருபூஜை ஆவணி மாதம், அனுஷ நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.


எம்பிரான் குலச்சிறை நாயனார் திருவடிகள் போற்றி போற்றி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்