ஆசானின் கருணை!
- சசிகலா விஸ்வநாதன்
பேராசிரியர் ஸ்ரீநிவாசனின் வகுப்பு. மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ரசனையான மனிதர். இரசாயன பாடங்களை இவர் போல் எளிதாக எவராலும் கற்றுக் கொடுக்க இயலாது. தங்கு தடையின்றி சொற்பொழிவு ஆற்றும் திறமையால் அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவராய் இருந்தார்.
மாணவர்கள் இன்று மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரையாண்டு தேர்வின் முடிவுகளின் விடைத்தாள்களோடு வகுப்புக்கு வந்தார். ஒவ்வொருவராக பேரைச் சொல்லி அழைத்து அவர்கள் வாங்கின மதிப்பெண்களையும் உரக்க அறிவித்த வண்ணம் இருந்தார்.
"ஆறுமுகம்...22; பாலாஜி... ,20...சந்துரு... 15.. டானியல்....... என்பதாகப் போய்க்கொண்டே இருந்தது. ஒருவர் மதிப்பெண் கூட ஐம்பதைத் தாண்டவில்லை. விடைத்தாள் வாங்கின மாணாக்கர்கள் முகம் கல்லாக இறுகி இருந்தது.
உபேந்திரன்தான் சொன்னான்," மொத்த மதிப்பெண் நூறாக இருக்காது. ஐம்பதாக இருக்க வாய்ப்பு உள்ளது. ப்ரதீபன் " சார் மொத்த மதிப்பெண் எத்தனை என்று நீங்கள் சொல்லவே இல்லையே," என்று கேட்கவும் ஆளாளுக்கு" அவுட் ஆஃப்... அவுட் ஆஃப்" எனக் கூக்குரலிட ஆரம்பித்தனர்.
ஶ்ரீநிவாசன் கையமர்த்த; அவர்கள் அமைதியானார்கள்.
"மொத்த மதிப்பெண்ணா?அதைத் தெரிந்து கொள்வதில் என்ன ஸ்வாரஸ்யம்? நீங்கள் வாங்கியதெல்லாம் ‘அவுட் ஆஃப் மெர்சி ‘என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்’ என்றதும் மாணவர்கள் அந்த இறுக்கத்திலும் பெரிதாக சிரிக்க; பேராசிரியரும் அந்த சூழலில் சிரித்து விட மதிப்பெண் கொடுக்கும் வைபவம் இனிதே நிறைவேறிற்று.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)