சத்யாவின் விடியல்

Jun 10, 2026,12:08 PM IST

- ச. ராஜேஸ்வரி


அன்று காலை பள்ளிக்குள் நுழைந்தபோதே சுமதி டீச்சரின் மனம் பரபரப்பாகவும் கலக்கமாகவும் இருந்தது. நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது அவள் கண்ட ஒரு காட்சி அவளை உலுக்கியிருந்தது. யாரோ ஒருவரின் இறுதியாத்திரை ஊர்வலத்தில், கூட்டத்திற்கு முன்னால் ஒரு சிறுவன் தீவிரமாக நடனமாடிக் கொண்டிருந்தான். கலைந்த தலைமுடி, அழுக்குத் துணிகளுடன் இருந்த அந்தப் பையன், தன் வகுப்பில் படிக்கும் சத்யாவைப் போலவே அவளுக்குத் தோன்றியது. ஆனால், அவன் ஆட்டத்தில் அங்கும் இங்கும் திரும்பியதால் அவளால் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. "இல்லை, அவனாக இருக்காது... என் மனசு சும்மா கற்பனை பண்ணுது" என்று தனக்குள்ளேயே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.


இருந்தாலும், சத்யா பல நாட்களாகப் பள்ளிக்கு வராதது அவளுக்கு ஞாபகம் வந்தது. உடனே, தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று வருகைப் பதிவேட்டை எடுத்துப் பார்த்தாள். அவளது சந்தேகம் உறுதியானது; கடந்த 10 நாட்களாக சத்யா பள்ளிக்கு வரவில்லை.


"இன்று எப்படியாவது அவன் வீட்டிற்குச் சென்று நேரில் பார்த்துவிட வேண்டும்" என்று முடிவெடுத்தாள் சுமதி. உடனே தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று, நகர்வுப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தைக் கிளப்பினாள்.


வண்டியை ஓட்டிச் செல்லும்போது அவள் மனதிற்குள், "நேற்று பார்த்த பையன் சத்யாவாக இருக்கக் கூடாது. அவனுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும், என்று அவனது பெற்றோர் சொல்ல வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள்.


சத்யாவின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றபோது, அது ஒரு சிறிய குடிசை வீடாக இருந்தது. சுமதி வீட்டிற்குள் நுழைந்து, "சத்யா இருக்கிறானா?" என்று குரல் கொடுத்தாள்.


உள்ளிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தாள். சுமதி தன்னை ஒரு பள்ளி ஆசிரியை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, "நீங்கள் யார்?" என்று கேட்டாள்.


அதற்கு அந்தப் பெண்மணி, துணி துவைக்கும் வேலையைத் தொடர்ந்துகொண்டே, அலட்சியமான குரலில், "நான் அவனோட சித்தி. அவன் எங்கேயாவது மேயப் போயிருப்பான்" என்றாள்.




"சத்யாவின் அப்பா எங்கே?" என்று சுமதி கேட்க, "அவர் வேலைக்குத் போயிருக்காரு. எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க" என்றாள் அந்தப் பெண்.


"சத்யா கடந்த 10 நாளா பள்ளிக்கு வரல, அதான் என்னாச்சுன்னு கேட்க வந்தேன்" என்றாள் சுமதி வருத்தத்துடன்.


அதற்கு அந்தச் சித்தி, எந்தவித அக்கறையும் இல்லாமல், "அவன் எங்க ஸ்கூலுக்குப் போறான்? பிணத்துக்கு முன்னாடி ஆடிட்டு காசு சம்பாதிக்கிறான். இது என் வீட்டுக்காரரோட முதல் தாரத்துப் பையன். சொன்னா கேட்க மாட்டேங்குறான்" என்று திரைப்படங்களில் வரும் கொடூரமான சித்தியைப் போலப் பேசினாள். இதைக் கேட்டதும் சுமதியின் மனம் கனத்துப் போனது. சத்யா இப்போது எங்கே இருக்கிறான் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டாள்.


சுமதி சொன்ன இடத்தை அடைந்தபோது, அங்கே சத்யா சில சிறுவர்களுடன் சேர்ந்து 'பான்ட் வாத்தியம்' வாசிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். தன் வகுப்பு ஆசிரியை அங்கே நிற்பதைக் கண்டதும் சத்யாவிற்குச் சுருக்கென்றது. முகத்தில் தயக்கத்துடனும் பயத்துடனும் அவளையே பார்த்தான்.


சுமதி அவனருகே சென்று, "உன்னைப் பார்க்கத்தான்டா உன் வீட்டுக்கு போயிருந்தேன். உங்க சித்தி இருந்தாங்க. ஏன் 10 நாளா ஸ்கூலுக்கு வரல?" என்று அன்போடு கேட்டாள்.


அவளது அன்பான கேள்வியில் சத்யா கண்கலங்கி, "மிஸ்... அது வந்து மிஸ்... அது வந்து..." என்று மேற்கொண்டு பேச முடியாமல் தயங்கி நின்றான்.


அதற்குள் அருகில் இருந்த ஒருத்தர், "அவன் எப்படிம்மா ஸ்கூலுக்குப் போவான்? வீட்ல அவனுக்குச் சாப்பாடு சரியா போடுறது இல்லம்மா. சாப்பாடே இல்லாதப்ப அவன் எப்படிப் படிப்பான்? அவங்க சித்திக்கு அவன் மேல பாசமே இல்லை" என்று சத்யாவின் சூழ்நிலையை விளக்கினார்.


சுமதியின் கண்கள் கலங்கின. சத்யாவின் தோளைத் தொட்டு, "சரி வாடா... இப்ப நேரா வீட்டுக்கு போய் யூனிபார்ம் மாத்திக்கிட்டு ஸ்கூலுக்கு வா. பள்ளிக்கூடத்துல சத்துணவு இருக்கு, சாப்பிட்டுக்கலாம். காலை உணவு இனிமேல் நானே உனக்குத் தர்றேன். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளு" என்று தைரியம் கூறினாள்.


ஆசிரியையின் இந்த வார்த்தைகள் சத்யாவிற்குப் புதிய நம்பிக்கையைத் தந்தது. அவன் வீட்டிற்குச் சென்று சீருடை அணிந்து கொண்டு அவளுடன் பள்ளிக்கு வந்தான்.


அடுத்த இரண்டு நாட்களும் சுமதி சத்யாவைத் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைத்தாள். அவனிடம் தனியாக அமர்ந்து படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அது அவனது எதிர்காலத்தை எப்படி மாற்றும் என்பதைப் பற்றியும் அக்கறையுடன் பேசினாள்.


அதோடு நிறுத்தாமல், சத்யாவின் அப்பாவையும், சித்தியையும் பள்ளிக்கு வரவழைத்துப் பேசினாள். தாய் இல்லாமல், அன்பிற்கு ஏங்கும் சத்யாவின் தற்போதைய நிலையை அவர்களுக்கு விவரமாக எடுத்துரைத்தாள். ஒரு குழந்தைக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், வீட்டில் அவனுக்குத் தேவையான அன்பும் உணவும் கிடைக்க வேண்டும் என்பதையும் புரிய வைத்தாள்.


சுமதி டீச்சரின் பேச்சைக் கேட்டு சத்யாவின் அப்பாவின் கண்கள் கலங்கின. "இனி என் மகனை நல்லா படிக்க வைக்கிறேன் மிஸ், உறுதியா பார்த்துக்கிறேன்" என்று வாக்குக் கொடுத்தார்.


சித்தியின் மனமும் மாறியது. அவளது கண்களும் கலங்கின. அவள் அன்போடு சத்யாவைத் தன் அருகில் அழைத்து, "இன்னைக்கு நைட்டு உனக்கு பிடிச்ச மாதிரி டிபன் செஞ்சு வைக்கிறேன்டா... ஸ்கூல் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வா" என்று ஆசையோடு கூறினாள். சத்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.


ஆண்டுகள் உருண்டோடின. ஆசிரியையின் அன்பும், குடும்பத்தாரின் அரவணைப்பும் சத்யாவை முழுமையாக மாற்றியிருந்தது. வறுமையிலும், புறக்கணிப்பிலும் வாடிய அந்த மாணவன், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியிலேயே சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தான்.


கதையின் நீதி:


வறுமையோ, குடும்பச் சூழ்நிலையோ நம் கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது. தவறான வழிகாட்டுதலால் பாதைகள் மாறினாலும், ஆசிரியர்களின் அன்பான கண்டிப்பும், நல்வழிகாட்டுதலும் நம்மைச் சாதிக்க வைக்கும்.


"சுமதி டீச்சரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் இல்லாவிட்டால், சமூகத்தில் பல சத்யாக்கள் முகவரியற்றுப் போயிருப்பார்கள். ஆசிரியர்களை மதித்து, கல்வியைக் கவசமாக்கிக் கொண்டால் எந்த ஒரு மாணவனும் வாழ்வில் உன்னத நிலையை அடையலாம்!"


(ச. ராஜேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்), நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் ராயப்பேட்டை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்