டெல்லி: கடந்த 26 நாட்களாக நானும், எனது குடும்பமும் அடைந்த துயரத்தையும், வலியையும் உணராதவர்கள்தான் என்னைக் குற்றம் சாட்டுகின்றனர். இன்னும் நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்என்று சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் கேட்டுள்ளார்.
டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த அவர் மத்திய அரசின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது போராட்டத்தைக் கைவிட்டார். இதையடுத்து தற்போது விரிவான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது சகோதர சகோதரிகளான மாணவர்களுக்காக 26 நாட்கள் பட்டினியாக இருந்த பிறகு... எனது உடலில் 11 கிலோ எடை குறைந்துவிட்டது, தசைநார்கள் பலவீனமடைந்துவிட்டன. உறுப்புகளுக்கும் மூளைக்கும் மீட்க முடியாத அளவுக்குச் சேதம் ஏற்படும் விளிம்பை அடைந்துவிட்டது. அதுவும் லடாக்கின் கடும் குளிரிலிருந்து டெல்லியின் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து இதையெல்லாம் செய்த பிறகு, எனது உண்ணாவிரதம் எவ்வளவு தூய்மையானது என்பதற்கு யாரிடமாவது நான் நடத்தை சான்றிதழ் பெற வேண்டுமா?
நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன் என்றால், யார் கையால் முடித்தேன்? அவர் கையால் ஏன் முடித்தேன்? இவர் கையால் ஏன் முடிக்கவில்லை? என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது, என்ன பேரம்பேசப்பட்டது? இதற்கெல்லாம் நான் பதிலளிக்க வேண்டுமா?

நான் நேற்றிலிருந்து திரவ உணவை அருந்தி வருகிறேன். இப்போதுதான் உடலில் சிறிதளவு தெம்பு வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அந்தத் தெம்பை நான் இதற்காகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மிகுந்த மனவருத்தத்துடன் சொல்கிறேன்... காலை முதலே பலர் எனக்கு போன் செய்தோ அல்லது சமூக வலைதளப் பதிவுகளைக் காட்டியோ, என் மீது பல கேள்விகள் எழுப்பப்படுவதாகச் சொல்கிறார்கள்: "இவர்களைக் கொண்டு ஏன் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தீர்கள்? மத்திய அமைச்சர்களைக் கொண்டு ஏன் முடிக்க வைக்கவில்லை? வேறு யாரையாவது கொண்டு ஏன் முடிக்க வைக்கவில்லை? என்ன ஒப்பந்தம் நடந்தது? என்ன பேரம்பேசப்பட்டது?" - இதற்கெல்லாம் நான் பதிலளிக்க வேண்டுமாம்!
பேரம்பேச வேண்டியிருந்தால், ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தால் 26 நாட்கள் பட்டினியாக இருக்க வேண்டுமா? எத்தனை பேர் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள், நீங்கள் பார்த்திருப்பீர்களே! அவர்கள் இப்படியா ஒப்பந்தம் செய்வார்கள்? ஆடம்பரமான ஏசி அறையில் உட்கார்ந்து என்னால் பேரம் பேச முடியாதா? நான் என்ன டெல்லியின் வெயிலில் சாலை ஓரத்தில் உட்கார்ந்தா பேரம் பேச வேண்டும்?
இப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ணங்கள் உருவாகும் மனங்களைக் கொண்ட இந்த நாட்டின் மீது வெறுப்புதான் வருகிறது!
நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லை... உங்களில் பெரும்பாலோருக்கு உண்மை நிலை தெரியாது என்பதால். சூழ்நிலை என்னவென்று தெரியாது, கடந்த ஒன்று இரண்டு வாரங்களில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் என்ன கடந்துபோனது என்று தெரியாததால் நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் சிலர் வேண்டுமென்றே சொல்கிறார்கள், அவர்களுக்கு உண்மை தெரியும். அதனால், பேச்சை முழுமையாகக் கேட்பதற்கு முன்பு அதன் பின்னணியை நிச்சயம் பாருங்கள். அவர்களுக்கு ஏதேனும் வஞ்சகம் இருக்கிறதா? அவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா? அந்த அரசியல் கட்சிக்கு வேறு ஏதேனும் அரசியல் கட்சி மீது வன்மம் இருக்கிறதா, அல்லது அவர்கள் நடுநிலையான மனிதர்களாகப் பேசுகிறார்களா? ஒருவேளை நடுநிலையாகப் பேசுகிறார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், எனக்கும் சொல்லுங்கள். நான் பதிலளிக்க முயற்சிப்பேன். புரிந்துகொண்டாலும் புரியாவிட்டாலும் எனக்கு நல்லெண்ணமும் உங்களுடன் அனுதாபமும் இருக்கிறது.
இந்த நாட்களில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலையில் ஏன் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது, ஏன் இந்த முறையில் கைவிடப்பட்டது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், முதலில் நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன்.
18 ஆம் தேதி என்னை வலுக்கட்டாயமாக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அது வெறும் மருத்துவமனை மட்டுமல்ல; அது ஒரு ராணுவ முகாம். ஒரு கைதி கூட இருக்க முடியாத அளவுக்கு என்னை அடைத்து வைத்த ஒரு சிறைக்கூடம். ஒவ்வொரு விஷயத்திற்கும் தடை இருந்தது, அறையை விட்டு வெளியே போக முடியாது. ஒரு பறவை கூட பறக்க முடியாது. எங்கள் அறை வரை யாரையும் சந்திப்பதற்கு உரிமை இருக்கவில்லை, மூன்று உறவினர்கள் மட்டுமே இருக்க முடிந்தது. தொடர்பு கொள்ள மொபைல் போனோ, லேப்டாப்போ நான் வைத்திருக்க முடியவில்லை. யாருக்கும் எங்கும் எந்தச் செய்தியும் அனுப்ப முடியவில்லை. உங்களுக்கு நான் ஏதோ ஒரு வகையில் டிஷ்யூ பேப்பரில் எழுதி அனுப்பினேன், அதுவும் பெரும்பாலான நேரங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. என்னைச் சந்திக்க லடாக்கில் இருந்து சிறப்பு விமானத்தில் லண்டன் டிக்கெட் விலைக்கு இணையான தொகையைக் கொடுத்து வந்த என் உறவினர்களும் நண்பர்களும் கூட திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இது எல்லாமே சட்டவிரோதமானது! நம் நாடு ஒரு வட கொரியாவைப் போல மாறியிருந்தது. குறிப்பாக நான் இருந்த இடம் ஒரு சிறைச்சாலையாக இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில் பல நாட்கள் கழிந்த பிறகு, கீதாஞ்சலி அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் திறமையும்தான் காரணம்... ஞாயிற்றுக்கிழமை கூட டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வைத்து, அதில் மேல்முறையீடு செய்து நான் காவலில் இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் அந்தப் பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்தன.
பிறகு திங்கட்கிழமை 20 ஆம் தேதி மீண்டும் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது. பிறகு 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இறுதியாக, நான் எந்த மருத்துவமனைக்கும் செல்லலாம் என்றும், சுதந்திரமான குடிமகன் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றைய தினமும் நான் எந்தச் சூழலில் இருந்தேன் என்று உங்களுக்குத் தெரியாது. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் என்னை சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து போக அனுமதிக்கவில்லை. "எங்களுக்கு உத்தரவு வரவில்லை" என்று சொன்னார்கள். பிற்பகல் 2:00 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இரவு 7:00 மணி வரை அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார்கள். நான் வெளியே போகக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு அதை வழங்கவில்லை. அவர்களின் எண்ணமும் திட்டமும் என்னவென்று தெரியவில்லை. 3 மணி நேரம் பொருட்களை பேக் செய்து எங்களை உட்கார வைத்திருந்தார்கள்.
நேரடியாகப் போராடி, சண்டையிட்டு, அந்தப் போராட்டத்திற்குள்ளேயே மற்றொரு போராட்டம் நடத்தி, தரையில் படுத்துக்கொண்டு, 20-22வது நாளில் என்னிடம் இருந்த அந்த எஞ்சிய வலிமையை வைத்து வலுக்கட்டாயமாக நான் வெளியேற வேண்டியிருந்தது. உங்களுக்குத் தெரியாது!
நான் இந்த வீடியோக்களை வெளியிடவில்லை... ஏதுமறியாத அப்பாவி காவல் அதிகாரிகளின் முகங்கள் தெரியவந்து, அவர்களின் வேலைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வெளியிடவில்லை. இப்போது இந்த பேச்சு வந்திருப்பதால் சில பகுதிகளைக் காட்டுகிறேன். இந்த வீடியோக்களும் வெளியே போகக் கூடாது என்பதற்காக எங்கள் போனைப் பிடுங்கினார்கள், உடைத்தார்கள். நாங்கள் எப்படியோ இந்த வீடியோக்களைப் பாதுகாத்து வைத்தோம். ஆனால் நான் அதை வெளியிடவில்லை, சிறிய மாதிரியை மட்டும் காட்டுகிறேன்.
இப்படிப்பட்ட சூழல்களைக் கடந்துதான் நாங்கள் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்குச் சென்றோம். இப்போது நாம் சுதந்திர குடிமக்கள், இங்கு சுதந்திரம் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இல்லை! இங்கும் அதே போன்று ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது பிறகுதான் தெரியவந்தது. இங்கும் வெளியே 500 காவலர்கள், கீழே 200-300 காவலர்கள் கொண்ட படைகள். மருத்துவமனை முழுவதுமே ஒரு ராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது.
இங்கும் என்னை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. வெளியே செல்ல தடை, எல்லா விஷயத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. எனக்கு இப்படிப்பட்ட சிகிச்சைதான் அளிக்கப்பட்டது. இப்போதும் தொடர்கிறது. நீங்கள் வந்து பாருங்கள், உங்களில் பலர் பார்த்திருக்கிறீர்கள்.
21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, இரவில் நான் இங்கு குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். அன்றைய நாள் நள்ளிரவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா அவர்களும் ஜிதேந்திர சிங் அவர்களும் வந்தார்கள். அவர்கள் ஏதோ பேச வருகிறார்கள் என்று உளவுத்துறை அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். பிறகு அவர்கள் வந்து, "நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும், நீங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை" என்றெல்லாம் சொன்னார்கள்.
"நான் சும்மா கைவிடுவதற்காக உட்காரவில்லை, நிபந்தனைகள் இருக்கும். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன்" என்று அவர்களிடம் சொன்னேன். நிபந்தனைகள் என்னவென்று கேட்டார்கள்.
"கல்வி அமைச்சரின் ராஜினாமா"* என்று சொன்னேன். அதேபோல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் சொன்னேன். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றேன். மேலும் ஒரு புதிய நிபந்தனையைச் சேர்த்தோம்: CJP மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த மாணவர் தலைவர்கள் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி, பிறகு மார்ச் 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினார்களோ, அவர்கள் யார் மீதும் எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, FIR பதிவு செய்யக் கூடாது. அப்போதுதான் நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன் என்றேன்.
அவர்கள் ஒன்று இரண்டை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். இரண்டொரு விஷயங்கள் குறித்துக் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அடுத்த நாள் அவர்கள் வருவார்கள் என்றும், "நாங்கள் பேசிவிட்டு வந்து உங்களை உண்ணாவிரதத்தைக் கைவிட வைக்கிறோம்" என்றும் என்னிடம் சொல்லப்பட்டது.
ஆனால் மத்திய அமைச்சர்களின் கரங்களால் உண்ணாவிரதத்தைக் கைவிட எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் (எத்தனை பேர் வர முடியுமோ அவர்கள்) வர வேண்டும், பிறகு நமது CJP மாணவர் தலைவர்களும், லடாக்கில் இருந்து இங்கு வந்திருந்த லடாக் தலைவர்களும் வர வேண்டும், அவர்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரினேன்.
அடுத்த நாள் இதற்கு எதிர்பார்த்திருந்தேன், மக்களும் இங்கு வந்தார்கள். 15 முதல் 20 எம்பிக்கள் வந்தார்கள், ஆனால் அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. வெளி வாசலில் நிறுத்தி 3-4 மணி நேரம் காத்திருக்க வைத்தார்கள். CJP-ன் நமது மாணவியர் வந்திருந்தார்கள், அவர்களையும் தடுத்து நிறுத்தினார்கள். லடாக் தலைவர்களை அரை நாள் காத்திருக்க வைத்து, மாலையில் வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். இந்த அளவிற்கு அவர்களிடம் கொடூரமாக நடந்துகொண்டார்கள். டெல்லி உயர் நீதிமன்றத்தால் சுதந்திரமான குடிமகன் என்று அறிவிக்கப்பட்ட என்னைச் சந்திப்பதற்குக்கூட அனுமதிக்கவில்லை.

இப்போது இதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர யோசித்து வருகிறோம். "நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்" என்று நீதிமன்றம் சொல்லியிருக்கும் போது, பிறகு யார், ஏன் இவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்?
எனவே 22 ஆம் தேதி முழு நாளும் இதிலேயே கழிந்தது. மத்திய அமைச்சர்களோ வரவில்லை, அவர்கள் தங்களது கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆம், முகமைகள் மூலம் "நாங்கள் இதை ஏற்போம், இதை ஏற்க மாட்டோம்" என்று பேச்சார்த்தை நாள் முழுவதும் நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் வரை நீடித்த அந்தப் பேச்சார்த்தையில், தர்மேந்திர பிரதான் அவர்களின் ராஜினாமா குறித்து அவர்கள் அவகாசம் கேட்க விரும்பினார்கள், "இப்போது சொல்ல முடியாது" என்றார்கள். நிவாரணத் தொகை வழங்குவதிலோ, நாடாளுமன்ற விவாதத்திற்கோ அவர்களுக்குப் பிரச்சனை இல்லை.
ஆனால் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதில் அவர்களுக்குப் பெரும் ஆட்சேபனை இருந்தது. "இது இல்லாமல் நான் உண்ணாவிரதத்தைக் கண்டிப்பாகக் கைவிட மாட்டேன்" என்று கூறிவிட்டேன். "நான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுச் சென்றுவிடுவேன், ஆனால் மாணவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கும் சிறைக்கும் NSA சட்டத்தின் கீழும் செல்ல வேண்டி வரும். செப்டம்பர் 24க்கு பிறகு லடாக்கில் சுமார் 80 இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். இங்குள்ள CJP தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் அது நிகழக் கூடாது என்று நினைத்தேன்." அதனால் நான் உறுதியாக இருந்தேன்: "இது இல்லாமல் நான் கண்டிப்பாக உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன், நான் ஒரு வார காலம் இங்கேயே கிடந்தாலும் பரவாயில்லை."
கடைசியில் அவர்கள், "நாங்கள் இதைச் செய்கிறோம், ஆனால் எழுத்துப்பூர்வமாகத் தர முடியாது, வாய்மொழியாகச் சொல்கிறோம்" என்றார்கள். நான் டெல்லியின் முன்னணி வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்தேன். அவர்களும் "அரசாங்கம் இதை ஒருபோதும் எழுத்துப்பூர்வமாகத் தராது, ஆனால் வாய்மொழியாகச் சாத்தியம்தான்" என்றார்கள். நான் ஒப்புக்கொள்ளவில்லை. "எழுத்துப்பூர்வமாகத் தராத வரை எனக்கு எந்த அவசரமும் இல்லை, நான் பட்டினியாகக் கிடப்பேன், நீங்கள் செல்லுங்கள்" என்றேன்.
ஆனால் நாட்டில் மாணவர்களின் ஆக்ரோஷம் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் விளைவாக, 23 ஆம் தேதி (அதாவது நேற்று இரவில்) ஒரு செய்தி கொண்டு வரப்பட்டது... மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்பதை எழுத்துப்பூர்வமாகத் தர ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று.
நண்பர்களே, நிபந்தனைகளில் இந்த சட்டப் பூர்வமான நடவடிக்கை மற்றும் எஃப்.ஐ.ஆர் விஷயம் மீதுதான் எனக்கு அதிக கவனம் இருந்தது. ராஜினாமா என்பதும் ஒரு காரணம்தான். நான் மற்றொரு வீடியோவிலும் சொல்லியிருந்தேன், என் சிந்தனை சற்று வித்தியாசமானது. இந்த ராஜினாமாவை என் மூலம் உடனடியாகச் செய்ய வைப்பது அவ்வளவு முக்கியமானது என நான் நினைக்கவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த ராஜினாமா என்பது ஒரு சிறிய விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும். இதைச் செய்யாததால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுகிறது பாருங்கள்! நாடு முழுவதிலும் அவர்களின் பெயர் கெட்டுப்போகிறது, கோபம் அதிகரிக்கிறது, மக்கள் வெறுக்கிறார்கள். இப்படி அவர்களால் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இன்றோ நாளையோ ராஜினாமா செய்யத்தான் போகிறார்கள்.
நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதால் போராட்டம் முடிந்துவிடாது, நமது CJP மாணவர்கள் அதைச் செய்ய வைப்பார்கள். இதில் அதிக கவனம் செலுத்துவதை விட மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் போராடும் போது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயாமல் இருக்க என்னால் பாதுகாப்பு வழங்க முடியும், மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசாங்கத்திற்குத்தான் இழப்பு என்பதால், ராஜினாமா வேலையும் விரைவில் நடந்துவிடும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் அதற்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லை.
நேற்று இரவு சுமார் 12:00 மணிக்கு... பகலில் ஏராளமான மக்கள், மாணவர்கள், தலைவர்கள், எம்பிக்கள் வந்திருந்தார்கள். அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை முடிக்க வைப்பதற்காகவே வந்திருந்தார்கள். "அனைவரின் முன்னிலையிலும் தான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன்" என்பதே என் கோரிக்கையாக இருந்தது. நிவாரணம் பெற வேண்டிய, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தைத் தர வேண்டிய அமைச்சர்களும் அங்கு இருக்க வேண்டும். அவர்களின் வருகை அவசியம். அதேபோல ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா இரண்டு எம்பிக்கள், CJP தலைவர்கள், லடாக் தலைவர்கள் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் அவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பிய பிறகு, நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு அமைச்சர்கள் இப்போது வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தை முடிக்க வைக்கவும், எழுத்துப்பூர்வமாகத் தரவும் அவர்கள் சம்மதித்துவிட்டதாகச் சொன்னார்கள். இப்போது எனக்கு இருந்த மிகப்பெரிய பயமும், அவசரப்பட்டதற்குக் காரணமும் என்னவென்றால் - டெல்லியில் நிலைமை எந்த நேரத்திலும் பெரிய அளவிலான அடக்குமுறையாக (crackdown) மாறக்கூடும் சூழல் நிலவியது நினைவிருக்கலாம்.
நேற்று இரவில் நான் பார்த்த வீடியோக்களை வைத்துப் பார்க்கும் போது, கன்னாட் பிளேஸ் பகுதியில் ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போவது போலத் தெரிந்தது. நீங்கள்தான் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். எனக்கு மீண்டும் மீண்டும் லடாக்கின் செப்டம்பர் 24 சம்பவம் நினைவுக்கு வந்தது. அங்கு போலீசாரும் சி.ஆர்.பி.எஃப்-ம் தலைமையிலும் மார்பிலும் சுட்டு லடாக் இளைஞர்களைக் கொடூரமாகக் கொன்றுகுவித்தார்கள். அது இங்கேயும் நடந்துவிடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது.
அப்படி ஏதேனும் நடந்துவிட்டால், இந்த உண்ணாவிரதத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே நான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு நிலையைச் சீராக்கினால் வன்முறையைத் தடுக்க முடியும் என்று கருதி உண்ணாவிரதத்தை முடிக்கச் சம்மதித்தேன். ஆனால் இவர்களின் முன்னிலையில் மட்டும் முடிக்க மாட்டேன் என்றேன். மற்ற தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்றேன். ஆனால் நள்ளிரவு 12:00 மணிக்கு நான் யாரை அழைப்பது? அழைத்தாலும் பல மணிநேரம் ஆகும், அமைச்சர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.
எனவே அவசர அவசரமாக சாணக்கியபுரியில் உள்ள லடாக் பவனில் ஒரே இடத்தில் தங்கியிருந்த லடாக் தலைவர்களை அழைக்க முயற்சி செய்தேன். "குறைந்தது லடாக் தலைவர்களாவது இருக்க வேண்டும், வேறு யாரும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அப்போதுதான் முடிப்பேன்" என்றேன். ஆனால் அந்த அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. "அவர்களை அழைக்க முடியாது, இவர்களின் முன்னிலையிலேயே முடியுங்கள்" என்றார்கள். நான் பிடிவாதமாக, "அப்படியானால் நான் எதிலும் கையெழுத்திடவும் மாட்டேன், உண்ணாவிரதத்தை முடிக்கவும் மாட்டேன், அப்படியே இருக்கட்டும்" என்றேன்.
பிறகு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையில் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பதை விட, லடாக் தலைவர்களுக்கு நானே போன் செய்தேன். "நீங்கள் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இங்கு வாருங்கள், வந்ததும் பார்த்துக்கொள்ளலாம். லடாக் தலைவர்கள் இல்லாமல் வெறும் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடிக்க மாட்டேன்" என்றேன். லடாக் தலைவர்கள் கிளம்பியதும், வேறு வழியின்றி அதிகாரிகளும் அவர்கள் வந்து சேர உதவி செய்தார்கள்.
அவர்களும் 12:30 மணிக்கு வந்து சேர்ந்தார்கள், அமைச்சர்களும் வந்தார்கள். கன்னாட் பிளேஸில் அவ்வளவு பெரிய விபரீதம் நடக்கும் என்ற பயம் இருந்ததால், இதை மேலும் ஒரு நாள் தள்ளிப்போடுவதை நான் விரும்பவில்லை. "நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன், தயவுசெய்து அமைதி காக்கவும்" என்று எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்வது நாட்டிற்கு நல்லது.
ஒரு இடத்தில் வன்முறை வெடித்தால் மற்ற நகரங்களுக்கும் பரவிவிடும், என்ன நடக்கும் என்று உங்களால் ஊகிக்க முடியும். வீட்டில் சோஃபாவில் உட்கார்ந்துகொண்டு ரீல்ஸ் பார்த்துக்கொண்டே... "ஏன் உண்ணாவிரதத்தை முடித்தார்? அவர் கையால் ஏன் முடிக்கவில்லை?" என்று சொல்வது உங்களுக்கு மிக எளிது. "என்ன பேரம் பேசப்பட்டது, என்ன ஒப்பந்தம் நடந்தது?" என்று சொல்வது மிக எளிது.
வார்த்தைகளை அளந்து பேசுங்கள்! வாரக்கணக்கில் வீட்டிற்குச் செல்லாமல், வீதியில் பசியும் பட்டினியுமாக இருக்கும் ஒருவரின் மனதை எவ்வளவு காயப்படுத்துகிறீர்கள்! இப்படிப் பேசும் போது உங்களுக்குச் சிறிதும் இரக்கம் வரவில்லையா? என்று கேட்க விரும்புகிறேன்.
இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில், லடாக் தலைவர்களை வரவழைத்து மாணவர்கள், மாணவர் தலைவர்கள், CJP மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று முறைப்படி எழுதி வாங்கினேன். நிவாரணம் வழங்கப்படும் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் எழுதி வாங்கினேன். பொறுப்புக்கூறல் பற்றி, "நேரம் எடுத்துக்கொண்டாவது செய்யுங்கள், ஆனால் செய்தாக வேண்டும்" என்று சொன்னேன். அதிக அழுத்தம் தரவில்லை, ஏனெனில் அது எப்படியும் நடக்கும் என்று எனக்குத் தெரியும். இதற்காக மேலும் இரண்டு நாட்கள் ஏன் தள்ளிப்போட வேண்டும்? இது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ, அவ்வளவு தூரம் இந்தியாவின் அமைதிக்கு நல்லது.
இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று எனது உண்ணாவிரதம் முடிந்தது. அந்தச் சூழலில், நள்ளிரவு 12:30 மணிக்கு முடிக்க வேண்டியிருந்ததே என்பதே என் மிகப்பெரிய வேதனை. என் தோழர்களான மாணவர்களும் வர முடியவில்லை. என்னைச் சந்திக்க வந்து, எனது உண்ணாவிரதத்தை முடிக்க வைக்க நான் மீண்டும் அழைக்க நினைத்த எம்பிக்களும் வர முடியவில்லை. அது என் மனதில் என்றும் மிகப்பெரிய ஆறாத் துயரமாக இருக்கும்.
ஆனால் சொல்வார்களே..."எல்லோருக்கும் முழுமையான உலகம் கிடைத்துவிடுவதில்லை, சிலருக்கு நிலவு கிடைக்கும் போது வானம் கிடைப்பதில்லை" என்று. 100% எல்லாமே உங்களுக்குக் கிடைத்துவிடாது, நீங்கள் அனுசரித்துதான் ஆக வேண்டும். அதையேதான் உங்களிடமும் சொல்கிறேன்.

நீங்கள் எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். உங்களுக்கு பாஜக மீது பிரச்சனை இருக்கலாம், காங்கிரஸ் மீது பிரச்சனை இருக்கலாம், சோனம் வாங்சுக் மீது பிரச்சனை இருக்கலாம். ஆனால் எல்லா விஷயத்திலும் உங்கள் ஆசைகள் நிறைவேறிவிடாது. உங்களின் வன்மம் அல்லது மனக்கசப்பு பூர்த்தியாகாமல் போகலாம். சில இடங்களில் நாம் சமநிலையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. சீட்டுக்கட்டு ஆட்டத்தில் ஜெயிக்கிறவன் அதிக அதிர்ஷ்டம் உள்ளவன் அல்ல, எப்போது ஆட்டத்திலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்பவனே ஜெயிக்கிறான்.
நானும் அதைத்தான் நினைத்தேன். இப்போது இதை நிறுத்தியாக வேண்டும், இல்லையென்றால் நாட்டில் பெரிய அசம்பாவிதம் நடந்துவிடும். எனவே அந்தச் சூழலில் நேற்று 12:30 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்தேன். இது தவறு என்றால் நான் குற்றவாளிதான். என்னைத் தண்டியுங்கள் அல்லது மன்னித்து விடுங்கள்! என் வாழ்நாள் முழுவதையும் கொடுத்து டெல்லி வீதியில் இந்தச் சூழலில் இருக்கும்படியான தவறை இனி நான் செய்யாமல் இருக்கலாம்.
ஆனால், உங்களுக்கு இங்குள்ள சூழல் தெரியவில்லை என்று நினைக்கிறேன். இங்கு என்ன நிலைமை இருந்தது, என்னை எப்படி வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்த டெல்லி எப்படி வட கொரியாவாக மாற்றப்பட்டது? டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். அதை நீதிமன்றத்திலும் எதிர்த்துப் போராடுவோம், அது தனி அத்தியாயம்.
ஆனால் இவ்வளவு அனுபவித்தும், பசியையும் தாண்டி இதையெல்லாம் உங்களுக்காகச் செய்தோம். பேசுவது உங்களுக்கு எளிதாக இருக்கலாம், ஆனால் இதையெல்லாம் கடந்து வருவது, அனுபவிப்பது, மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.
எனவே உங்கள் மனதிலும் சிறிதளவு இரக்கம் வையுங்கள்... அனுதாபம் வையுங்கள். என்னால் இன்னும் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. மனதைக் கிழிக்கும் வார்த்தைகளைக் கேட்கும் நிலையில் நான் இல்லை. தயவுசெய்து உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துங்கள். பேசினால் அன்பான வார்த்தைகளைப் பேசுங்கள், இல்லையென்றால் பேசாமலே இருங்கள். அதுவே எனக்குப் பெரிய மருந்தாக இருக்கும்.
இன்றைக்கு இவ்வளவுதான், நன்றி. ஜெய் ஹிந்த்!
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
{{comments.comment}}