"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!

Sep 11, 2026,04:26 PM IST

- த. ஜோசப் சாம்ராஜ்


அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராக சாலமன் பாப்பையா ஐயா பணியாற்றிய காலத்தில், அவருடைய மாணவனாக இருந்தது என் வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று. நான் கல்லூரியில் படித்த காலத்தில், ஐயா நடத்தும் வகுப்பு என்றாலே மாணவர்களிடையே தனி உற்சாகம் இருக்கும். அவரது வகுப்பு ஒருபோதும் வழக்கமான வகுப்பாக இருக்காது; அது சிரிப்பும், சிந்தனையும், பேச்சும், விவாதமும் கலந்த ஒரு சிறிய மேடையாகவே இருக்கும்.


மாணவர்கள் அவரது வகுப்பை மட்டும் எளிதில் ‘மிஸ்’ செய்ய மாட்டார்கள். காரணம், அவர் பாடத்தை வெறுமனே நடத்திவிட்டு செல்வதில்லை. மாணவர்களைப் பேச வைப்பார்; சிந்திக்க வைப்பார்; அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவார். ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பைக் கொடுத்து, ஒவ்வொருவரையும் பேசச் சொல்லி ஊக்கப்படுத்துவார். பேசுவதில் தயக்கம் கொண்ட மாணவர்களைக்கூட தைரியப்படுத்தி மேடையேற்றுவது அவருடைய தனிச்சிறப்பு.


அவருடைய கண்டிப்பிலும் ஒரு மனிதநேயம் இருந்தது. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ, வகுப்பிற்கு காலதாமதமாக வந்தாலோ அபராதம் விதிப்பார். ஆனால் அந்த அபராதத் தொகை அவருடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்ல. ஏழை மாணவர்களின் கல்விக்குப் பயன்படும் வகையில் அதைச் செலவிடுவார். மாணவர்களின் தவறைச் சுட்டிக்காட்டிய அதே நேரத்தில், இன்னொரு மாணவனின் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தையும் அவர்களுக்குள் விதைத்தார். அவருடைய உதவியால் படித்த ஏராளமான மாணவர்களின் வாழ்க்கை நினைவுகளில் சாலமன் பாப்பையா ஐயாவின் பெயர் என்றும் அழியாமல் இருக்கும்.




நான் 1985 முதல் 1988 வரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் படித்தேன். விலங்கியல் எனது முதன்மைப் பாடமாக இருந்தாலும், துணைப் பாடமாக ‘மேடைத் தமிழ்’ படிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்தப் பாடம் என் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.


ஒருமுறை ‘தலை’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டபோது, அதில் நான் கன்னிப் பேச்சு பேசினேன். அது எனக்கு முதல் மேடைப் பேச்சு என்பதால் உள்ளுக்குள் சிறிது பதற்றம் இருந்தது. ஆனால் பேசி முடித்தபோது, சாலமன் பாப்பையா ஐயா என் பேச்சை மிகவும் ரசித்துப் பாராட்டினார். ஒரு மாணவனின் திறமையை ஆசிரியர் ஒருவர் சரியான நேரத்தில் அடையாளம் கண்டு, ஒரு சிறிய பாராட்டின் மூலம் அவனுக்குள் நம்பிக்கையை விதைப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை அப்போது நான் உணரவில்லை.


அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஐயா என்னை அன்போடு ‘தலஜோ’ என்று அழைக்கத் தொடங்கினார். அது வெறும் செல்லப் பெயர் அல்ல; என்னுடைய பேச்சுத் திறனை அவர் கவனித்ததற்கான ஒரு அங்கீகாரம் போல நான் அதை உணர்ந்தேன். ஒரு பெரிய ஆசிரியர், தன்னுடைய மாணவனிடம் காட்டும் அன்பும் நம்பிக்கையும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனதில் அழியாமல் இருக்கும் என்பதற்கு அந்த அழைப்பு எனக்கு ஒரு சாட்சியாகவே இருக்கிறது.


இன்று திரும்பிப் பார்க்கும்போது, கல்லூரியில் நான் கற்றது விலங்கியல் பாடம் மட்டுமல்ல என்பதை உணர்கிறேன். மனிதர்களிடம் பேசுவது, தன்னம்பிக்கையுடன் கருத்தை வெளிப்படுத்துவது, மற்றவர்களின் திறமையை மதிப்பது, தேவையுள்ளவர்களுக்கு உதவுவது போன்ற பல வாழ்க்கைப் பாடங்களையும் அங்கே கற்றுக்கொண்டேன்.


அந்தப் பாடங்களில் பெரும்பகுதியை புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை; சாலமன் பாப்பையா ஐயா போன்ற ஆசிரியர்களின் வாழ்வியல் அணுகுமுறையே கற்றுக் கொடுத்தது. ‘தலஜோ’ என்று அவர் என்னை அழைத்த அந்தக் குரல், காலம் கடந்தும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என் மாணவப் பருவத்தின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக அது என்றும் நிலைத்திருக்கும்.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுகலை மற்றும் நகைச்சுவை பேச்சை  தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்