சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் முக்கியமான தனித்தொகுதிகளில் ஒன்று. தொகுதி எண் 35-ஆக உள்ள இந்தத் தொகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.
1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, நீண்ட அரசியல் வரலாற்றையும், விவசாயத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையும் கொண்டது.
2026-ம் ஆண்டு நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 2,13,689 வாக்காளர்கள் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 1,04,886 பேர் ஆண்கள், 1,08,738 பேர் பெண்கள் மற்றும் 65 பேர் மூன்றாம் பாலினத்தினர். கடந்த பொதுத் தேர்தலின்போது, மொத்தம் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுராந்தகம், கருங்குழி, அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், படாளம், சூனாம்பேடு உள்ளிட்ட பகுதிகள் இத்தொகுதிக்குள் அடங்குகின்றன.
விவசாயமே பிரதான வாழ்வாதாரம்

மதுராந்தகம் தொகுதியின் பொருளாதாரத்தில் விவசாயத்திற்கு முக்கிய இடம் உள்ளது. குறிப்பாக நெல் மற்றும் கரும்பு சாகுபடி இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகிறது. படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் நெல் அரிசி ஆலைகள் இப்பகுதியின் வேளாண் சார்ந்த பொருளாதாரத்திற்கு துணை நிற்கின்றன.
சமூக அமைப்பைப் பொறுத்தவரை வன்னியர் மற்றும் ஆதி திராவிடர் சமூக மக்கள் கணிசமாக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து முதலியார், ரெட்டியார், செட்டியார், யாதவர் உள்ளிட்ட சமூகங்களும் வசித்து வருகின்றனர்.
ஏரிகாத்த ராமர் முதல் வேடந்தாங்கல் வரை
மதுராந்தகத்தின் அடையாளங்களில் முதன்மையானது மதுராந்தகம் ஏரி. தமிழகத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் இந்த ஏரி, இப்பகுதியின் விவசாயத்தோடு நெருங்கிய தொடர்புடையது.
அதேபோல், உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மதுராந்தகம் தொகுதியின் முக்கியமான சுற்றுலா அடையாளமாக விளங்குகிறது. ஏரிகாத்த ராமர் கோயில், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களும் இத்தொகுதியின் சிறப்பை அதிகரிக்கின்றன.
வரலாறு, விவசாயம், ஆன்மிகம், சுற்றுலா என பல்வேறு அடையாளங்களை ஒருங்கே கொண்ட மதுராந்தகம், தேர்தல் நேரங்களில் மட்டும் கவனம் பெறும் தொகுதி அல்ல. அதன் ஏரியும், விவசாயமும், சமூக அமைப்பும், நீண்ட அரசியல் வரலாறும் இணைந்து இதனைத் தனித்துவமான தொகுதியாக உருவாக்குகின்றன.
மாறி மாறி வென்ற திராவிடக் கட்சிகள்

மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் வரலாறு பல்வேறு அரசியல் மாற்றங்களைப் பதிவு செய்துள்ளது. 1952-ல் காங்கிரஸ் கட்சியின் பி. பரமேஸ்வரன் வெற்றி பெற்ற நிலையில், 1967-ல் திமுகவின் குளத்தூர் கோதண்டம் வெற்றி பெற்றார்.
1977 மற்றும் 1980 தேர்தல்களில் அதிமுகவின் எஸ்.டி. உகம்சந்த் தொடர்ந்து வெற்றி பெற்றார். 1989-ல் மதுராந்தகம் ஆறுமுகம் திமுக சார்பில் வெற்றி பெற்றார். 1991-ல் எஸ். சின்னசாமி அதிமுக சார்பிலும், 1996-ல் மீண்டும் மதுராந்தகம் ஆறுமுகம் திமுக சார்பிலும் வெற்றி பெற்றனர்.
2001-ல் எஸ். கண்ணன் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். 2006-ல் கே. காயத்ரி திமுக சார்பிலும், 2011-ல் எஸ். கண்ணன் அதிமுக சார்பிலும், 2016-ல் எஸ். புகழேந்தி திமுக சார்பிலும் வெற்றி பெற்றனர்.
2021-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் மரகதம் குமரவேல் 3,570 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2026 தேர்தலிலும் மரகதமே வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் கேத்ரீனை வீழ்த்தி அவர் வென்றார். தற்போது இவர் ராஜினாமா செய்த காரணத்தால்தான் மதுராந்தகத்தில் இடைத் தேர்தல் வந்துள்ளது.
மொத்த தேர்தல் வரலாற்றைப் பார்க்கும்போது அதிமுக 7 முறை, திமுக 6 முறை, காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இடைத்தேர்தலை எதிர்நோக்கும் மதுராந்தகம்

இடைத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி என்பதால் தவெகவின் கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது.
அதேசமயம் திமுக வலுவான வேட்பாளரை இறக்கியுள்ளது. அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் இன்னும் யாரையும் அறிவிக்கவில்லை. பொது வேட்பாளராக திமுக வேட்பாளரை அனைத்து எதிர்க்கட்சிகளும் அங்கீகரிக்கப் போகின்றனவா என்று தெரியவில்லை.
இதனால், மதுராந்தகத்தின் பாரம்பரிய அரசியல் கணக்குகளுடன் புதிய அரசியல் நகர்வுகளும் இணையும் சூழல் உருவாகியுள்ளது.
அதிமுக வேட்பாளராக வென்று விட்டு ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேலுக்கு அதிமுகவினர் மத்தியில் கடும் கோபம் உள்ளது. அந்த ஓட்டுக்கள் அப்படியே கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. அதேசமயம், திமுக வேட்பாளர் உள்ளூர்க்காரர் இல்லை என்பதால் திமுகவினர் மத்தியில் அதிருப்தி எழ வாய்ப்புள்ளது. அந்த வகையில் மதுராந்தகம் தேர்தல் களம் இப்போதே அனலடிக்க ஆரம்பித்துள்ளது.
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி: சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : ராஜினாமா செய்தவர்களை வேட்பாளராக்கிய தவெக
விஜய்யை DUMMY CM ஆக நினைக்கிறார்களா காவல்துறையினர்.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
{{comments.comment}}