Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?

Sep 11, 2026,03:07 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ  வருடம் 20 26 செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி திங்கட்கிழமை ஆவணி 28 ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய பதிவில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு  அழகான அலங்காரமான மஞ்சள் பிள்ளையார் எப்படி? செய்வது என்பதை பற்றியும் விநாயகருக்கு உகந்த 21 இலைகள் அதன் பலன்கள் பற்றியும், 21மலர்கள்,  ஆகியவற்றைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.


சிலர் வீடுகளில் பூஜை அறையில் இருக்கும் விநாயகர்  படம் அல்லது உருவ சிலைக்கும் பூஜை செய்வர்.சிலர் களிமண்ணிலான விநாயகரை, விநாயகர் சதுர்த்தி நாளுக்கு முந்தைய நாள் வீட்டிற்கு வாங்கி வந்து சதுர்த்தி அன்று பூஜை செய்வர். சிலர் மஞ்சள் பிள்ளையார் செய்து வழிபடுவது வழக்கம்.

 

மஞ்சளில் பிள்ளையார் செய்வதைப் பற்றி பார்ப்போம்..


பிள்ளையார் செய்ய தேவையான பொருட்கள் :




1.மஞ்சள் தூள் 1 1/2 கப்.

2. மைதா மாவு 1/4 கப்.

3. பால் தண்ணீர் மஞ்சள் பிசைவதற்கு தேவையான அளவு.

4. ஆரஞ்சு கலர், மஞ்சள் கலர் ஜிலேபி பவுடர்.

5. பிள்ளையாரை அலங்கரிக்க கல் வைத்த ஜமிக்கி.

6. பூணூல் - வெள்ளை  நூல்.


செய்முறை:


ஒரு சுத்தமான தட்டில் ஒரு கப்  மஞ்சள் தூள்,மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். குறிப்பு:மைதா மாவு சேர்ப்பதனால் மஞ்சள் பிள்ளையார் ஈரம் காய்ந்த பிறகும் பிளவு படாமல் இருக்கும். ஒரு சிட்டிகை மஞ்சள் கலர் சேர்த்துக் கொள்ளவும். நல்ல மஞ்சள் நிறம் வருவதற்காக இதை சேர்த்துக் கொள்ளலாம்.

 

குறிப்பு  : கலர் தேவைப்பட்டால் சேர்க்கலாம்.


பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் &பால் சேர்த்து கெட்டியாக வரும் வரை பிசையவும்.  அழகான பிள்ளையார் வடிவத்தில் செய்யவும்.உருவம் செய்ய தெரியாதவர்கள் ஒரு கைப்பிடியாக வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம்,அருகம்புல் சாற்றி வழிபடலாம்.


பிறகு அரை கப் மஞ்சள் தூள்,மைதா மாவு சேர்த்து ஆரஞ்சு கலர் பவுடர் சேர்த்து பிசையவும். இதனை பிள்ளையார் கிரீடம் செய்து சிலையின் தலையிலும், சிறு சிறு ஆரஞ்சு உருண்டைகளை பிள்ளையார் கையில் லட்டு வடிவில் வைக்கவும். அவரவர்க்கு தெரிந்த வகையில் பல வண்ண ஜமிக்கிகளை கொண்டு அலங்காரம் செய்யலாம். இந்த சிலையை ஒரு மரப்பலகை மீது வைக்கவும்.


விநாயகர் சதுர்த்தி மஞ்சள் பிள்ளையார் இதோ...ரெடி....


அடுத்து வாங்க ப்ரண்ட்ஸ் விநாயகருக்கு அர்ச்சனை செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம் .


விநாயகருக்கு உகந்த 21 இலைகள் அதன் பலன்கள்:


இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கும், இலைகளுக்கும், புற்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.


விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கணபதிக்கு 21 வகையான இலைகளைக் கொண்டு  அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானது. இந்த பூஜைக்கு 


"ஏகவிம் சதி  பத்ர பூஜை" என்று பெயர்.


விநாயகர் சதுர்த்தி அன்று கணநாதனுக்கு உகந்த 21 இலைகள் அதன் பலன்கள்:


1. அரச இலை : 


தொழிலில் வெற்றி கிடைக்கும்.


2. முல்லை இலை: 


அறம்  வளரும். இல்லத்தில்  கீர்த்தி பெருகும். 


3. கரிசலாங்கண்ணி இலை: 


இல்வாழ்க்கைக்கு  தேவையான பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.


4. அருகம்புல்:




நீள் ஆயுள்,தடையற்ற வளம்  மற்றும் அனைத்து சௌபாக்கியங்களும் தரும்.


5. இலந்தை இலை- கல்வியில் மேன்மை.


6. ஊமத்தை இலை- மனக்கவலைகள் நீங்கி வீரம் மற்றும் மனத்துணிவு பெருகும்.


7. வன்னி இலை :


எதிரிகள் தொல்லை நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.


8. நாயுருவியிலை: 


சுறுசுறுப்பும் தேக பலமும் தரும்.


9. கண்டங்கத்தரி இலை:

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.செல்வம் பெருகும்.


10. அரளி இலை :

மன அமைதி மற்றும் தைரியம் தரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.


11.  எருக்கம்  இலை: உடல்நிலை கோளாறு நீங்கும். வம்சவிருத்தி அடையும்.


12.மருதம்  இலை : மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். நல்ல சந்தான பாக்கியம் கிடைக்கும்.


13.  விஷ்ணுகிராந்தி இலை :

கூர்மை மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


14. மாதுளை இலை: 

 சமூகத்தில் நல்ல பெயர்,புகழும் நற்பெயரும் கிடைக்கும்.



 15.தேவதாரு இலை: 

தீய சக்திகள் விலகி நல்ல அதிர்வுகள் உண்டாகும். எத்தகைய கடினமான சூழ்நிலையையும் தாங்கும் மன தைரியம் உண்டாகும்.


16. மரிக்கொழுந்து: மருவு இலை நறுமணம் போல வாழ்வில் கீர்த்தி உண்டாகும். தம்பதியர் இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.


17. அகத்தி இலை: பாவங்கள் நீங்கி தடைகள் அகலும்.


18. மா இலை: எடுக்கும் காரியங்களில் வெற்றியைத் தரும். குடும்பத்திற்குள் சுபிக்ஷமும்,லட்சுமி கடாக்ஷமும்  நிலைக்கும்.


19.  ஜாதிமல்லி இலை: சொந்த வீடு மனை மற்றும் பூமி பாக்கியம் கிடைக்கும்.


20. தாழம்பூ இலை :நீண்ட கால  தடைகள் , தோஷங்கள் மற்றும் தொழில் முடக்கங்கள் நீங்கும் 


21. வில்வம் இலை:  அருள், மன அமைதி மற்றும் பாவங்கள் நீங்கும்.


விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் விநாயகர் பெருமானுக்கு 21 வகையான மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானது "ஓம் கணபதியே போற்றி" என்று கூறி அர்ச்சனை செய்வது வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்றுத் தரும்.


விநாயகருக்குஅர்ச்சனை செய்ய 21 மலர்கள் என்னென்ன? :




1. புன்னை பூ 

2. மந்தாரைப் பூ.

3. மகிழம்பூ.

4. பாதிரிப்பூ.

5. தும்பைப் பூ.

6. வெள்ளை அரளி.

7. ஊமத்தை பூ.

8. சம்பங்கி பூ.

9. மாம்பூ.

10. தாழம்பூ.

11. முல்லைப் பூ.

12. கொன்றைப் பூ.

13. எருக்கம் பூ.14.  வெள்ளெருக்கம் பூ விநாயகருக்கு மிகவும் உகந்தது .

15. செவ்வரளி பூ.

16. வில்வ பூ.

17. குரு ந்தைப்பூ.

18. பவளமல்லி பூ.

19. ஜாதி மல்லி பூ.

20. மாதுளம் பூ.

21. கண்டங்கத்திரி பூ.


இவ்வாறு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய 21 இலைகள், 21 மலர்கள் கிடைக்காவிட்டால் நம் வீட்டிற்கு அருகில் கிடைக்கும் இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்