ஆசியக் கோப்பையை இந்திய கேப்டன் பெற்றிருக்க வேண்டும்.. ஏபி டி வில்லியர்ஸ் கருத்து

Su.tha Arivalagan
Oct 03, 2025,10:26 AM IST

டெல்லி: ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு நடந்த கோப்பை வழங்கும் நிகழ்வு குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவருமான மோசின் நக்வியின் கைகளால் கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்ததே இந்தச் சர்ச்சைக்கான காரணம்.


இதுகுறித்து தற்போது முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸும் தனது கருத்தைக் கூறியுள்ளார்.


இந்தியாவின் நிலைப்பாட்டால் கோபமடைந்த நக்வி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியிடம் கோப்பையை ஒப்படைக்கவில்லை. மாறாக, கோப்பை மற்றும் வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை துபாயில் உள்ள தனது ஹோட்டல் அறைக்கு எடுத்துச் சென்றார். கோப்பை வேண்டும் என்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து பிசிசிஐ அதிகாரிகள் பெற்றுக் கொள்ளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ், அரசியலை விளையாட்டில் கலக்க விட்டுள்ளதாக இந்திய அணியின் செயலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய டி வில்லியர்ஸ், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்திய பிறகு நடந்த இந்தச் சம்பவம் வருத்தமளித்தது. கிரிக்கெட்டையும் அரசியலையும் எப்போதும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.




கோப்பையை யார் வழங்குவது என்பதில் இந்திய அணிக்கு திருப்தி இல்லை என்று தெரிகிறது. இது விளையாட்டுக்குரியது அல்ல என நான் நினைக்கிறேன். அரசியல் தனியே இருக்க வேண்டும். விளையாட்டு என்பது ஒரு விஷயம், அது உள்ளபடி கொண்டாடப்பட வேண்டும். இதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் இதைச் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.


இந்தியாவின் முதன்மையான கிரிக்கெட் தொடரான ஐபிஎல்லில் முக்கிய வீரராக கலக்கியவர் ஏபி டி வில்லியர்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அவரும் விராட் கோலியும் இணைந்து அதகளம் செய்துள்ளனர். 


டி வில்லியர்ஸ் மேலும் பேசுகையில், மிகவும் முக்கியமான விஷயத்தில் (கிரிக்கெட்டில்) கவனம் செலுத்துவோம். இந்தியா மிகவும் வலுவாகத் தெரிகிறது. அடுத்த பெரிய டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகி வருகிறது. அது அதிக தூரத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக விளையாடுவதாகவும் தெரிகிறது. எனவே, (பார்ப்பதற்கு) மிகவும் அருமையாக உள்ளது என்றார் அவர்.