திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி

Su.tha Arivalagan
Nov 12, 2025,11:26 AM IST

மும்பை: 61 வயதான நடிகர் கோவிந்தா நேற்று இரவு திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையின் ஜூஹுவில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக அருகிலுள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


ஹீரோ நம்பர் 1, கூலி நம்பர் 1, ராஜா பாபு, ஹசீனா மான் ஜாயேகி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து, பாலிவுட் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கோவிந்தா. அவர் இந்தி சினிமாவின் மிகவும் அன்பான பொழுதுபோக்கு நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 


சில காலத்திற்கு முன்பு, கோவிந்தா தனது காலில் தவறுதலாக சுட்டுக்கொண்டதால் பிரச்சனையை எதிர்கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார்.




சமீபத்தில், திங்கட்கிழமை இரவு, கோவிந்தா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தர்மேந்திராவைச் சந்தித்தார். அப்போது அவர் காரில் வந்து ஆசியும் பெற்றார். 


நடனம், நகைச்சுவை மற்றும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கிற்குப் பெயர் பெற்ற கோவிந்தா, கடைசியாக 2019 இல் வெளியான ரங்கீலா ராஜா படத்தில் நடித்தார். அதன் பிறகு பெரிதாக நடிக்கவில்லை. அவரது மனைவி சுனிதா அஹுஜா பல நேர்காணல்களில், கோவிந்தா மேலும் ஃபிட் ஆகி, நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்தார்.