விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

Su.tha Arivalagan
Sep 22, 2025,12:23 PM IST

சென்னை: தனுஷ் நடித்த இட்லி கடை ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தான் பேசிய பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


இட்லி கடை படத்தில் பார்த்திபனும் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய பார்த்திபன், விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஜெயம் மக்கள்தான் தர வேண்டும் என்று பேசினார். இது அந்தக் கூட்டத்தினரிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த பலரும் விஜய் பெயரையும், தவெக பெயரையும் சொல்லி ஆர்ப்பரித்தனர்.


அதேசமயம், இது சமூக வலைதளங்களில் பார்த்திபன் குறித்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இதையடுத்து அவர் ஒரு விளக்க பதிவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


Good morning friends 




சாதனை புரிவதை விட,  சாதாரண வார்த்தைகளை புரிய வைப்பது சிரமமாக உள்ளது. 


மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டிக்கு விஜயம் புரிகிறார்’ என்றால் வருகை புரிகிறார் என்று பொருள். அந்த யூனிவர்சிட்டிக்கு யார் வேண்டுமானாலும் புரியலாம் வருகை ஆனால் பெரியார் படத்தை திறப்பதே உவகை! 


அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் புரியலாம் வருகை(விஜயம்) ஆனால் வெற்றி (ஜெயம்) பெறுவது என்பது மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது.  இதைவிட நடுநிலையான,பொதுவான, actually மொக்கையான கருத்து வேறிருக்க முடியாது என்பதனை வேரறுத்து என்னால் சொல்ல முடியும். 


யாரையும் தாக்கியோ தூக்கியோ பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படி செய்வதானால் நெஞ்சை நிமிர்த்தியபடி நேரடியாகவே அரசியலுக்கு வந்து விடுவேன். எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக திமுக எனக்கு நெருக்கம் காரணம் கலைஞர் அவர்கள். அவர்கள் காலத்தில் தான் நான் ஒரு கலைஞனாக கௌரவிக்கப் பட்டேன்.


நண்பர் ஒருவர் “என்னங்க தொடர்ந்து அவரையே சப்போர்ட் பண்றீங்கப் போல”என்றார். “ஏனப்படி கேட்கிறீர்கள்?” என்றேன். “விஜயம் என்றால் வெற்றி தானே?” என்றார். கடுப்பாகி “போய் டிக்‌ஷனரியை பாருங்கள்”என்றேன். தமிழுக்கே தமிழ் subtitle தேவைபடுகிறது. வீரனுக்கு அழகு போட்டியில் வெல்வது. ஒத்தையா ஓடி ஒன்னாம் பரிசு வாங்குவதல்ல. மல்யுத்த போட்டியில் கூட இரு போட்டியாளர்களையும் மக்கள் வரவேற்பாளர்கள்.


வெற்றி திறமையில் உள்ளது. இப்போதைக்கு நான் இட்லி பானை சின்னத்தில் நிற்கும் நண்பர் தனுஷ் அவர்களுக்கு பெருகும் ஆதரவில் பங்கு பெற்று மகிழ்கிறேன்.விரைவில் என் படம் துவங்க ஆயுத்தமாகிறேன்.வேறு எந்த agenda-வும் 

urgent-ஆ இல்லை என்வசம் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.