6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஆறு பேரின் ராஜினாமாக் கடிதங்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றது செல்லும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்/வாக்கெடுப்பில் அதிமுகவின் சட்டப்பேரவை கொறடா உத்தரவை மீறி, அக்கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அந்த 6 எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சபாநாயகரின் நடவடிக்கை மற்றும் சர்ச்சை:
எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் இருந்த தருணத்தில், திடீர் திருப்பமாக அந்த 6 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது, அவர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடரப்பட்டது.
அதிமுக தரப்பு வாதம்:
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க மனு நிலுவையில் இருக்கும் போது, எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்டவிரோதமானது.
தகுதிநீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காகவே எம்.எல்.ஏ-க்கள் இந்த ராஜினாமா நாடகத்தை நடத்தியுள்ளனர்.எனவே, சபாநாயகரின் இந்த உத்தரவைச் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சபாநாயகர் முடிவு செல்லும்:
இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்து. தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லும். தகுதி நீக்க விவகாரம் வேறு, ஆறு பேரின் ராஜினாமா விவகாரம் வேறு. அதை ஏற்றது செல்லுபடியாகும். தகுதி நீக்க விவகாரத்தில் 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.
6 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. தற்போது இந்த ராஜினாமா முடிவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 6 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த ஒரு தடை விலகியுள்ளது.
இந்த ஆறு தொகுதிகளில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தனித் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ராஜினாமா செய்தவர்களான மரகம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரே மீண்டும் வெற்றியும் பெற்று விட்டனர். மீதமுள்ள பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளுக்கு இன்னும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடக்கும் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.