அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

Su.tha Arivalagan
Mar 26, 2026,01:43 PM IST

சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிகளை இறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீட்டை முடிப்பதிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் (சி.த.மு.க) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.


எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு :


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பரதன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது இரு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.த.மு.க தலைவர் பரதன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


எந்த தொகுதி ஒதுக்கீடு?




சி.த.மு.க தரப்பில் மண்ணச்சநல்லூர் அல்லது ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு அதிமுக தலைமையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழக வேட்பாளர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான கூட்டணியில் இணைந்திருப்பது தங்களுக்குப் பெரும் பலம் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரதன் குறிப்பிட்டார். கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுக போட்டியிடும் தொகுதி 169 லிருந்து 168 ஆக குறையும்.


தேர்தல் களம் :


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. சிறிய கட்சிகளையும் ஒன்றிணைத்து வாக்குகளைச் சிதறவிடாமல் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் வரவு, குறிப்பாக டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் அதிமுகவிற்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் சூழலில் அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல கட்சிகள் அதிமுக மற்றும் பிற கூட்டணிகளில் இணையும் என எதிர்பார்க்கப்படுவதால், தேர்தல் களம் தற்போதே களைகட்டியுள்ளது.