பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

Su.tha Arivalagan
Aug 05, 2026,01:15 PM IST

சென்னை : தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு (பட்ஜெட்) அறிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனத்தையும் விமர்சனங்களையும் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வரவு செலவு அறிக்கையில் மக்களுக்கான எந்தவொரு புதிய அல்லது முக்கிய அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று சாடினார். "மாற்றம் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்டி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே செய்திருக்கிறார்கள். வெறுமனே வசனங்களைப் பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். ரீல்ஸ் போடுவதும், ரீல் விடுவதும் தான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது" என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.


தொடர்ந்து நிதியாதாரம் மற்றும் கடன்கள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முந்தைய திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் ஒரு புதிய குழுவை அமைத்து பெயர் மட்டுமே வைத்துள்ளனர். வெறும் ஒரு குழு அமைப்பதால் மட்டும் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை எப்படி பெருக்கி விட முடியும்? அதற்கான தெளிவான வழிமுறைகள் அல்லது திட்டங்கள் எதையும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை. தற்போது மாநிலத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த பிரம்மாண்ட கடனை அடைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ என்ன வழிமுறைகள் உள்ளன என்பது குறித்து பட்ஜெட்டில் எந்த விளக்கமும் இல்லை" என்று சுட்டிக்காட்டினார்.




மேலும், விவசாயிகளின் நிலையை சுட்டிக்காட்டி பேசிய அவர், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட 'முழு பயிர்க்கடன் தள்ளுபடி' என்ற வாக்குறுதி ஒரு ஏமாற்று வேலை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்றார். "விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட முழு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு என்ன ஆனது? அதைப்பற்றி இந்த வரவு செலவு அறிக்கையில் எந்த பதிலும் இல்லை" என்றும் கேள்வி எழுப்பினார்.


மொத்தத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நிதி நிபுணர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிய, வெற்று வார்த்தைகள் நிறைந்த ஒரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.