அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் மற்றும் வடிகால் பிரச்சனைகள் குறித்து கேட்ட கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சரி செய்யப்பட்ட பிரச்சனைகள், தற்போது ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்தும் மீண்டும் எழுந்துள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிமுக ஐடி விங் ஒரு வீடியோவை வெளியிட்டு திமுக அரசை விமர்சித்துள்ளது.
மதுரை மாவட்டம், கொசப்பாளையம் பகுதியில் உள்ள மஞ்சம்மேட்டில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் வகையில் வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், "நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இந்த வடிகால் பிரச்சனையை சரி செய்தோம். ஆனால் இப்போது ஆளும் கட்சியில் அமைச்சராக இருக்கும்போது அதே பிரச்சனை மீண்டும் வந்துள்ளது. இது எப்படி நடந்தது? மக்கள் தொகை அதிகரித்துள்ளதா? என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?" என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்டார்.
மேலும், "நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது ஆளும் கட்சியில் இருக்கும்போது ஏன் பிரச்சனைகள் வருகின்றன?" என்றும் அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவத்தை AIADMK IT Wing தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, திமுக அரசை விமர்சித்தது. அமைச்சரின் கேள்வியே திமுக அரசின் "மதிப்பெண் அட்டை" என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அவரது தொகுதி நன்றாக இருந்தது. ஆனால் இப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருக்கும்போது ஏன் இத்தனை பிரச்சனைகள்? இந்த கேள்வியே, திமுக தனது சொந்த எம்.எல்.ஏ.வின் தொகுதிக்குக் கூட நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதைக் காட்டுகிறது" என்று அவர்கள் பதிவிட்டனர்.
சமீபத்தில் வெளியான ஒரு கணக்கெடுப்பு விவரத்தின்படி இந்தியாவிலேயே அசுத்தமான நகரமாக மதுரை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தப் பட்டியிலில் தலைநகர் சென்னை 3வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்நகரங்களில் ஒன்றான, தமிழ்நாட்டில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட 2வது பெருநகரம் என்ற பெருமை கொண்ட, கடந்த 54 ஆண்டுகளாக மாநகராட்சியாக திகழ்ந்து வரும் பெருமை கொண்ட மதுரை மாநகரில் மிகப் பெரிய அளவில் தூய்மைக் கேடு இருப்பதாக பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
மதுரை நகருக்கென்று தனித் திட்டங்கள் தேவை, மதுரை நகரை தூய்மைப்படுத்த பல தொடர் நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் கூட இதுதொடர்பான கோரிக்கையை வைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் மதுரை மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் எந்த ஆட்சி வந்தாலும் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது என்பதுதான் துரதிர்ஷ்டசமான உண்மையாக இருக்கிறது.
மாநிலத்தின் பல பகுதிகளுக்குக் காட்டப்படும் முக்கியத்துவம் மதுரை மாநகருக்கும் காட்டப்பட வேண்டும் என்பதே மக்களின் சிம்பிளான கோரிக்கை.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசைக் குறை கூறவில்லை. மாறாக அதிகார வர்க்கத்தைத்தான் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே அரசு துரிதமாக செயல்பட்டு இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் அது திமுகவுக்குத்தான் பாதகத்தை ஏற்படுத்தும்.