ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Su.tha Arivalagan
May 26, 2026,12:23 PM IST

சென்னை : அதிமுக சார்பில் தமிழக  சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து தங்களின் எம்எல்ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, ஆளும் கட்சியான தவெக.,வில் சென்று இணைந்து வருகிறார்கள். தவெக குதிரை பேரம் நடத்துவதாக அரசியல் கட்சிகள் ஒரு புறம் குற்றம்சாட்டி வந்தாலும், அதிமுக எம்எல்ஏ.,க்களின் இந்த செயலால் கடும் கோபமடைந்துள்ள பொது மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்வி,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தி காரணமாக எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏ.,க்கள் 25 பேர் தனி அணியாக பிரிந்து சென்றனர். அதோடு, கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்கவும் செய்தனர். இதனால் கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இருந்தாலும் தவெக.,விற்கு ஆதரவு அளித்தால், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் விஜய், ஆதரவு அளித்ததற்காக எஸ்.பி.வேலுமணி தரப்பினரே நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாரே தவிர, அமைச்சரவையில் இடம் தரவில்லை.




இப்போது அதிமுக கட்சி பதவியும் இல்லாமல், அமைச்சர் பதவியும் இல்லாமல் போனதால் கடும் கோபமடைந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏ.,க்களில் 3 பேர் நேற்று தங்களின் எம்எல்ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்தனர். ஏற்கனவே பெருந்துறை, திருப்பூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர்களை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ.,வும் தனது எம்எல்ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்து விட்டார்.


ஏற்கனவே முதல் விஜய் ராஜினாமா செய்துள்ள தொகுதிகளுடன் சேர்த்து 4 தொகுதிகள் காலியாக உள்ளது. எம்எல்ஏ.,க்கள் பதவியேற்ற 21 நாட்களில், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த சமயத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து வருவது அதிமுக.,வின் பலத்தை சரிய செய்து வருவதுடன், மக்களின் கோபத்தையும் அதிகப்படுத்தி உள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, ஒருவரை மக்கள் பிரதிநிதியாக மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்தும், அவர்களின் தங்களின் சுயநலமான பதவி ஆசைக்காக, எளிதாக எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு கட்சியில் சென்று இணைந்துள்ளனர். இதனால் இவர்களுக்கா ஓட்டளித்தோம் என மக்கள் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.


"இவர்கள் இஷ்டத்திற்கு பதவியை ராஜினாமா செய்வதற்கு எதற்கு தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்படியானால் இவ்வளவு செலவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தேர்தல் நடத்திய தேர்தல் கமிஷனும், இவர்கள் நல்லது செய்வார்கள் என நம்பி ஓட்டளித்த மக்களும் என்ன முட்டாள்களா? இப்போது இடைத்தேர்தல் நடத்தினால் அதற்கும் மக்களின் வரி பணத்தை தானே செலவிட வேண்டும்?" என கேள்வி எழுப்பி உள்ளனர். இன்னும் சிலர், "இந்த இடைத்தேர்தல் நடத்துவதற்கு ஆகும் செலவை பதவியை ராஜினாமா செய்த நபர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்" என கோபத்துடன் கூறி உள்ளனர். இப்படி அனைவரும் வரிசையாக ராஜினாமா செய்வதற்கு எதற்காக எதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டும்? இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோபமாக கருத்து பதிவிட்டுள்ளனர்.