ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
சென்னை : ஏற்கனவே 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போன நிலையில், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திற்கும் இதே நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்து விட்டது. இதனால் திட்டமிட்டபடி படம் நாளை திரைக்கு வருகிறது. ஜனநாயகன் இழுபறி தொடர்வதால் நாளை அதிக அளவிலான தியேட்டர்களில் பராசக்தி திரையிடப்படும் வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளன.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 09ம் தேதியான இன்று ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் பாதுகாப்பு துறை சின்னங்களை சில காட்சிகளில் பயன்படுத்தியதாக சொல்லி அந்த படத்திற்கு சென்சார் சான்று வழங்க, சென்சார் போர்டு மறுத்துள்ளது. இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்த சில நிமிடங்களிலேயே அதை எதிர்த்து, தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்வதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தங்களின் மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், நீங்கள் மேல்முறையீட்டு மனுவாக தாக்கல் செய்யுங்கள். எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம் என தலைமை நீதிபதி கூறி உள்ளார். இதனால் ஜனநாயகன் படத்தின் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும், அதில் சாதகமான தீர்ப்பு கிடைத்து எப்போது படம் ரிலீசாகும் என்று உறுதியாக தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு மட்டுமல்ல ஜனவரி 10ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் இதுவரை சென்சார் சான்று கிடைக்காமல் இருந்தது.
'பராசக்தி' படத்தை ஜனவரி 7 அன்று சென்னையில் பார்த்த சென்சார் போர்டு, படத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்கள் வருவதாகக் கூறி 23 காட்சிகளை நீக்கச் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்கரா மும்பையில் உள்ள ரிவைசிங் கமிட்டியை அணுகினார். அங்கு தேவையான மாற்றங்களை பராசக்தி படக் குழு செய்ததைத் தொடர்ந்து தற்போது யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை வாரியம்.இதனால், 'பராசக்தி' படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.
இன்றைக்குள் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காவிட்டால், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த பிரச்சினையிலிருந்து பராசக்தி தப்பியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இரண்டு பெரிய படங்கள் தள்ளிப்போகும் அபாயமும் முதல் முறையாக ஏற்பட்டிருக்கும். இருப்பினும் ஜனநாயகன் மட்டும் தொடர்ந்து சிக்கலில் உள்ளது.
பராச்தி படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.