செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்

Su.tha Arivalagan
Nov 27, 2025,02:01 PM IST
சென்னை : செங்கோட்டையன் தவெக.,வில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் அதிமுக.,விலேயே இல்லை. அதனால் அவரை பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை என பதிலளித்துள்ளார்.

அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ.,பதவியை ராஜினாமா செய்தார். பிறகு தவெக தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் சென்று, விஜய் முன்னிலையில் தவெக.,வில் இணைந்தார் செங்கோட்டையன். பிறகு தவெக நிர்வாகிகளுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், நான் என்ற எண்ணத்தில் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மறைமுக தாக்கி பேசினார்.



செங்கோட்டையன் தவெக.,வில் இணைந்தது பற்றியும், அவர் கூறிய கருத்துக்கள் பற்றியும் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் இப்போது அதிமுக.,விலேயே இல்லை. அதனால் அவரை பற்றி பதில் சொல்ல ஒன்றும் இல்லை. ஜனநாயக நாட்டில் நாட்டை ஆளுவதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. ஏன் நான் ஆளக் கூடாதா? என பதிலளித்தார்.

செங்கோட்டையன் தவெக,வில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், யார் இருந்தாலும், இல்லா விட்டாலும் அதிமுக.,விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிமுக.,விற்கு என்று தனியாக வாக்கு வங்கி உள்ளது என்றார்.