கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!

Su.tha Arivalagan
Sep 30, 2025,07:12 PM IST
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று வீடியோவுடன் கூடிய ஒரு விளக்கத்தை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அரசின் செய்தித் தொடர்பாளரான அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வீடியோவுடன் கூடிய விளக்கத்தை அளித்தனர்.

இந்த விளக்கத்தின்போது தெரிவிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு:

- தவெகவினர் முதலில் கேட்ட இடம் அமராவதி ஆற்றுப் பாலம் அருகே நீர்வழித்தடம் உள்ளது. அதேபோல பெட்ரோல் பங்க்கும் உள்ளது. இதனால் அது ஒதுக்கப்படவில்லை. 

- தவெகவினர் இரண்டாவதாக கேட்ட இடம் உழவர் சந்தை பகுதி. இது மிகவும் குறுகிய இடம். 5,000 பேர் மட்டுமே அந்த இடத்தில் கூட முடியும். இதனால் அதுவும் மறுக்கப்பட்டது.

- அவர்களே கேட்ட இடங்களில் ஒன்றுதான் வேலுசாமிபுரம். அதை ஒதுக்குவதாக கூறியதும் அதை ஏற்றுக் கொள்வதாக தவெக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தனர்.



-  கூட்டத்துக்கு 10,000 பேர் வருவார்கள் என த.வெ.க. தரப்பில் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த கூட்டங்களின் அடிப்படையில் 20,000 பேர் வரை வரலாம் என காவல்துறை கணித்தது. அதற்கேற்ப பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது.

- வழக்கமாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பது பொதுக் கூட்டங்களுக்கு கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. ஆனால் இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

- கரூரில் கூட்ட இடத்தில் ஏற்கனவே பெருமளவில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அத்தோடு விஜய்யின் வாகனத்தோடு  சேர்ந்து மேலும் பல நூறு பேர் வந்ததால் கூட்டம் அதிகரித்தது. 

- மாலை 5. 30 மணி வரையிலும் கூட்டம் கட்டுப்படுத்தும் அளவில்தான் இருந்தது. அதற்குப் பின்னர்தான் கிடுகிடுவென அதிகரித்தது.

- ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையை அடைந்தது. விஜய்யின் வாகனமே உள்ளே செல்ல முடியாத நிலை. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் போக வேண்டாம், விபரீதமாகி விடும் என டிஎஸ்பி எச்சரித்துள்ளார். ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட இடம் வரை போக வேண்டும் என்று நிர்வாகிகள் கூறியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போய் விட்டது.

- மின்சாரத்தை நாங்கள் தடை செய்யவில்லை. தடையில்லா மின்சாரமே வழங்கப்பட்டது.  விஜய்யைப் பார்ப்பதற்காக மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பங்களில் தொண்டர்கள் ஏறினர். மரங்களில் ஏறினர். இதனால் சற்று நேரம் தடைபட்ட மின்சாரம் அவர்களை இறக்கி விட்ட பின்னர் மீண்டும் கொடுக்கப்பட்டது.

- மின்சார ஜெனரேட்டரை நாங்கள் துண்டிக்கவில்லை. மாறாக தவெகவினர்தான் அந்தப் பகுதியில் பெருமளவில் திரண்டதால் துண்டித்துள்ளனர்.

- அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் வரக் காரணம், அழைப்பு வந்ததால்தான். தவெக தரப்பில் 5 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் வாகனத்துடன் மேலும் 2 ஆம்புலன்ஸ்கள் வந்திருந்தன. அடுத்தடுத்து பலர் மயங்கி விழு்த காரணத்தால்தான் ஆ்ம்புலன்ஸ்கள் தொடர்ந்து அழைக்கப்பட்டன. மொத்தம் 33 ஆம்புலன்ஸ்கள் வரழைக்கப்பட்டன. 

- இரவில் பிரேதப் பரிசோதனை செய்ததில் எந்த விதி மீறலும் இல்லை. ஆட்சியர் அனுமதியுடன் இரவிலும் கூட பிரேதப் பரிசோதனை செய்ய முடியும். அந்த அடிப்படையில்தான் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

- கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான, தவறான பொய்யான செய்திகளைப் பரப்பக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

- விஜய் பேசக் கேட்டிருந்த நேரம் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை. அதை நாங்கள் கொடுத்திருந்தோம். அந்த நேரத்திற்குள் அவர் கரூர் வந்து விட்டதால் அவர்  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் விஜய் வரும் வரை கூட்டம் கட்டுக்குள்தான் இருந்தது. அதன் பின்னர்தான் அதிகரித்து விட்டது.