பாலைவனத்தில் பூத்த நந்தவனம்!

Su.tha Arivalagan
Jun 02, 2026,10:25 AM IST

- ஆனந்தி சத்தியராஜ்


அரபு நாட்டில் ஒரு முழம் மல்லிகைப் பூவின் விலை நம் இந்தியப் பணமதிப்பிற்குச் சுமார் 300 - 400 ரூபாய்க்குள் இருக்கும். சில தினங்களில் விலை கூடவும் செய்யும். ஆக, இங்கு பூ வாங்குவது விலை உயர்ந்த ஒரு பொருளை வாங்குவதற்குச் சமம். அதனாலேயே, பண்டிகை நாட்களுக்கு மட்டும் தேவையான அளவிற்கு வாங்கி மகிழ்வோம். ஆசைப்பட்டாலும் மற்ற தினங்களில் வாங்க சற்று தயங்குவோம்.


ஆனால், என் ஊரில் வீட்டைச் சுற்றி நித்திய மல்லி, ஜாதி மல்லி, குண்டு மல்லி என எப்போதும் பூக்கள் தாராளமாகப் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து நுகர்ந்து பழகியவள் நான்.


 மண்ணைத் தொட்டு வளர்த்த பாசமும், மனதை அள்ளிய நறுமணமும் இந்த அந்நிய தேசத்திலும் நிழலாய் என்னுள் தொடர்கிறது! கான்கிரீட் சுவர்களுக்கு நடுவே நாம் எவ்வளவு தூரம் ஓடினாலும், நம் வேர்கள் என்றும் தேடி அலைவது அந்த கிராமத்து நந்தவனத்து பசுமையைத்தானே!


செம்மண் தரையில், அதிகாலைப் பனித்துளியைச் சுமந்து நிற்கும் பச்சை இலைகள்... கிணற்றடி ஓரத்திலும், வேலியோரத்திலும் வாரி இறைத்த அழகோடு பூத்திருக்கும் மலர்கள்... அந்தி சாயும் வேளையில், அடுக்கடுக்காய் மலர்ந்து முற்றம் முழுவதையும் வாசம் நனையச் செய்யும் மல்லிகைச் செடிகள்... மல்லிகையோடு போட்டி போட்டுக் கொண்டு மாலை வெயிலில் சுடர்விடும் தங்க நிறக் கனகாம்பரம்... காலம் கடந்தாலும் தன் நிறமும் அழகும் மாறாமல் என்றும் இளமையோடு சிரிக்கும் வாடாமல்லி...




தோட்டத்து வாசலில் செந்நிறப் புன்னகையோடு நம்மை வரவேற்கும் கம்பீரமான செம்பருத்தி... முட்களுக்கு நடுவிலும் மென்மையின் இலக்கணமாய் பன்னீரின் நறுமணத்தோடு இதழ் விரித்து நிற்கும் பன்னீர் ரோஜாப்பூக்கள்... தொட்டாலே கைகளில் நறுமணத்தை ஒட்டிக்கொண்டு, மனதை மயக்கும் பச்சை நிற மரிக்கொழுந்து... இரவு நேரத்துத் தென்றலோடு சேர்ந்து சொக்கவைக்கும் தெய்வீக வாசம் வீசும் சம்பங்கி... குளிர்காலக் காலையிலேயே ஊதா, இளம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என பல வண்ணப் போர்வை போல கொள்ளை அழகுடன் பூத்து குலுங்கும் டிசம்பர் பூக்கள்... என்று பூக்களின் பெயர்களை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்....


பாட்டி, பெரியம்மா, சித்தி, பக்கத்து வீட்டு அக்கா, அத்தை, மாமி என யார் வேண்டுமானாலும் பறித்து தொடுப்பார்கள்.  அம்மாவின் கைகளால் இவை அனைத்தும் ஒன்றாகத் தொடுக்கப்பட்டு, என் இரட்டை ஜடைக்கு பாலம் கட்டினது போல மல்லி கனகாம்பரம் பூ, தலையில் நட்டு வைத்தது போல ஒற்றை ரோஜா எட்டி பார்க்கும்.


பல வண்ணங்களும், நறுமணங்களும் என்னுள் பேழையாய் நிறைந்திருக்கும் அந்தப் பொன்னான நாட்களின் இனிய நினைவுகளோடு ஒருநாள் என் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் உலாத்திக்கொண்டிருந்தேன். அப்போது என் மனதின் ஆழத்திலிருந்து, முருகா...  இங்கே ஒரு மல்லிகைத் தோட்டம் இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும். "உனக்கு ஒரு அழகான மல்லிகை மாலையும், எனக்கு ஆசையாய் ஒரு சரமும் நினைக்கும் போதெல்லாம் தொடுத்துக் கொள்வேன்" என்று ஒரு மெல்லிய ஈர்ப்பியல் விதியை (Law of Attraction) பிரபஞ்சத்திடம் கோரிக்கையாகப் பதிவிட்டேன்.


ஆச்சரியம் என்னவென்றால், சில வருடத்திற்குப் பிறகு, இதோ இப்போது நான் இருக்கும் இதே இடத்திலேயே, நான் ஆசைப்பட்ட மல்லிகைப் பூக்கள் நம் ஊர்த் தோட்டத்தைப் போலக் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்குகின்றன! நாம் எதை ஆழமாக விரும்பி பிரபஞ்சத்திடம் கேட்கிறோமோ, அதை அந்தப் பேரண்டமும் நமக்குத் திருப்பித் தரும் (Manifestation) என்று  உணர்கிறேன். 


நான் கேட்டது என்னமோ வெறும் ஒரு மல்லிகை தோட்டம், ஆனால் இங்கு அமைந்திருப்பதோ ஏராளம். 

வெண்பனித் துளிகளாய் நறுமணம் வீசும் குண்டு மல்லி, விண்மீன்கள் மண்ணில் உதிர்ந்தது போன்ற நட்சத்திர மல்லி, எட்டா உயரத்தில் அமர்ந்து, முடிஞ்சா என்ன பறிச்சிக்கோ! என்ற கர்வத்துடன்  எல்லையில்லா வாசம் வீசும் நித்திய மல்லி, பவள நிறக் காம்புகளோடு மையல் கொள்ள வைக்கும் பவழ மல்லி, வாடினாலும் வாசம் குறையாத தெய்வீக மகிழம்பூ, தூய வெண்ணிற ஆடையுடுத்திப் புன்னகைக்கும் நந்தியாவட்டை, பச்சை இலைகளுக்கு நடுவே அரசாங்க உடை உடுத்தியது போல் கம்பீரமாய் பூத்திருக்கும் செவ்வரளி, அத்தோடு கதிரவனின் கிரணங்களை அப்படியே அள்ளிப் பூசியது போலத் தங்க நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் சாமந்திப் பூ எனப் பல வகையான பூக்கள் இங்கே அரபு நாட்டுத் தோட்டத்திலும் அணிவகுத்து நிற்கின்றன!


பூக்களின் நறுமணத்தில் என் ஊரின் ஞாபகங்கள் சிறகடிக்கின்றன. காற்று வீசும் போதெல்லாம், இதோ நீ கேட்டது உனக்காக என்று பிரபஞ்சம் சொல்வது போல தோன்றும்" அன்று மனதில் விதைத்த ஒரு சிறிய ஆசை, இன்று கண்முன்னே மலர்ந்து நிற்பது எல்லையற்ற மகிழ்ச்சி தான். 


அதோடு பூக்களை பறித்து தொடுத்து  என்பது வெறும் வேலையல்ல; அது ஒரு மிகச்சிறந்த தியானம்! ஓடும் இந்த இயந்திர வாழ்க்கையில், மாலையில் சற்று அமைதியாக அமர்ந்து இந்த மலர்களைக் கையில் எடுத்து, மென்மையாக நூலில் தொடுக்கும்போது மனதிற்குள் அப்படியொரு பேரமைதியும், நிம்மதியும் கிடைக்கிறது. சில நாட்களின் பாரத்தினால் ஏற்படும் கடுமையான தலைவலி கூட, இந்த மலர்களின் தூய நறுமணத்தை ஆழமாக நுகர்ந்து கொண்டே பூ தொடுக்கும்போது, மாயமாய் மறைந்துவிடுகிறது! இயற்கையின் ஆகச்சிறந்த மருத்துவமும், மன அமைதிக்கான தியானமும் இந்த பூக்களில்தான் ஒளிந்திருக்கிறது போலும்!




பல நேரங்களில் இந்த அந்நிய தேசத்தில் வீசும் காற்று, நம் வீட்டின் பாசப் பிணைப்புகளை நினைவூட்டி ஏங்க வைத்துவிடும். ஆனால், இந்த மலர்களின் மத்தியில் நிற்கும்போது, என் மண்ணை தழுவிக் கொண்டது போல் ஒரு பேரமைதி மனதை நிறைக்கிறது. 


மனதார நாம் ஆசைப்பட்டு அதை முழுதாக நம்பினால், முடியாததும் சாத்தியமாகும்! சுட்டெரிக்கும் வெயிலிலும் சுகமான பேரன்பின் நறுமணம் தருவது மலர்கள்! இயலாது என்று நினைத்த பாலைவனத்தில் கூட, ஆழ்ந்த ஈர்ப்பு விதியும், இறைவன் அருளும், பிரபஞ்சத்தின் ஆசியும் இருந்தால் ஒரு நந்தவனம் பூக்கும்!


எண்ணம் போல்தான் வாழ்க்கை என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?