அன்பின் மொழி
- ச. ராஜேஸ்வரி
அலாரம் அடித்தது. ரஞ்சனிக்கு ஏனோ அன்று படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே மனம் இல்லை. "இன்னும் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் தூங்கலாமே..." என்று தோன்றிய சுகமான எண்ணத்தைத் தடுத்து நிறுத்தியது அவளது கடமையுணர்வு.
இன்று திங்கட்கிழமை! அதுமட்டுமன்றி, கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டிற்காகப் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாள். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அலைமோதும் என்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, மொபைலை சார்ஜில் போட்டுவிட்டுக் கடமைகளை ஆற்ற விரைந்தாள்.
வீட்டில் அடுத்தடுத்து போர்க்களக் காட்சிகள் அரங்கேறின. குழந்தைகளை எழுப்பி, பள்ளிக்குத் தயார் செய்து, கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் மதிய உணவுப் பெட்டிகளை (Lunch Box) பேக் செய்து முடித்தபோது கடிகாரம் காலை 7:45 மணியைக் காட்டியது. பரபரப்பு தொற்றிக்கொள்ள, ரஞ்சனி அவசரமாக வெளியே வந்தாள். கடந்த இரண்டு நாட்களாக எடுக்காமல் இருந்ததால், அவளது ஸ்கூட்டி வண்டி சட்டென்று ஸ்டார்ட் ஆக மறுத்து அடம் பிடித்தது. ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக வண்டி ஸ்டார்ட் ஆக, குரோம்பேட்டை ரயில் நிலையம் நோக்கிப் பறந்தாள்.
ரயில் நிலையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, செங்கல்பட்டு செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்தாள். ரயில் வந்ததும், அலைமோதிய கூட்ட நெரிசலில், பெண்கள் பெட்டிக்குள் நசுங்கிப் பிதுங்கி ஒருவழியாக உள்ளே நுழைந்தாள். கூடுவாஞ்சேரியில் இறங்கி, அங்கிருந்து மீண்டும் ஒரு பேருந்தைப் பிடித்துப் பள்ளிக்கு வந்து சேர்ந்தபோது, ஒன்றரை மணி நேரப் பயணக் களைப்பு அவளை ஆட்கொண்டிருந்தது.
பள்ளி வளாகத்திற்குள் ரஞ்சனி நுழைந்தபோது, "குட் மார்னிங் மிஸ்!" என்றொரு மழலைக் குரல் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
அங்கே நின்றிருந்தான் அன்பு. ஆறாம் வகுப்பு படிக்கும், பெயருக்கேற்றபடியே பேரன்பு கொண்ட மாணவன் அவன்.
"மிஸ், நான் உங்க பைய தூக்கிட்டு வரட்டுமா?" என்று பாசத்தோடு கேட்டான்.
"வேண்டாம்பா, நானே கொண்டு வர்றேன், வா போகலாம்" என்று புன்னகையுடன் கூறியபடி, அவனுடன் நடக்கத் தொடங்கினாள். "முழு ஆண்டு விடுமுறைக்கு எங்கே சென்றாய்? எவ்வாறு கழித்தாய் அன்பு?" என்று ரஞ்சனி அவனிடம் விசாரித்தாள்.
"நான் எங்கேயும் போகல மிஸ்... வழக்கம் போல வீட்டிலேயேதான் இருந்தேன்" என்று சற்று கவலையோடு கூறினான் அன்பு. உடனே, "நீங்க எங்க போனீங்க மிஸ்?" என்று அவன் திருப்பிக் கேட்க, "நானும் எங்கும் செல்லவில்லை, வீட்டில்தான் இருந்தேன்" என்றாள் ரஞ்சனி.
"அப்போ நீங்க எங்க வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்ல மிஸ்?" என்று அவன் ரஞ்சனியின் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்ட அக்கறையில், ஆசிரியையின் ஒட்டுமொத்தப் பயணக் களைப்பும் பறந்தோடியது. இப்படியாக அவளிடம் அடுக்கடுக்காய் அன்பான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, அலுவலக அறை வரை ரஞ்சனியுடன் கூடவே வந்தான் அன்பு.
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, ஆசிரியர்கள் ஓய்வறைக்குச் சென்று, சக ஆசிரியர்களிடம் ரிசல்ட் மற்றும் தேர்வுகள் குறித்த உரையாடி பின்னர் கோடை விடுமுறையில் மகிழ்ச்சியான தருணங்களை சக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்ட ரஞ்சனி காலை வழிபாட்டு கூட்டத்திற்கு தயாரானாள். அரை மணி நேர வழிபாட்டுக் கூட்டத்திற்கு பிறகு அன்று நடத்த வேண்டிய பாடப்புத்தகங்களை எடுத்துக் கொண்டு ரஞ்சனி தனது வகுப்பறையை நோக்கி நடந்தாள். காலையிலிருந்தே அவளுக்குத் தொண்டை கரகரப்பாக இருந்தது. தும்மலும் தலைவலியும் சேர்ந்து, சளி (Cold) சற்று அதிகமாக இருப்பதை உணர்ந்தாள்.
வகுப்பறைக்குள் நுழைந்ததும், "மாணவர்களே... இன்று நாம் பாடம் எதுவும் படிக்கப் போவதில்லை. இன்று நீங்கள் உங்கள் கோடை விடுமுறையை எப்படி கழித்தீர்கள் என்று ஜாலியாகப் பேசலாமா?" என்றாள்.
மாணவர்கள் அனைவரும் உற்சாகமாகக் கத்தினர். ரஞ்சனி மாணவர்களிடம் பேசத் தொடங்கியபோது, அவளுக்குத் தொடர்ச்சியாகத் தும்மல் வர ஆரம்பித்தது. தொண்டை வலியால் பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டாள்.
இதை உற்று நோக்கிக் கொண்டிருந்த அன்பு, மெதுவாக ரஞ்சனியிடம் வந்து, "மிஸ், நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரட்டுமா?" என்று அனுமதி கேட்டான். அவளும் சரி என்று அனுப்பி வைத்தாள். ஆனால், ஐந்து நிமிடங்கள் ஆகியும் அன்பு வகுப்பறைக்குத் திரும்பவில்லை. "அன்பு எங்கே போனான்?" என்று ரஞ்சனி தேட முற்பட்டபோது, அவன் வகுப்பறைக்குள் நுழைந்தான். அவனது கைகளில் சில இலைகள் இருந்தன.
"மிஸ்... இது நொச்சி இலை. இந்த இலையை நல்லா கொதிக்கிற வெந்நீர்ல போட்டு ஆவி பிடிச்சீங்கன்னா, உங்களுக்கு இருக்கிற சளி, தும்மல், தலைவலி எல்லாம் ஓடிப் போயிடும். எனக்கு உடம்பு சரியில்லைன்னா எங்க அம்மா எனக்கு இதான் பண்ணித் தருவாங்க" என்று கூறி, மிகுந்த அன்போடு அந்த நொச்சி இலைகளை ரஞ்சனியின் கைகளில் கொடுத்தான்.
அவ்வளவுதான்! ரஞ்சனியின் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்த்தது. காலையிலிருந்து பரபரப்பான சூழலில், தனக்கு உடம்பு சரியில்லை என்பதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூட நேரமில்லாமல் ஓடி வந்த அவளுக்கு, தன் உடல்நிலையைக் கவனித்து, தனக்காக ஓடிப் போய் இலைகளைப் பறித்து வந்த அந்தச் சிறியவனின் அன்பு அவளை அப்படியே உருகச் செய்தது. அந்த நொச்சி இலைகளைக் கைகளில் வாங்கிக் கொண்டு, அவனைக் கட்டியணைத்துத் தன் தாய் பாசத்தை வெளிப்படுத்தினாள். ஒரு தாயின் அன்பிற்கு நிகரான அந்த மாணவனின் செயல், ரஞ்சனியை நெகிழ வைத்தது.
அடுத்த பாடவேளைக்கான மணி அடித்ததும், நெகிழ்ச்சி மாறாமல் ஆசிரியர்கள் ஓய்வறைக்குத் திரும்பினாள் ரஞ்சனி. மாணவனின் அந்தப் பேரன்பை நினைத்து வியந்து போனாள். "நாம் மாணவர்களிடம் எவ்வாறு அன்பாக இருக்கிறோமோ, அதே அன்பு பன்மடங்காக நமக்கே திரும்பக் கிடைக்கும்" என்பதை அன்றைய தினம் அன்பின் மூலமாக அன்பே பிரதானம்! நாம் பிறருக்குக் கொடுக்கும் தூய்மையான அன்பும் அக்கறையும், ஏதோ ஒரு வடிவில், தகுந்த நேரத்தில் நம்மிடமே பன்மடங்காகத் திரும்பி வரும். குறிப்பாக, ஆசிரியர்கள் மாணவர்களிடம் காட்டும் பாசம், அவர்களின் மனதில் ஆழப் பதிந்து, பேரன்பாக உருவெடுக்கும் என்பதை ரஞ்சனி ஆழமாக உணர்ந்து கொண்டாள்.
(ச. ராஜேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்), நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் ராயப்பேட்டை,