சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!
சென்னை: கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டதுஎன்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி, வெட்டி படுகொலை செய்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் வாழும் பகுதியிலேயே ஓர் இளைஞர் ஓட , ஓட விரட்டி படுகொலை செய்யப் படுகிறார் என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.
பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான தாமரைச் செல்வன் இன்று காலை இரு சக்கர ஊர்தியில் வந்து கொண்டிருந்த போது, வேறு சில இரு சக்கர ஊர்திகளில் வந்த இளமாறன் என்பவர் உள்ளிட்ட 5 பேர் தங்களின் வாகனத்தை தாமரைச் செல்வனின் வாகனம் மீது மோதி கீழே தள்ளியுள்ளனர். அங்கேயே அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற போது, காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தால் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், கொலைகார கும்பல் எந்த அச்சமும் இல்லாமல் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து தாமரைச் செல்வனை கொலை செய்திருக்கிறது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த போதே இந்த படுகொலை நடந்துள்ளது.
திமுக ஆட்சியில் கொலை செய்யக் கூடாத இடங்கள் என்று எதுவுமே இல்லை எனக் கூறும் அளவுக்கு எல்லா இடங்களிலும் கொலைகள் செய்யப்படுகின்றன. நெல்லை நீதிமன்ற வளாகத்தில் படுகொலை, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை படுகொலை, சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு அரிவாள் வெட்டு என திரும்பும் திசையெங்கும் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 7,000க்கும் கூடுதலான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, இந்த வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாக பெருமை பேசிக் கொள்கிறது. பாவங்களை செய்யக் கூடாது என்று கூறினால், பாவங்களை செய்தால் என்ன, அது தான் பரிகாரம் செய்து விட்டோமே? என்று கேட்பதைப் போலத் தான் திமுகவின் விளக்கம் அமைந்துள்ளது.
கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது. அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டு, கொலை, கொள்ளைகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதன் மூலம் தமிழகத்தில் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.