சாய்ஸ்ரீயின் கேக்கு.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
அன்று தமிழ் பயிற்சிப் புத்தகத்தில் பிடித்ததை வரைவேன் அதைப் பற்றி எழுதுவேன் பகுதியை மாணவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள்.
பட்டம், வண்ணத்துப்பூச்சி, முயல்,சரக்குந்து,வானவில்,மிதிவண்டி,மீன்,மாதுளை என வரைந்து அதைப் பற்றி எழுதி என்னிடம் கொண்டு வந்தார்கள்.
சாய்ஸ்ரீ மட்டும் கேக் வரைந்திருந்தாள். எனக்கு கேக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இன்னும் சில வரிகள் கேக்கு கேக்கு என்று எழுதியிருந்தாள்.
நான் அவளிடம் கேக்கு னு எழுதக் கூடாதுமா என்று கூறினேன்.
உடனே அவளுடன் வந்த அவள் தோழிகளில் சிலர் நாங்க சொன்னோம் மிஸ். அவள் கேக்கு தான் கரெக்ட் என்று சொல்லிவிட்டாள் என்றனர்.
உடனே டீச்சர் கேக்குக்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்டாள் வசுமிதா. நீங்களே கண்டுபிடிங்க என்று சொல்லி விட்டேன்.
ஏய் தர்னுக்குத் தெரியும்டி என்று தர்ஷா தர்ஷா என்று ஓடினார்கள். அவனும் தெரியலை என்று சொல்லிவிட்டான்.
கம்ப்யூட்டர் மிஸ்ஸைக் கேட்டுட்டு வர்றோம் என்று ஒரு சிலர் ஓடினார்கள்.... கண்டறிந்தும் வந்தார்கள்...
ஒருவழியாக கேக்கின் தமிழ்ப் பெயரைக் கண்டுபிடித்து விட்டார்கள் என் செல்லங்கள்....
அணிச்சல்
அணிச்சல்* என்பது தான் கேக்கின் தமிழ் பெயர்!
நன்றி விக்கிப்பீடியா!
அட்டகாசம் தொடரும்...
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).