அன்னை தடாதகை 7

Su.tha Arivalagan
Jun 26, 2026,04:09 PM IST

- நவீன் ஸ்ரீதர்.வி


கடந்த தொடரில் பாண்டிய இளவரசியாம் தடாதகை அவதரித்து, அகத்தியரிடம் கல்வி பயின்றதைப் பற்றிப்  பார்த்தோம். 


அவ்வாறு அனைத்து ஞானத்துக்கும் தானே தலைவியாய் திகழ்பவள், ராஜராஜேஸ்வரியான தானே சகல கலைகளுக்கும் வித்யைகளுக்கும் ஞானங்களுக்கும் அதிபதியான ராஜமாதங்கியாகவும் திகழும் அவளே மானிட வடிவம் பூண்டு பூலோக விதிகளின் பொருட்டும், அகத்தியருக்கு தான் தரும் தன்னிகரில்லா வரத்தின் பொருட்டும் ஏதும் அறியாதவளை போல் பாசாங்கு செய்து குருகுல கல்வி பயில்கின்றாள். 


அனைத்துமானவளும் அவளே! அகத்தியருக்கு அருள் செய்த ஆதிபராசக்தியும் அவளே! எனினும் பணிவுடன் விதிமுறைகளின் படி அனைத்தையும் செய்கிறாள் அந்த அகிலாண்டேஸ்வரி.. இதன்மூலம் நம் ஆணவ மலத்தை அகற்றுகிறாள் அன்னை மீனாட்சி.. தொடர்ந்து போர் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றவள், காலனும் கண்டு அஞ்சும் வீர மங்கையாய் திகழ்ந்தாள். 


தடாதகைக்கு பன்னிரண்டு வயதாகும் போது அவளது தந்தையான பாண்டிய மன்னன் மலையத்துவசன் சற்றே உடல்நலம் குன்றி போகிறார்.. தன் காலம் முடியவுள்ளதை உணர்ந்த மன்னர், தன் வாரிசான தடாதகைக்கு பட்டம் சூட்ட முடிவெடுக்கிறார். பன்னிரண்டு வயதே நிரம்பிய பெண்ணுக்கு பட்டாபிஷேகமா? ஆம்! "அண்டம் அனைத்தையும் ஈன்றவள் ஆயினும் கன்னி எனப் பெயர் கொண்டவளே"என்று மாமறையோர் போற்றுகின்ற வேத முதல்விக்கு வயது ஒரு பொருட்டா என்ன?! அதுவரை உலகம் கண்டிராத ஒரு சம்பவம்! இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் அன்றே வித்திட்ட ஒரு மாபெரும் மாற்றம்! 




ஆம் உலகின் முதல் பெண் அரசி ஆகிறாள் தடாதகை! அதுவும் தன் பன்னிரண்டாவது அகவையில்.. சிறு பிராயம் முதலே தன் மக்களை அரவணைத்து மகிழ்ந்த தடாதகை தங்கள் அரசி ஆகிறாள் என்று தெரிந்ததும் மதுரை விழாக்கோலம் பூண்டது. மக்கள் யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவளின் ராஜ கம்பீரத்தை காண விண்ணும் மண்ணும் ஏங்கியது. அந்த நாளும் வந்தது. பட்டு வஸ்திரமும் பாண்டிய குல ஆபரணங்களும் அணிந்து வந்தாள் அந்த வேல்விழியாள்! 


பாண்டிய குல சிம்மாசனத்தில் அமர்ந்தாள். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பாண்டியர்களுக்கே உரித்தான உச்சிக்கொண்டைக்  கிரீடத்தை தன் அன்பு மகளுக்கு சூட்டி அழகு பார்த்தார் தந்தையான பாண்டிய மன்னன் மலையத்துவசன். கம்பீரமாக நவரத்தினங்கள் பதித்த செங்கோலை கையில் ஏந்தி பாண்டிய பேரரசியாக முடிதரித்தாள் தடாதகை! பாண்டியர்களின் குல மாலையான வேப்பம்பூ மாலையை அணிந்தாள்! கசக்கும் வேம்பின் பூ அன்று அமிர்தத்தை விடவும் மேலான ஒன்றாய் திகழ்ந்தது!என்னே கம்பீரம்! இதுவரை பிரபஞ்சம் காணத தரிசனம்! தேவலோகமும் மதுரையை கண்டு பொறாமை கொண்டது! ".... 


தடாதகை நாச்சியார் பராக்! பராக்! பராக்!!!" என்ற கோஷம் அன்று விண்ணை முட்டி தேவந்திரனின் சிம்மாசனமும் அதிர்ந்தது. மீன் போல் விழி மூடாது மாந்தர்களை காக்கும் பேரரசி இவள் ஒருவளே அன்றோ? அதுவரை குமரி கண்டத்தின் தென்மதுரை, கபாடபுரம் என தன் அனைத்து சொத்துக்களையும் இழந்த உலகின் மூத்த குடியான பாண்டியர்குலம் அன்று இனி தன்னை யாரும் அசைக்க முடியாது என்று கர்வம் கொண்டது! ஆம்! இன்றுவரை ஆண்டுதோறும் அந்த திருக்காட்சியை தடாதகை மகுடம் தரிக்கும் அந்த அருட்காட்சியை மன்னராட்சி ஒழிந்த இந்த காலத்திலும் நாம் காண்கிறோமே! கொண்டாடுகிறோமே! 


உலகில் இதுவரை இந்த சிறப்பு வேறு எந்த நாட்டுக்காவது கிடைத்துள்ளதா? இல்லை இதுபோன்ற ஒரு பேரரசி தான் இனி கிடைப்பாளா?! ஏன் வேறு ஒருவர் வேண்டும்? அவளே நித்தியமாய் நம்முடன் இன்றும் இருக்கிறாளே! அவள் அரசியான அழகை கண்டு அனைத்துக்கும் மேலாய் இருக்கும் ஆகாயம் கூட தன் ஆணவத்தை மறந்து நாம் மண்ணாய் கீழே அந்த மாதரசியின் மலரடிகளை வருட கூடாதா என்று ஏங்கியும், இருப்பினும் அவளை நித்தம் காணலாமே என்ற ஆனந்தத்திலும் தன் கண்ணீரை, பன்னீரை விடவும் மணம் மிக்க வான்மழையாப்  பொழிந்தது. காற்றோ பூலோகம் முழுவதும் பரவிச் சென்று நறுமண மலர் வாசங்களை சுமந்து அவள் மலரடிக்கு பரிசு தந்தது. 




நீரோ அவள் மேனி தொடவும், அவளை குளிர்விக்கும் வரத்தைப் பெற்றதை நினைத்து உருகியது..மண்ணோ தன்னை ஆளவிருக்கும் ஆதிபராசக்தி யின் பாதத்தை சுமந்து பாக்கியம் பெற்றது. நெருப்போ அவள் முன் வேள்வி தீயாகவும் அவளுக்கு ஆரத்தி செய்யும் தீப ஜோதியாகவும் ஒளிர்ந்தது, ஆனால் அவளின் கண் அழகோ அத்தீயை கூட கூசியது. தனக்கும் மேலான ஒரு ஒளியை உமிழும் கண்கள் முன்  கூனி ஒளிர்ந்தது நெருப்பு. தீயின் ஒளிக்கும் சூட்டுக்கும் ஆதர சக்தியான ஆதிசக்தி தானே தடாதகை!


இப்பேர்பட்ட பேரரசி பாண்டிய நாட்டுக்கு மட்டும் கிடைத்துள்ளாளே! எனில் நாமெல்லாம் செய்த புண்ணியம் என்னவோ? எப்போது தடாதகை நம்மிலும் தடம் பதிப்பாளோ என்று பிற நாடுகள் அனைத்தும் ஏங்கியது. அண்டத்துக்கே அன்னையானவளாயிற்றே! எனவே அந்த குறையையும் களைய அவள் முடிவெடுத்தாள்! பாண்டிய நாட்டின் புரட்சி பார் முழுவதும் நீடிக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லாதிருந்தது..என்ன மாற்றம் அது?


அடுத்த தொடரில் சிந்திப்போம் சிறப்பாக...


மீனாக்ஷீம் !!!